சென்னை, மார்ச் 2- பிரதமர் மோடி இல்லை. அவருடைய தாத்தாவே வந்தாலும் தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ‘மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருவிழா’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தயாநிதிமாறன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கட்சி மூத்த முன்னோடிகள் 520 பேருக்கு பொற்கிழியும், 500 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகையும், கட்சி மகளிர் 72 பேருக்கு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
454 கோடி முறை மகளிர் பேருந்து பயணம்
இன்னும் 4 நாட்களில் தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சிக்காக உழைத்த, ரத்தம் சிந்திய முன்னோடிகளை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கட்சியின் முன்னோடிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.45 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பணிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை முதலமைச்சர் வழங்கினார். கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 454 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளார்கள். குழந்தைகள் வெறும் வயிற்றில் பள்ளிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் காலை சிற்றுண்டித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
பிறந்தநாள் பரிசு
அது மட்டுமல்லாமல், புதுமை பெண் திட்டம் வெற்றி கரமாக செயல்படுத்தப்படுகிறது. தமிழ் புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மூலம் 1 கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், வெற்றி பெற்று அதனை தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு ரூ.6 லட்சம்கோடி வழங்கியுள்ளது. நமக்கு ரூபாய்.ஒன்றரை லட்சம் கோடிதான் திருப்பி தந்திருக்கிறார்கள். அதாவது, ஒரு ரூபாய்க்கு 28 பைசா தான் தருகிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு 100 ரூபாய் வரை தருகிறார்கள். தமிழ்நாட்டை மட்டும்தான் தொடர்ச்சியாக வஞ்சிக்கிறது.
தொட்டுக்கூட பார்க்க முடியாது
மழை, புயல் வந்தால் பிரதமர் மோடி தமிழ்நாட்டை எட்டிப் பார்க்க மாட்டார். ஆனால் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் வருவார். 2014இல் வந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்றார். அடிக் கல் நாட்டினார். ஒரே ஒரு செங்கல் இருந்தது. அதையும் நான் தூக்கிட்டு வந்து விட்டேன். இப்போது மதுரைக்கு சென்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வந்துவிட்டது என்று சொல்கிறார். இதுவரை அதற்கு ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை. மற்ற மாநிலங்களில் 6 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தி.மு.க.வை அழிக்கப்போகிறேன் என்று சொல்லியுள்ளார். 60, 70 ஆண்டுகளாக இதை சொன்னவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். தி.மு.க.வை மோடி இல்லை. அவருடைய தாத்தாவே வந்தாலும் அழிக்க முடியாது. தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
வெற்றிபெற முடியாது
2, 3 நாட்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று மோடி நினைக்கிறார். நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். 40 நாட்கள் தமிழ்நாட்டில் தங்கி பிரசாரம் செய்தாலும், இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப தெளிவானவர்கள். மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டினீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அங்கு வந்து சாமி கும்பிடுவார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில்தான் வாக்களிப்பார்கள்.
-இவ்வாறு அவர் பேசினார்.