முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது ஆண்டு பிறந்த நாள்!
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்
சென்னை, மார்ச்.1- தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2024) காலை 9 மணியளவில் முதலமைச்சர் அவர்கள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெரியார் திடலுக்கு வருகை தந்தவுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்றார். முதலமைச்சர் அவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு ஆசிரியருடன் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அதேபோன்று அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து மடல், இனிப்பும் ஊட்டி, இயக்க நூல்களை வழங்கியும் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்தார்.
அதேபோன்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி, நாடாளு மன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேனாள் சட்டமன்ற செயலாளர் மா.செல்வராஜ், மயிலாடுதுறை காந்தி சம்பத், செய்யாறு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வ.அன் பழகன், சென்னை மாநகர் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெற்றியழகன், இ.பரந்தாமன், சாமு வேல், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், கே.ஆர்.ரவிச்சந்திரன், திருவாரூர் அசோகன் மற்றும் கோ.ஏகப்பன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி, எழும்பூர் பகுதி செயலாளர் வீ.சுதாகர், வட்டச் செயலாளர் விஜயகுமார், சோ.வேலு, சோ.சுரேஷ் மற்றும் திரளான தி.மு.க. தோழர் கள் பங்கேற்று முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க. மகளிரணியினர் திரண்டு வாழ்த்துத் தெரிவித் தனர். பெரியார் திடல் விழாக் கோலம் பூண்டது.
பிறந்த நாள் கேக்
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் முதலமைச்சரின் பிறந்த நாளை மனித நேயத் திரு விழாவாக கொண்டாடும் விதமாக பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் நான்கு அடி நீளத்தில் வைக்கப் பட்டிருந்த ‘கேக்’கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெட்டி தோழர்களுக்கு அளித்து மகிழ்வை தெரிவித்தார்.
இனிப்பு சிற்றுண்டி வழங்கினர்
தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மகிழ்வாக எழும்பூர் பகுதி தி.மு.க. மேனாள் பகுதி செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சார்பில் பிறந்த நாள் விழாவிற்கு பெருந் திரளாக வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும் இனிப் புடன் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.