கோள்சுற்றும் இயக்கத்தின் மறுபதிப்பு! – கலைஞர்
கால்பட்ட தடமோடும் உடன்பிறப்பு! – ஆசிரியர்
தோள்பற்றிக் களமாடும் வெண்கறுப்பு! – ஸ்டாலின்
ஏழ்பத்து வயதான இளநெருப்பு!
தாள்பற்ற முனையாத தன்மானம்! – காவி
வால்பற்றித் துதிபாடாத் திமிர்ஞானம்! – நீதி
வேல்பற்றிக் களமாடும் புறம்யாவும் – ஸ்டாலின்
ஏழ்பத்தை அடைந்தாலும் தொடராகும்!
கோல்பற்றிக் கூராண்ட பெரியாரின் – கொள்கை
மேல்பற்றைக் கொண்டாளும் பேராளன்! – தமிழர்
தாழ்வற்றே எந்நாளும் தழைத்தோங்க – ஸ்டாலின்
வாழ்வாங்கு வாழட்டும் பல்லாண்டு!
ஏழ்பற்றி நசிந்தார்க்குப் பொருளாகி – வறுமை
பாழ்பட்டுப் பயந்தோடப் பயனாகி – வறியர்
வாழ்வுக்கு வழிசொன்ன அருளாளர்! – ஸ்டாலின்
ஆள்கின்ற பொழுதெம்மின் வரலாறே!
ஆல்விட்ட விழுதாக வேர்தாங்கித் – தொன்மை
சூல்விட்ட நெஞ்சேந்தும் மரபாளர்! – அண்ணா
கால்பட்ட தடஞ்சென்ற நிதியாகி – ஸ்டாலின்
தோள்தட்டி வெல்லட்டும் பகையாவும்!
நால்வருணப் ப(£)குபாட்டைப் பழித்தோட்ட – மனுவின்
தோல்வருண முறைப்பாட்டை அழித்தோட்ட – தோள்சேர்
நூல்வருண வெறிப்பாட்டைக் கழித்தோட்ட – ஸ்டாலின்
வேல்கூரால் தளைகொய்வார் களிப்பூட்ட!
சூழ்புகழைத் தோள்சூடிச் சிறக்கவாழி! – மகிழ்வை
ஆழ்கடலாய் அகமெல்லாம்
நிறைத்துவாழி! – நலத்தை
மேல்வானின் விரிவாகப் பெருக்கிவாழி! – ஸ்டாலின்
நாள்வளர்ந்து நீளட்டும் நூறைத்தாண்டி!
– செல்வ மீனாட்சி சுந்தரம்
தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்