“திராவிடத்தின் அடையாளம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க!

viduthalai
5 Min Read

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியோடு 71ஆம் அகவை நிறைவடைந்துவிட்டது.
72ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி மூன்றாம் ஆண்டு நெருங்குகிறது. அவர் நீண்ட காலம் நோய்நொடி இன்றி வாழ வாழ்த்துகிறோம்.
மு.க.ஸ்டாலின் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறபோது பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற பெருந் தலைவர்கள் இருந்தனர். அன்று முதல் இன்றுவரை அவரின் பொது வாழ்வின் சுவடுகள் மிக அழுத்தமாகப் பதிக்கப்பட்டு வருகின்றன.

ஞாயிறு மலர்

அவர் ஆடாமல் அசையாமல் நேரிய நடை பயிலுகிறார். எதிலும் அளவையும் அரசியல் மாறுபாட்டையும் குறியாகக்கொண்டே அவர் தன்னை இயக்கிக் கொள்கிறார்.
மு.க.ஸ்டாலினின் அகன்றாழ்ந்த பேச்சும், எழுத்தும் அவரின் செயல்பாட்டை நாட்டுக்கு விளக்குகின்றன. சிலபோது அவரின் தேவையான மவுனம் எதிரிகளுக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
வர்ணாசிரமிகள் சநாதனத்தைக் கைக்கொள்வதிலும், நடைமுறைப்படுத்து வதிலும் பேரார்வம் காட்டுகிறவர்கள். அவர்களின் ஒரு நூற்றாண்டு கனவு பலிதமாகி வருவதாக இப்புத்துலகில் அறைகூவல் விடுக்கிறார்கள்.

அதுபோது மு.க.ஸ்டாலின் அந்தப் பழங்கருத்தை – அவர்களின் வேத விழுமியத்தை சுக்கு நூறாக்குகிறார். அவர்கள் கொதித்து உளறுகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் தமிழர்களின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறார். திராவிடர்களின் நாகரிகத்தைப் பேசுகிறார். மதச் சார்பின்மையை வலியுறுத்துகிறார். சமதர்மம் நமது கொள்கை என்று பிரகடனப்படுத்துகிறார். சனாதனிகளின் வெற்றுக் குரல் – கூக்குரல் அதிகமாகிறது. மு.க.ஸ்டாலினின் பயணம் தொடருகிறது.
அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கால அரசியல் இன்றில்லை. அந்த அணுகுமுறைகள், ஆங்காங்கே உள்ள மாநிலத் தலைமைகள், தமிழ்நாட்டின் அரசியல் நிலைமைகள், ஆளுமைகள் மாறி இருக்கின்றன. அது இயல்பு.

ஆனால் இப்போதைய சூழ்நிலைகளை மு.க.ஸ்டாலின் எதிர்கொள்ளும் விதம் பசிபிக்கின் அமைதியையும் ஆழத்தையும் கைக்கொண்டு மேலே செல்வதாக இருக்கிறது. அவரின் அரசியல் பரிமாணங்களின் தோற்றம் திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதில் எப்போதும் முனைப்புக் கொண்டதாக இருக்கிறது. அதனால் நமக்கு ஒரு நிறைவு ஏற்படுகிறது.
மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடுகின்றோம். அவர் ஒரு தனி மனிதரல்லர். ஓர் இயக்கமாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பவர்.
திராவிட இயக்கம் தோன்றி 112 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுயமரியாதை இயக்கம் தொடங்கி நூற்றாண்டை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது. திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டு 80 ஆண்டுகள் ஆகப் போகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பவள விழா வரவிருக்கிறது. இவற்றின் ஒட்டுமொத்த அரசியல் அடையாளமாக இன்றைய நாள் திகழுபவர் மு.க.ஸ்டாலின்!
இன்று பெரிய பலமுள்ளவர்களைப் போல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவாரங்களின் கூச்சல் அதிகமாகி இந்தியாவெங்கும் கேட்டுக் கொண்டு இருக்கிறது. மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், உண்மையில் அவர்கள் பலமிக்கவர்களாக இல்லை.
தென்னிந்தியா முழுமையும் அவர்கள் – அதிகாரத்தில் இல்லை. எதிர்க்கட்சிகளே அதிகாரத்தில் இருக்கின்றன. மேற்கு வங்கம், பஞ்சாப், டில்லி, ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வா ஆளுகிறது – இல்லை.

காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. காஷ்மீரில் தேர்தல் நடந்தால்தான் நிலைமைகள் தெரியும். ஆனால், நிச்சயமாக பா.ஜ.க. பரிவாரம் அங்கே ஆட்சி அமைக்க முடியாது.

உண்மை நியாயம் இப்படி இருக்கிறபோது உ.பி.யில் பால இராமனுக்கு ‘பிராண பிரதிஷ்டை’ செய்து விட்டு இராம ராஜ்யம் – ஹிந்து ராஜ்யம் கூச்சலைக் கிளப்புகிறார்கள். மூன்றாவது முறை மோடியே பிரதமராவார் என்கிறார்கள்.

தேர்தல் இயந்திர உத்தியைப் பயன்படுத்துவார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. நீதித் துறையை மிரட்டுகிறார்கள். எதிர்க்கட்சிகளைச் சிதற அடிக்கிறார்கள். பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்கிறார்கள். உளவுத் துறை, அமலாக்கத்துறையைக் கொண்டு வழக்குப் போடுகிறார்கள். ஒற்றை ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என அத்தனை ‘முஸ்தீபுகளையும்‘ செய்து வருகிறார்கள்.

பொய்க்கூச்சல் கிளப்பிவிடும் மோடி கும்பலுக்கு இந்தியாவில் பெருமதிப்பு இருப்பது போல காணப்படும் ஒரு தோற்றத்தை ஸ்டாலின்தான் உடைத்தெறிந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் எதிரணி கட்டமைப்பை உருவாக்குவதில் குழப்பமின்றி தெளிவான முடிவை எடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான்!
மோடியைப் போலவே ‘சுவஸ்திக்‘ சின்னத்தை பொறித்துக் கொண்ட ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்தின் சர்வாதிகாரியாக இருந்த ஜோசப் ஸ்டாலினைப் பார்த்துக் கொக்கரித்தான். அப்போதைய சோவியத் உக்ரைனின் ‘கீவ்’ போன்ற நகரங்களைக் கைப்பற்றிவிட்டதற்காக! பல பகுதிகளைக் கைப்பற்றினர் ஜெர்மானியர். அதனால் கொக்கரிப்பு ஹிட்டலருக்கு அதிகமாகிற்று. அந்த நிலையில்தான் மோடி இன்று இருக்கிறார்.

ஹிட்லரின் கொக்கரிப்பு ஜோசப் ஸ்டாலின் முன் நீடிக்கவில்லை. நிலைமை மாறியது. நாஜிகளை முறியடிக்கும் சக்தியை செம்படை பெற்றுவிட்டது என்று மாஸ்கோ வானொலி தெரிவிக்கிறது. 1942 ஜனவரி முதல் ஏப்ரல் வரையான நான்கு மாதங்களில் இரண்டு இலட்சம் பேர் மாண்டனர். சுவஸ்திக் சூறாவளிப் படை பிடரியில் கால்பட பின்வாங்கிவிட்டது. மூன்று இலட்சம் நாஜிப்படையின் இராணுவ வாகனங்களும் நாசமாயின. கோயபல்ஸ், “கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்” துன்பத்தைக் கண்டு கலக்கமடைய வேண்டாம். ஆண்டவன் நமது அடால்ப் ஹிட்லரை ஆசீர்வதிப்பார்” என்று ஜெர்மன் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தான்.

ஜோசப் ஸ்டாலினின் ரஷ்ய களத்திலே ஹிட்லரின் திட்டங்கள் தவிடு பொடியாயிற்று. உலக நாடுகளில் ஹிட்லரின் ஆட்கள் – தளபதிகள் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்கள். ஆப்பிரிக்க பாலைவனத்திலே ரோமல் திட்டம் தவிர்த்து திணறினான். சீனர்களின் இரத்த ஆற்றில் நீந்தி ஹிட்லரின் சகாவான ஜப்பான் பிணக்குவியலைச் சந்தித்தது. ஜெர்மனி மீது பிரிட்டன் ஆயிரம் விமானங்களைப் பயன்படுத்தி குண்டுமாரிப் பொழிந்தது.

ஹிட்லருக்கு அன்று ஜோசப் ஸ்டாலின் கொடுத்த அடி இரண்டாம் உலகப் போரையே திசை திருப்பி விட்டது. ஹிட்லரின் ஆசையை நிராசையாக்கிவிட்டது.
இன்று நாட்டின் முன்னுள்ள ஜனநாயகப் போரில் – நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து – ஆரிய பாசிசத்தை எதிர்த்து முதலில் நின்றவர் – குரல் கொடுத்தவர் – ‘இந்தியா’ எனும் எதிரணியை அமைப்பதில் உறுதி காட்டியவர் நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆவார்.

தமிழ்நாட்டின் இல்லந்தோறும் அவரின் குரல் கேட்டுக் கொண்டு இருக்கிறது. அவரது சாதனைகளின் வீச்சு நாடெங்கும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. எப்படி ஜோசப் ஸ்டாலின் ஹிட்லரை வெற்றிக் கொள்ளக் காரணமாக இருந்தாரோ – அப்படி நமது மு.க.ஸ்டாலின் மோடியை ஜனநாயகப் போரில் வீழ்த்தி வெற்றி காணுவார் என்பது உறுதி.
“ஆரியம் ஒரு நயவஞ்சக நாசிசம், பசப்பும் பாசிசம், ஜாலம் பேசிடும் ஜார், சீலம் என்றுரைத்துத் தமிழ்ச் சீமை ஆண்டவரைச் சிதைத்த சதி, வஞ்சக வல்லரசு, இளித்தவாயரை உற்பத்தி செய்து அவர் மீதேறிச் சவாரி செய்யும் ஏகாதிபத்தியம், தாசர் சட்டத்தை உண்டாக்கி, அதற்குத் தரகுத் தொழில் செய்யும் தந்திர யந்திரம்.”
அறிஞர் அண்ணா அவர்கள் ஆரியத்தைப் பற்றி எழுதிய மேற்கண்ட வரையறையை நமது மு.க.ஸ்டாலின் கற்றறிந்ததினால்தான் அவர் இன்றைய நாள் திராவிடத்தின் அடையாளமாகத் திகழுகிறார்.

திராவிடத்தின் குரலாக எதிரொலிக்கிறார். மு.க.ஸ்டாலின் நமது அரசியலின் காவலராக இருந்து வருகிறார். அவர் காலம் வழங்கிய கொடையாகத் திகழுகிறார். நமது திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த அரசியல் முத்திரையாக அவர் விளங்குகிறார்.

அவர் மார்ச் 1ஆம் தேதி 71ஆம் ஆண்டு அகவை நிறைவடைந்து 72ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். மு.க.ஸ்டாலின் ஆயிரம் பிறைகண்டு அதற்கப்பாலும் வாழ, வாழ்த்துகின்றோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *