கலைஞர் தனது கனவுகள் அனைத்தையும் தமிழ் நிலத்தில் விதைத்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாக மாறினார்

viduthalai
4 Min Read

திறப்பு விழாவில் திரையிடப்பட்ட காட்சிப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை, பிப்.27 – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம், அறிஞர் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று (26.2.2024) மாலை சென்னை கடற்கரை சாலையில் மெரினா கடற்கரையையொட்டி அமைந்துள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் நடைபெற்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஒளிபரப்பப்பட்ட காணொலி உரை வருமாறு,
“இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?”

அறிஞர் அண்ணா மறைந்தபோது தலைவர் கலைஞர் எழுதிய கவிதை உயில் இது!
அந்தக் கலைஞருக்கு வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில் அவரது உயிரனைய அண்ணனுக்குப் பக்கத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணாவின் நினைவிடம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் புது உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அண்ணனும் தம்பியும்தானே தமிழ்நாட்டுக் குடும்பங்களின் தலைப்பிள்ளைகள்! இன்று நாம் பார்க்கும் தமிழ்நாட்டை உருவாக்கியவர்கள்!
நம்மையெல்லாம் இன்றும் என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு
“இதோ உங்களுக்கு சென்னைக் கடலின் கரையில் கண்ணைக் கவரும் கம்பீர நினைவிடம் அமைக்கப் பட்டுள்ளது!”

பதினான்கு வயதில் தமிழ்க் கொடி ஏந்தி அதை 95 வயது வரையில் விடாமல் பிடித்திருந்த கனத்த கரங்களுக்குச் சொந் தக்காரரான தலைவர் கலைஞரின் முழு வாழ்க்கையையும் இந்த நினைவிடத்தைச் சுற்றிப் பார்க்கும்போது மொத்தமாய் தெரிந்து கொள்ளலாம்!
தனது வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்று ஆறு பாகங்கள் மட்டும் எழுதினார் கலைஞர். இயற்கை இடமளித் தால் ஏழாவது பாகத்தையும் எழுதுவேன் என்று ஊக்கமாகவும் இருந்தார். காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்துச் சென்றது.
வரலாற்றைப் படைக்கும் வல்லமையை அவர் நமக்கு வழங்கிச் சென்றதால் அடுத்தடுத்த பாகங்களில் கலைஞர் இருந்து எழுதி இருந்தால் என்னவெல்லாம் எழுதி இருப்பாரோ,
அவை அனைத்தையும் காட்சிக்கு கொண்டு வந்து நிறுத்தும் வகையில் கண்காட்சியாக வைத்துள்ளோம்!

திருவாரூரில் இருந்து கண்களில் கனவுகளோடும் –
நெஞ்சில் ஈரத்தோடும்-
சிந்தனையில் தெளிவோடும்-
கால்களில் உறுதியோடும் கிளம்பிய மு.கருணாநிதி என்ற இளைஞன்தான் –
தன் கையில் அதிகாரம் கிடைத்ததும்-
தனது கனவுகள் அனைத்தையும் தமிழ்நிலத்தில் விதைத்து நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாக மாறினார்.
தன் கையில் இருந்த செம்மொழி எழுதுகோலைச் செங்கோலாக மாற்றி – அவர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்கள்தான்,
இன்று தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் – எட்டுக் கோணத்திலும் – எதிரில் தென்படுவது அத்தனையுமாகும்!
மக்கள் போராடிப் பெற்ற விடுதலை நாளன்று கொடியேற்றும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்து முதலமைச்சர்களுக்குத்தான் உண்டு என்ற உரிமையை,
இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்த அகில இந்தியத் தலைவர் அவர்!
கோபாலபுரத்தில் இருந்து அவர் கோலோச்சிய தமிழ் அரசவைக்கு வந்து செல்லாத அகில இந்தியத் தலைவர்களே இல்லை!
கலைஞர் – கலையானவர்! அரசியலுமானவர்!

இரண்டாலும் இயங்கியவர்! இரண்டு உலகங்களையும் இயக்கியவர்!
அவரது பேனா தீட்டிய கதைகள் – கவிதைகள் – புதினங்கள் – நாடகங்கள் – திரைக்கதை உரையாடல்கள் என்பவை எல்லாம் தமிழ் இருக்கும் காலமெல்லாம் இருக்கும் அழியாத காவியங்கள்! எந்த ஆழிப்பேரலையாலும் அழிக்க முடியாது!
அய்ந்து முறை முதலமைச்சராக இருந்து அவர் போட்ட கையெழுத்தின் காரணமாகத்தான் தமிழ்நாட்டின் முன்னெழுத்தாக ‘மு.க.’ என்ற இரண்டெழுத்து உருவானது.
திருவாரூரில் புறப்பட்ட கலைஞர், தமிழ்நாட்டையே திருவூராக ஆக்கினார். தமிழ்நாடே ஆரூரார் உருவாக்கிய நாடாகக் காட்சி அளிக்கிறது!
கலைஞர் போகாத ஊரில்லை; பேசாத நகரில்லை!
தமிழ்மண் பயனுற வாழ்ந்த கலைஞரை எல்லாத் திட்டங்களும் நினைவூட்டியபடியே, அவர் நினைவைப் போற்றும் சின்னங்களாக வானுயர அமைந்து வாழ்த்துகின்றன.

தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களுக்கு எல்லாம் நினைவு மண்டபங்கள் எழுப்பிய கலைஞருக்கு, ஆறடி மண் கேட்டுப் போராட வேண்டியதாக இருந்தது.
கலைஞர் என்றால் போராட்டம்! இதுதானே அவரது வாழ்வும் வரலாறும் நானிலத்துக்குச் சொல்கிறது!
போராட்டம் மட்டுமல்ல, கலைஞர் என்றால் வெற்றி என்பதன் அடையாளம் இந்த நினைவிடம்!
பொதுப்பணித் துறை அமைச்சரும் – எதிலும் வல்லவர் என்று தலைவரால் போற்றப்பட்டவருமான எ.வ.வேலு அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வால் மிகச்சீரிய முறையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது ‘கலைஞரின் உலகம்!’
’கலைஞரின் உலகம்’ என்ற இந்த நினைவிடம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையில் இருக்கும் முதல் அதிசயம்!
கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்… தமிழ்நாடு சுற்றுகிறது… கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
கலைஞர் நினைவிடத்துக்குள் வாருங்கள். கலைஞர் வாழ்ந்த வாழ்க்கையைக் காணலாம். கலைஞரோடு வாழலாம்… வாழலாம்… வாழலாம்…
-இவ்வாறு நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்ட காட்சிப் பதிவு உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *