வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள்

viduthalai
8 Min Read

வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திருநாள் நேற்று (26-2-2024)!
அண்ணா, கலைஞர் சிலைகள், ‘கலைஞர் உலகம்’ எனும் அருங்காட்சியகம் – மறுமலர்ச்சித் திட்டங்களுக்கான
முதலமைச்சர் கலைஞரின் ஆணைகள் – நூல்கள் விற்பனையகம் – அரிய ஒளிப்படங்கள் – எண்ணற்ற அணிகளுடன் உருவாக்கம்!
அறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்பு

சென்னை, பிப்.27 அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங் களை பல்வேறு சிறப்புகளின் அணிவகுப்பாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26-2-2024) மாலை திறந்து வைத்தார். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்றார்.
தமிழர்கள் போற்றும் இரு தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

அரசு, தமிழ்நாடு, திராவிடர் கழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (26.2.2024) சென்னை, மெரினா கடற்கரையில், தமிழ்ச் சமுதாயத்தின் மதிப்புறு தலைவர்களாக திகழும் அறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தை யும் திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச் சிலைகளை திறந்து வைத்து, அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவராக திகழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்தபின் அவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்புடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

19 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்
முத்தமிழறிஞர் கலைஞர்

தமிழ்நாட்டு முதலமைச்சராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக விளங்கி, உலக வரலாற்றில் உன்னதப் புகழ்ச் சின்னமாகத் திகழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 95 ஆம் வயதில் 2018 ஆகஸ்டு திங்கள் 7ஆம் நாள் மறைந்து, அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அரசு, தமிழ்நாடு, திராவிடர் கழகம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.8.2021 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 இன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், உலகெங்கிலும் தமிழர்களுக் கெல்லாம் தமிழினத் தலைவர், இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் முத்தமிழறிஞர், கலையுலகத் தினருக்கு என்றும் கலைஞர், தமிழ்நாட்டின் சிறப்புமிகு தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி, “என் பாதை, சுயமரியாதைப் பாதை – தமிழின நலன் காக்கும் பாதை – தமிழ் நெறி காக்கும் பாதை – தந்தை பெரியாரின் பாதை – பேரறிஞர் அண்ணாவின் பாதை – அறவழிப் பாதை – அமைதிப் பாதை – ஜனநாயகப் பாதை – இதில் பயணித்தால் மரணமே வரும் எனப் பயமுறுத்தினாலும், அந்தப் பாதையிலிருந்து மாற மாட்டேன்” என்று இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர்தான் கலைஞர் அவர்கள்.

எண்பதாண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்!

எண்பது ஆண்டு பொதுவாழ்க்கை, எழுபது ஆண்டு கள் திரைத்துறை, எழுபது ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தினுடைய தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர் அவர்கள்.
நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர், இந்தியாவில் இப்படி ஒருவர் இருந்தது கிடையாது; இனி ஒருவர் அவர் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது என்று போற்றத்தக்கப் பெருமைக்குரியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தாய்த் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

நினைவிடங்களின் சிறப்பம்சங்கள்

அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய இருபெரும் தலைவர்களின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் அறிஞர் அண்ணா அவர்களின் படிப்பது போன்ற சிலை அமைந்துள்ளது. நினைவிடங்களின் முன்பகுதியின் இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகளும், இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியமும் அமைந்துள்ளன.

அரசு, தமிழ்நாடு, திராவிடர் கழகம்

“எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது.” எனப் பொறிக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்கள் துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றவுடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சதுக்கமும் அமைந்துள்ளன. இச் சதுக்கத்தில்,

“ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணப்படியே பொறிக் கப்பட்டுள்ளது.

‘கலைஞர் உலகம்’ எனும் அருங்காட்சியகம்!

கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள், தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. சதுக்கத்தின் பின்புறம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புன் னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிரும் வண்ணமும் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப் பட்டு, கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் 17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங் களுடன் இடம் பெற்றுள்ளன.
மேலும், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறையில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறை வேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான நிழற் படங்கள் அமைந்துள்ளன.

உரிமைப் போராளி கலைஞர்

“உரிமைப் போராளி கலைஞர்” எனும் அறையில் – தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் வகையில் சென்னைக் கோட்டையில் முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலைஞர் உரையாற்றும் காட்சி, தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், உடனடியாக புகைப்படம் கிடைக்கும் வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வலப்புறத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோ வியம் தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட 8 நூல்களின் பெயர்கள் மீது நாம் கை வைத்தால் அந்த நூல்கள் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு எடுத்துரைக்கும்.

அரசியல் கலை அறிஞர்

“அரசியல் கலை அறிஞர் கலைஞர்” எனும் அறையில் சுமார் 20 நிமிடங்கள் கலைஞர் அவர்களின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, ‘கலையும் அரசியலும்’ எனும் தலைப்பில் நம்முன் தோன்றி வியக்க வைக்கும்.
“சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” எனும் அறையில், திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி, தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய ரயில் நிலையங்களைக் கடக்கும் போது, அந்தந்த ஊர்களில் கலைஞர் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்.

அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடை யில் இருபுறங்களிலும், பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கலைஞர் முதலான தலைப்பு களில் அமைந்த அரிய நிழற்படங்கள் அழகுற அமைக்கப் பட்டுள்ளன. அப்பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
அதற்கு நேர் எதிரே- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தோன்றும் அருமையான புகைப்படம் பெரிய அளவில் அமைந்து “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. மேலும், இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையை பயன்படுத்தி அமர்ந்த நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் எழுதிய நூல்கள் விற்பனைக்கு!

இச்சதுக்கத்தில் கலைஞர் எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், வரும் வழி யில் தமிழர்களின் கலாச்சார மய்யம், வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப் பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இச்சிறப்புமிக்க அறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதிய நினைவிடத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று (26-2-2024) திறந்து வைத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் உள்பட
விருந்தினர் பெருமக்கள் பங்கேற்பு!

இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
இ.பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்கே.எம். காதர் மொகிதீன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற, சட்டமன்ற மேனாள் உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் எல்லாம் திரையின்மூலம் அனைவரும் பார்க்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பொன் னாடை அணிவித்து வரவேற்றார்.

கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *