சென்னை, அக்.3 – சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023அய் மாநில அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து, இந்தியாவின் நாட்டின் முன் னோடி சுற்றுலாத்தலமாக மாற்று வதை அடிப்படையாக கொண்ட தாக இந்த கொள்கை அறிக்கை அமைந்துள்ளது. சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்பு களை அளித்தல், அந்நியச் செலாவணி ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவின் சுற்றுலா தளங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டின் பிரமாண்டமான கோவில் கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனப் பகுதிகள், எழிலார்ந்த கடற் கரைகள், சிற்பங்கள், ஓவியங்கள், படகு குழாம்கள் போன்று பல தரப்பட்ட சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து ஈர்க்கின்றன. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
உலகம் முழுவதும் பொரு ளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தின் குறிப் பிடத்தக்க பகுதியாக சுற்றுலாத் துறை உள்ளது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில் முனைவோர் என வேலை வாய்ப் புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்து வதும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தை அதிகரிப்பதை யும், அந்நிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வசதிகளை, கட்டமைப் புகளை அதிகப்படுத்தும் வகையில் இந்த சுற்றுலா கொள்கை உரு வாக்கப்பட்டுள்ளது.
ஒரு வலுவான அடித்தளத் தையும், மாறி வரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு முன்னேறும் அணுகுமுறையையும் உறுதி செய்யும் வகையில், சுற்று லாத்துறை சார்ந்த நிபுணர்கள், சுற்றுலாத் தொழிலில் செயல்படும் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுலா வல்லுநர்களின் பங்களிப்புடன் இந்த கொள்கை வடிவமைக்கப்பட் டுள்ளது. தொழில் அந்தஸ்து புதிய சுற்றுலாக் கொள்கையின் படி, சுற்று லாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்து வழங்கப் படுகிறது. இதன்மூலம் தொழில் துறை திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட பலன்களை சுற்றுலாத் துறைக்கு கிடைக்கும்.
இதன் வாயிலாக சாகச சுற் றுலா, பொழுது போக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (எம்அய்சிஇ) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகள் வளர்ச்சி பெறும். தகுதியான சுற்றுலா திட்டங்களுக் கும் ஒற்றை சாளர அனுமதியுடன் அனுமதி வழங்கப்படும்.
தனியார் முதலீட்டை ஊக்கு விக்க, பொழுது போக்கு பூங்காக்கள், பாரம்பரிய விடுதிகள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள், முகாம்கள், ரோப் வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள். ஓசியானேரியம், மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம், பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களுக்கு ஊக்கத் தொகை, மூலதன மானியம், மின் கட்டண சலுகை வழங்குவது போன்றவற்றையும் அரசு அறிவித்துள்ளது.