எந்தக் காலத்திலும் சுதந்திரத்திற்குப் பெண்கள் தகுதி உடையவர்கள் அல்ல என்று சொல்வதுதான் மனுதர்மம் – அதை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கம்
‘இன்னாருக்கு இதுதான்’ என்று சொல்வது மனுதர்மம்; அதற்கு நேர் எதிரான ‘‘எல்லோருக்கும் எல்லாமும்’’ என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கைகள்!
செந்துறை, பிப்.26 எந்தக் காலத்திலும் சுதந்திரத்திற்குப் பெண்கள் தகுதி உடையவர்கள் அல்ல என்று சொல்வதுதான் மனுதர்மம். அதை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கம். ‘இன்னாருக்கு இதுதான்’ என்று சொல்வது மனுதர்மம்; அதற்கு நேர் எதிரான ‘‘எல்லோருக்கும் எல்லாமும்’’ என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கைகள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜெயமணி இல்லத்தினை திறந்து
தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
கடந்த 9-2-2024 அன்று காலை அரியலூர் மாவட்டம் செந்துறை, சுந்தரா நகரில் நா.மணிவண்ணன் – ஜெயலெட்சுமி ஆகியோரின் புதிய இல்லமான ஜெயமணி இல்லத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
கொள்கை வீரர் – வீராங்கனையாகிய திருவாளர்கள் மானமிகு நா.மணிவண்ணன் – ஜெயலெட்சுமி
மிகுந்த மகிழ்ச்சியோடு, சிறப்போடு நடைபெறக் நடைபெறக்கூடிய செந்துறை, சேடக்குடிக்காடு பகுதி யைச் சேர்ந்த அருமைத் தோழர்கள் கழகத்தினுடைய எடுத்துக்காட்டான கொள்கை வீரர் – வீராங்கனையாகிய திருவாளர்கள் மானமிகு நா.மணிவண்ணன் – ஜெய லெட்சுமி ஆகியோரின் அரிய முயற்சியினால், சிக்கனத் தோடும், சிறப்போடும், பொறுப்போடும் வாழ்க்கையை நடத்தி, இந்தப் பகுதியில் ஓர் அருமையான இல்லத்தினை உருவாக்கி, அதனைத் திறக்கக் கூடிய ஒரு வாய்ப்பை இன்றைக்கு நமக்கெல்லாம் மகிழ்வை அளிக்கக் கூடிய வகையில் அளித்திருக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் தோழர் மணிவண்ணன் அவர் களும், ஜெயலெட்சுமி அவர்களும், மணிவண்ணன் அவர்களுடைய தாயார் ஜெயமணி அவர்களுடைய பெயரால் இல்லம் அமைத்து அறிமுக விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
இவ்விழாவிற்கு வந்திருக்கக்கூடிய கழகப் பொறுப் பாளர்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களே, இக்குடும்பத்தைச் சார்ந்த அருமைச் செல்வங்கள் மகன் ஆகாஷ் அவர்களே, மகள் ஆர்த்தி அவர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சான்றோர்களே, கொள்கை உறவுகளே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி வாழ்நாளிலேயே பெருமிதம் கொள் ளக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும்.
‘‘இந்தக் கொள்கையினால் என்ன லாபம்?’’
எங்களைப் போன்றவர்களை மட்டுமல்ல, இயக்கத் தில் உள்ளவர்களைப் பார்த்து ‘‘இந்தக் கொள்கையினால் என்ன லாபம்?”
பெரியாருடைய இயக்கத்தில், அதுவும் கசப்பு மருந்தைத் தரக்கூடிய ஓர் இயக்கத்தில்,
அதுவும் ‘‘எதிர்நீச்சல் அடிக்கக் கூடிய ஓர் இயக் கத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்திருக்கிறார்களே, இவர் கள் எல்லாம் உருப்படுவார்களா?” என்று பல நேரங்களில் கிராமங்களில் சொல்வார்கள். இந்த வகையிலான கேள் விகட்கு கலைஞர் அவர்கள் பதில் சொல்லியிருக்கின்றார்.
நூற்றாண்டு விழா நாயகரான நம்முடைய கலைஞர் அவர்கள், 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அண்ணா அவர்கள் மறைந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்றவுடன், தருமபுரியில் தந்தை பெரியார் அவர்களுக்கு இரண்டாவது சிலை திறப்பதற்கான ஏற்பாடாகி இருந்தது. முதல் சிலை திருச்சி பேருந்து நிலையத்திற்கு அருகில், கட்சி வேறுபாடின்றி திருச்சி நகர மக்கள் அமைத்தனர் – கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள்தான் அதனைத் திறந்து வைத்தார்.
அன்றைக்குக் காலையில் முதலமைச்சர் அண்ணா அவர்கள், மற்றவர்கள் உரையாற்றினார்கள் பெரியார் பிறந்த நாள் விழாவில். மாலையில், பொதுவான தலைவர்கள் காமராஜர், ராஜா சர் முத்தையா செட்டியார் போன்றவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
அதற்கடுத்த சிலை, தருமபுரியில் திறக்கப்பட்டது. அன்றைக்கு முதலமைச்சராக கலைஞர் பொறுப்பேற்று, முதன்முதலாக தருமபுரியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைதான் அது.
அந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் என்ன பேசப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்தனர்.
முதலமைச்சர் கலைஞர்
பேசுகிறார்!
அந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர் பேசுகிறார்,
‘‘நான் மாணவப் பருவத்தில், 16 வயதில் தந்தை பெரியார் அவர்களுடைய உரையைக் கேட்டேன். அப்பேச்சைக் கேட்டு நான் ஈர்க்கப்பட்டு, பெரியார் கொள்கையோடு நான் இணைந்தேன்.
அப்பொழுது எங்கள் ஊரில், என்னுடைய உற்றார், உறவினர், மற்றவர்கள் எல்லோரும், ‘‘பெரியார் பின்னால் போயிருக்கிறானே, இவன் உருப்படுவானா?” என்று என்னைப் பார்த்து கேலி செய்து பேசினார்கள். நான் இன்றைக்கு உருப்பட்டேனா? இல்லையா? என்பதை இந்த ஊர் அறியும், இந்த உலகம் அறியும், நீங்களும் அறிவீர்கள்” என்று பேசத் தொடங்கினார்.
அதேபோன்று, இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் வாழ்வில் என்றைக்கும் தாழ்ந்து போவதில்லை.
அரியலூர் பக்கம் நாங்கள் எப்பொழுது வந்தாலும், ஒரு புத்துணர்ச்சியோடு திரும்பிப் போவோம். காரணம், மாவட்டத் தலைவர் நீலமேகம் ஆனாலும், சிந்தனைச் செல்வன் போன்றவர்களானாலும், மணிவண்ணன் போன்றவர்களானாலும் மற்றும் நம் இயக்கப் பொறுப்பில் உள்ள அத்துணை பொறுப்பாளர்களானாலும் குடும்பம் குடும்பமாக எங்களை, இந்தக் கொள்கையைப் பின்பற்றி வருபவர்கள்.
பாராட்டு விழா, நன்றிவிழா போன்ற கூட்டங்களுக்கு மட்டுமல்ல – போராட்டம் என்றால், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் தோழர்கள் வருவார்கள்.
அரியலூரை தனி மாவட்டமாக ஆக்கிய பெருமை முதலமைச்சர் கலைஞர் அவர்களையே சாரும்.
பெரியார் கொள்கையைப்
பின்பற்றினால்…
பெரியார் கொள்கையைப் பின்பற்றினால், அவர்கள் உருப்படுவார்களா? இல்லையா? என்றால், உருப்படு வார்கள் என்பது மட்டுமல்ல, வளருவார்கள் என்பதற்கு அடையாளம்தான் இந்த இல்லத் திறப்பு விழா நிகழ்வு.
அதில் என்ன சிறப்பு என்று சொன்னால், நம்முடைய அருமைத் தோழர்களான செயல்வீரர்கள், உழைப் பாளர்கள் ‘‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’’ என்று சொல்லுவதுபோன்று, அந்த உழைப்பினுடைய உருவமாக இருக்கக்கூடிய அவர்கள், தெளிவாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்றால், இந்த இல்லத் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை ஆடம் பரமாக, படங்கள் போட்டு கொடுத்திருக்கிறார்கள். என் னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், இவருக்கு மட்டுமல்ல, நம்முடைய தோழர்களுக்கும் சேர்த்துத்தான்.
நிகழ்வுகளுக்கு அழைக்கும்பொழுது, மற்ற அரசியல் கட்சிகளைப் பார்த்து, பெரிய பெரிய படங்களாகப் போட்டு, நாமும் அதுபோன்று போடவேண்டும் என்று நினைத்து, அதேபோன்று அழைப்பிதழை போடு கிறார்கள். ஒரு அழைப்பிதழுக்கான செலவு 12 ரூபாயாம். இது பரவாயில்லை. ஆனால், பெரிய பெரிய புத்தகம் போன்று அழைப்பிதழை அச்சடிப்பார்கள் சிலர்.
12 ரூபாய் செலவில் அழைப்பிதழ் போடுவதற்குப் பதிலாக, எளிமையாக அச்சடித்தால் போதும்; இந்த நிகழ்வு முடிந்ததும் இந்த அழைப்பிதழுக்கு என்ன மரியாதை உண்டு என்பதை நினைத்துப் பாருங்கள்; இந்தக் குடும்பத்தினரைத் தவிர, வேறு யாரும் இந்த அழைப்பிதழை வைத்துக்கொள்ளமாட்டார்கள்.
நிகழ்ச்சியின் அழைப்பிதழுக்காக
அதிகம் செலவழிக்கவேண்டாம்!
ஆகவே, அழைப்பிதழுக்காக அதிகம் செல வழிக்கவேண்டாம். 12 ரூபாய் என்பது மிகக் குறைவுதான். சாதாரண அட்டையில் அழைப்பிதழ் போட்டாலும், அதே தகவல்கள்தான்.
ஆகவே, நம்முடைய தோழர்கள் நிகழ்வு களுக்கு ஏற்பாடு செய்யும்பொழுது, நம்முடைய இயக்க நூல்கள், கொள்கையை வலியுறுத்தக் கூடிய நூல்கள் 10 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் பொழுது, அதில் நிகழ்வுக்கான அழைப்பிதழையும் சேர்த்துக் கொடுங்கள். படங்கள் எல்லாம் போடவேண்டிய அவசியமும் இல்லை.
ஏனென்றால், நிகழ்ச்சிகளுக்கான பல அழைப் பிதழ்களைப் பார்த்தீர்களென்றால், திறந்தவுடன் பாட்டு வரும்; வாசனை வரும். அதுபோன்ற அழைப்பிதழ் ஒன்றை என்னிடம் கொடுத்தவரிடம் கேட்டேன், ‘‘இதற்கு எவ்வளவு செலவாயிற்று?” என்று.
200 ரூபாய் என்றார் அவர்.
அந்த 200 ரூபாயை நிகழ்ச்சிக்கு வருகிறவரிடம் கொடுத்தால், வந்து போகின்ற செலவிற்காவது ஆகும்.
இதுபோன்ற ஆடம்பர செலவுகளைக் குறைத்து, இரண்டு ‘விடுதலை’ சந்தாக்கள் அளித் தால்கூட பயனுள்ளதாக இருக்கும். அல்லது உள்ளூர்க்காரர்களுக்குப் பயன்படும்படி ஏதாவது செய்யலாம்.
தஞ்சை மாநாட்டில் மணிவண்ணன் – ஜெயலெட்சுமி ஆகியோரின் மணவிழா!
தஞ்சையில், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட் டில், மணிவண்ணன் – ஜெயலெட்சுமி ஆகியோரின் மணவிழா மிக எளிமையாக நடைபெற்றது. இரண்டு மாலைகள் செலவுதான்.
அதற்குப் பிறகு இரண்டு பேரும் உழைத்தனர். மணிவண்ணன் அவர்கள் சிங்கப்பூரில் பணியாற்றினார். தோழர் மதியழகன் அவர்களோடு பணியாற்றியவர். நான் சிங்கப்பூருக்குச் சென்றால், அங்கே வந்து என்னை சந்திப்பார்கள்.
என்னுடைய மகள் கவிதா மாறன், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தில் இருப்பவர். எல்லோ ருக்கும் அறிமுகமானவர். அவர்களை சந்திப்பார்கள்.
‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதற்கொப்ப மணிவண்ணன் உழைத்தார். ஜெயலெட்சுமி அவர்கள் எம்.ஏ., பி.எட்., படித்து, ஆசிரியராக இருக்கிறார்.
நம்முடைய குழந்தைகளுக்குத்
தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும்!
அவர்களுடைய பிள்ளைகள் ‘‘தம்மக்கள், தம்மை விட அதிகமான அளவிற்கு வாய்ப்பைப் பெற்றவர்கள்” என்பதற்கு அடையாளமாக, ஆகாஷ் அவர்களும், ஆர்த்தி அவர்களும் நன்றாகப் படித்திருக்கிறார்கள். நல்ல தமிழ்ப் பெயரை அவர்களுக்கு வைத்திருக்கலாம். ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்டவேண்டும்; பாராட்டுகின்றபொழுது உண்மையைச் சொல்லித்தான் நமக்குப் பழக்கம். நம்முடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும்.
ஆகாஷ் அவர்கள் பிசிஏ படித்துவிட்டு, பெங்களூ ருவில் பணியாற்றுகிறார். ஆர்த்தி அவர்களும், சென் னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணினிப் பிரிவில் பணியாற்றுகிறார்.
மணிவண்ணன் அவர்கள், சிங்கப்பூரில் சாதாரண தொழிலாளியாக பணியாற்றுகிறார். அவருடைய வாழ்விணையர், இந்தக் கொள்கையை ஏற்று, மேலும் மேலும் படித்து, ஆசிரியராக இன்றைக்கு ஒரு சமூகப் பணியாற்றுகிறார்.
நேரம் பார்க்கவில்லை, காலம் பார்க்கவில்லை; எல்லோரையும் வாங்க, வாங்க என்று அழைக்கவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில், மிகவும் புத்திசாலித் தனமாக வந்து – தங்களுடைய மணவிழாவினை முடித்துக்கொண்டனர்.
இன்றைக்கு இவ்வளவு செலவு செய்து, இவ்வளவு ஆடம்பரமாக இல்லத் திறப்பு விழா ஏன்?
பிறகு ஏன் இன்றைக்கு இவ்வளவு செலவு செய்து, இவ்வளவு ஆடம்பரமாக ஏன் இல்லத் திறப்பு விழா வினை நடத்துகிறார் என்று கேள்வி கேட்டால், அவர் பகுத்தறிவு ரீதியாக பதில் சொல்வார்.
அது என்னவென்றால், ‘‘இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாங்கள், ஒரு சமூக விழாவாக நடத்தி, கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையான ஜாதி இல்லை, மதம் இல்லை, கடவுள் இல்லை – உறவு உண்டு என்று சொல்லக்கூடிய ஓர் இயக்கத்தைச் சார்ந்த நாங்கள் இருவரும் வெற்றி பெற்றிருக்கின்றோமா, இல்லையா?”
நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், இந்தக் கொள்கையை ஏற்றால், அவர்கள் விழ மாட்டார்கள்; எப்பொழுதும் மகிழ்ச்சியோடு வாழ்வில் வளருவார்கள் என்பதை கண்கூடாகக் காட்சியளித்து, மக்களுக்கு அறி வைப் போதிப்பதற்காகத்தான் ஆசிரியர் அவர்களை அழைத்திருக்கிறோம்.
அய்யா, நீங்கள் திருமணம் செய்து வைத்த நாங்கள் வாழ்வில் மிக நன்றாக இருக்கின்றோம் பாருங்கள்” என்று கூறக் கூடியமைக்கு ஒப்ப எங்களுக்கு ஒரு சாட்சியம்; உங்களுக்கும் அவர்கள் ஒரு சாட்சியம்.
நம்மை மிகவும் பயமுறுத்துவதற்காக கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘‘கல்யாணத்தைப் பண் ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்” என்று சொல்வார்கள்.
மணிவண்ணன் – ஜெயலெட்சுமி ஆகியோர் இரண்டையும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய திருமணத்தை மிக எளிமையாக செய்துகொண்டனர். மண வாழ்வில் வெற்றிகரமாக இருக்கிறோம் என்பதற்காக பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார்கள்.
‘வீடு’ என்றால், சிலர் ஆகாயத்தைக் காட்டுவார்கள்; வீடு என்றால், இதுபோன்ற இடத்தை நமக்குக் காட்டி யவர் தந்தை பெரியார் அவர்கள்தான். சுயமரியாதை இயக்கம்தான்.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று சொல்வார்கள். கடல் தாண்டினால்கூட, மிக முக்கியமாக பணத்தைச் சேருங்கள் என்று அர்த்தம்.
ஆனால், ஹிந்து மதத்தைப்பற்றி இங்கே உரையாற்றிய நம்முடைய ஜெயக்குமார் அவர்கள் சொன்னார்களே – அதுபோல, ஹிந்து மதமான ஸநாதன மதத்தினுடைய தத்துவம் என்னவென்றால், ‘‘கடல் தாண்டாதே!” என்பதுதான்.
திராவிடத்திற்கும் – ஆரியத்திற்கும்
என்ன வித்தியாசம்?
திராவிடத்திற்கும் – ஆரியத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால், உழைப்பதற்கு எல்லை யில்லை; அது உள்நாட்டிலா, வெளிநாட்டிலா, கடல் தாண்டிகூட சென்று உழைக்கலாம் என்று சொல்வதுதான் திராவிடம். உழைக்கும் கரங்கள் – முயற்சி!
‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” (621)
மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்ற ஸநாத னத்தை எதிர்த்து தந்தை பெரியார் கேட்டார், கல்வி வள்ளல் காமராசர் கேட்டார், அண்ணா கேட்டார், முத்தமிழறிஞர் கலைஞர் கேட்டார், இன்றைய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார், அதைவிட இன்றைய இளைய சமுதாயத்தினுடைய தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி கேட்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியம்.
தந்தை பெரியார்தான்
கேட்டார்!
‘‘தலையில் எழுதினானா? எவனய்யா எழுதி யது” என்று கல்வி வள்ளல் காமராசர் கேட்டார்.
பெரியார் அவர்கள் இதைவிட ஒருபடி வேக மாகக் கேட்டார். ‘‘அது என்ன? அமெரிக்காரன் தலையில் எழுதவில்லை; அவன் தலையைக் காட்டமாட்டேன் என்று போய்விட்டானா? ரஷ்யாகாரன் தலையில் எழுதவில்லையே – நம்முடைய தலையில் மட்டும் எழுதுகிற வரைக் கும் காட்டிக் கொண்டிருந்தார்களா?” என்று.
இப்படியெல்லாம் சொல்லி நம்மை ஏமாற்றி வைத்திருந்தார்கள். அதையெல்லாம் உடைத்துக் காட்டித்தான்-
எங்களால் முடியும்!
பகுத்தறிவால் முடியும்!
உழைப்பால் முடியும்!
திராவிடத்தால் முடியும்!
என்பதை மிக அழகாகக் காட்டுவதற்கு அடையாளம்தான் மணிவண்ணன் – ஜெயலட்சுமி இணையரின் குடும்பம். நல்ல குடும்பம் – ஒரு பல்கலைக் கழகம்.
‘‘இல்ல அறிமுக விழா’’ என்று போட்டிருப்பதுதான் சரியானதாகும்!
இவ்விழாவின் அழைப்பிதழில், ‘‘ஜெயமணி இல்ல அறிமுக விழா!” என்று போட்டிருக்கிறார்கள். ‘‘அறிமுக விழா” என்று போட்டிருப்பதுதான் சரியானதாகும்.
‘‘கிரஹபிரவேசம்” என்று வடமொழியில் சொல்வார்கள். தமிழில் ‘‘அறிமுக விழா” என்று அற்புதமான சொல்லைப் போட்டிருக்கிறார்.
‘‘நான் இந்த இடத்தில் வீடு கட்டியிருக்கிறேன்; அதனு டைய முகவரி இதுதான். என்னை சந்திக்கவேண்டும் என்றால், இங்கே வந்து சந்திக்கலாம்” என மற்றவர்களுக்கு ஓர் அறிமுக விழா!
இல்லத்தைத்தான் ஏற்கெனவே திறந்துவிட்டார்களே – அப்படி திறந்ததினால்தானே, உள்ளே இருக்கும் பொருள்களை வைத்திருக்கிறார்கள்.
நியாயமாகப் பார்த்தோமேயானால், வீட்டினை திறப்பவர் யார் என்றால், கொத்தனார்தான்.
ஆகவே, இல்ல அறிமுக விழா என்று போட்டிருப்பது மிக அற்புதமானதாகும்.
வீட்டிற்கு அழைத்து, இரண்டு விஷயங்களைக் காட்டினார். ஒன்று, குளியலறை, கழிப்பறை மிகவும் முக்கியமானது. அடுத்ததாக சமையல் அறை என்பது மிகவும் முக்கியமாகும்.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஊதாங்குழல் என்றால் என்னவென்றே தெரியாது!
நம்முடைய தாய்மார்கள், சகோதரிகளுக்கெல்லாம் தெரியும் – ஊதாங்குழல் வைத்து அடுப்பை ஊதி, ஊதி எரிய வைப்பார்கள். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஊதாங்குழல் என்றால் என்னவென்றே தெரியாது.
அந்த அடுப்பினில், காட்டுமரம், கருவேலமரம் போன்ற கட்டைகளைப் போட்டு எரிய வைக்கும்பொழுது, கண்கள் எல்லாம் எரியும்.
இப்பொழுது பார்த்தீர்களேயானால், கீழே அமர்ந்து சாப்பிடுகின்ற பழக்கம் அறவே இல்லை. எல்லோர் வீட்டிலும் டைனிங் டேபிள் இருக்கிறது. யாரையாவது கீழே அமர்ந்து சாப்பிட வைத்தீர்களேயானால், அவர் சாப்பிட்டு முடிந்து எழும்போது, இரண்டு பேர் அவரைப் பிடித்து எழு வைக்கவேண்டும்.
பழைய காலத்தில், வீட்டிற்கு விருந்தாளிகளை அழைத்தோம் என்றால், வெளியே ஓர் அண்டாவிலோ, குண்டாவிலோ தண்ணீர் வைத்திருப்பார்கள். அதற்குப் பக்கத்திலே ஒரு சொம்பு வைத்திருப்பார்கள். அந்த சொம்பினில் தண்ணீர் எடுத்து, கால் கழுவிவிட்டுத்தான் வருவார்கள். வீட்டின் வாசற்படி நிலை என்பது உயரம் குறைவாகத்தான் இருக்கும். அந்த நிலைப்படிக்கு அருகே ஒரு சிறுவனை நிற்க வைத்திருப்பார்கள். அந்த சிறுவன் வருகின்றவர்களைப் பார்த்து, ‘‘அய்யா, கொஞ்சம் குனிந்து வாருங்கள்”, ‘‘அய்யா கொஞ்சம் குனிந்து வாருங்கள்” என்று சொல்வான்.
அப்பொழுது குனிந்த தலையை நம்மாள் இன்னும் நிமிர்த்தாமல், நிமிராமல் இருக்கிறார்கள். யாருக்காவது பயனாடை அணிவிக்கும்போதுகூட, தலையை நிமிருங்கள் என்று நான் சொல்வேன்.
பெண்களின் குனிந்த தலையை
நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்!
பெண்களின் தலையை நிமிர்த்தவேண்டும். திருமணத்தின்போது மணமகளாக இருக்கின்ற பெண்ணைப் பார்த்து நான் வேடிக்கையாக சொல் வது உண்டு – அவர்களின் தலையை நிமிர்த்திய பங்கு இரண்டு பேருக்கு மட்டும்தான் உண்டு.
ஒருவர், தந்தை பெரியார்; இன்னொருவர் ஒளிப்படக்காரர். அவர்தான், தலையை கொஞ்சம் நிமிர்த்துங்கள், தலையை கொஞ்சம் நிமிர்த்துங்கள் என்று சொல்வார்.
பாட்டிலே பதிவு செய்தார் நாமக்கல்லார் –
‘‘தமிழன் என்று சொல்லடா –
தலைநிமிர்ந்து நில்லடா!”
என்பதுதான். அப்படியென்றால், தலையை குனிந்து கொண்டிருக்கிறான் என்றுதானே அர்த்தம். குனிந்த தலையை நிமிர்த்தவேண்டும். அதை மற்றவர்கள் செய்யவில்லை. திராவிட இயக்கம்தான் நிமிர்த்தியது – தந்தை பெரியார்தான் நிமிர்த்தியது – சுயமரியாதை இயக்கம்தான் நிமிர்த்தியது.
அந்த வகையில், கட்டட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் வீடு கட்டுவதற்கான டிசைனிங் போடு கிறார்கள்.
பலகீனம் எங்கே இருக்கிறதோ,
அங்கேதான் மூடநம்பிக்கை தாக்கும்!
வாஸ்து சாஸ்திரம் என்று கரடி விடுகிறார்கள்; பார்ப்பான் பிழைப்பதற்கு, மூடநம்பிக்கையை வலி யுறுத்துவதற்கு, அறிவுக்கு விலங்கு போடுவதற்காக.
அந்த வாஸ்து சாஸ்திரத்தை நம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்திருக்கிறார் ஒருவர். அவர் தோல்வியுற்று நொந்து போயிருக்கின்ற நேரத்தில், பலகீனம் எங்கே இருக்கிறதோ, அப்பொழுதுதான் மூடநம்பிக்கை தாக்கும்.
அவரிடம் போய் ஒருவர், ‘‘நீங்கள் ஏன் தோற்றீர்கள் தெரியுமா?”
‘‘ஏன்? சொல்லுங்கள் பார்ப்போம்!’’
‘‘உங்கள் வீடு வாஸ்து பார்த்து கட்டவில்லை. அந்த வாசற்படியை இடித்துவிட்டு, வேறு பக்கத்தில் வாசற்படி வைக்காததால்தான்” என்றார்.
வாசற்படிக்கு ஓட்டு இருந்து, அது நமக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், அதை இடித்துவிட்டு கட்டலாம், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
வாசற்படி என்ன தேர்தலில் ஓட்டுப் போடப் போகிறதா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
எவ்வளவு முட்டாள்தனமாக நம்முடைய அறிவைப் பாழ்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
வாஸ்து சாஸ்திரத்தில்,
வீட்டிற்குள் கழிப்பறை உண்டா?
பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள், நீதிபதிகள், அறிவியல் பட்டதாரிகள், மருத்துவர்கள், பொறி யாளர்கள் எல்லாம் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார் களே, அந்த வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டிற்குள் கழிப்பறை உண்டா? என்ற கேள்வியைக் கேளுங்கள்.
நிச்சயமாக, வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டிற்குள் கழிப்பறை இருக்கவே இருக்காது. ஆனால், இன்றைக்குக் கட்டப்படுகின்ற வீடுகளில், மாஸ்டர் பெட் ரூம் என்று ஒன்று இருக்கும். அதில் கழிப் பறை, குளியலறை எல்லாம் இருக்கும்.
அந்த அறைக்குள்ளே சென்ற ஒருவர், குளித்துவிட்டு, உடை மாற்றிக்கொண்டு வருவார்.
இது அறிவியல் ரீதியானது. உளவியல் ரீதியாகவும் நமக்கு நல்ல தோற்றம், தெம்பு இவை அத்தனையும் தருகிறது.
ஆகவே, அறிவு, பகுத்தறிவு, வாழ்வியல் இவை அத்தனையும் இங்கே இருக்கிறது.
இவ்விழாவிற்கு வந்திருக்கின்ற உங்களைப் பார்த்துக் கேட்பது, பகுத்தறிவாளர்களாக மாறினால், பெரியார் அவர்களுடைய கொள்கைகளைப் பின்பற்றினால், அவர் கடவுள் இல்லை என்று மட்டும் சொல்லவில்லை; சிக்கனமாக இருங்கள் என்றும் சொன்னார். அந்த சிக்கனத்தை இவர்கள் இரண்டு பேரும் கடை பிடித்த தால்தான், இன்றைக்கு இவ்வளவு பெரிய ஓர் அற்புதமான வீட்டைக் கட்டியிருக்கிறார்கள்.
அவருடைய திருமணத்திற்காக அவர் கடன் வாங்கி செய்திருந்தால், அந்தக் கடனை அடைப்பதற்கே பிரச்சினையாக இருந்திருக்கும். ஆனால், இப்பொழுது அது மூலதனம் அவருக்கு.
அதை வைத்து உழைத்தார்கள்; இரண்டு பேரும் சம்பாதித்தார்கள்; இன்றைக்கு ஓர் அழகிய வீட்டைக் கட்டியிருக்கிறார்கள்.
‘‘சுயமரியாதை வாழ்வு
சுக வாழ்வு!’’
ஆகவேதான், வரவுக்குட்பட்டு செலவழிக்க வேண்டும்; இதுதான் பெரியார் கண்ட வாழ்வியல். ‘‘சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வு!”
ஒவ்வொருவரும் தன்னுடைய வருமானத்திற் குட்பட்டு செலவழிக்கவேண்டும்; சேமித்து வைக்க வேண்டும்; இன்றைக்கு எங்கள் தோழர்கள் எல்லோரும் வாழ்வில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
திருமணங்களை நடத்தி வைக்கின்றோம், இல்லத் திறப்பு விழாக்களை நடத்துகின்றோம்; மற்றவர்களுக்கு உதவி செய்கின்றோம்; பகுத்தறிவு தோழர்கள் எல் லோருக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இதுதான் சுயமரியாதை வாழ்க்கை!
தனக்கென்று வாழாமல், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாழ்க்கையை இன்றைக்குப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவேதான், அருமைத் தோழர்களே! இந்தக் கொள்கையைப் பின்பற்றுங்கள்.
நாங்கள் தாழ்ந்து போகவில்லை,
வீழ்ந்து போகவில்லை!
இவ்வளவு ஆடம்பரமாக அவர் ஏன் இல்லத் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார் என்றால், ‘‘அன்றைக்கு அவர்களுடைய மணவிழாவில் சாப்பாடு போடவில்லை; நாங்கள் இன்றைக்கு வளர்ந்திருக்கின்றோம்; இந்தக் கொள்கையைப் பின்பற்றுவதினால், நாங்கள் தாழ்ந்து போகவில்லை, வீழ்ந்து போகவில்லை” என்பதை எல்லோருக்கும் அறிவித்து, ஒரு சமுதாய விழாவாக இவ்விழாவை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!
இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு – பெண்களை மேம்படுத்த சட்டங்களை செய்கின்ற நல்லரசாகும்!
நீங்களும் இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். தாய்மார்கள், சகோதரிகள், ஆசிரியயை களும் இங்கே இருக்கிறீர்கள். இன்றைக்கு அர சாங்கம், குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை யில், இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு – பெண்களை மேம்படுத்த சட்டங்களை செய்கின்ற நல்லரசாகும். இதற்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போட்டார்கள் என்றால், ஒப்பற்ற முதலமைச்சர் தலைமையில் இப்பொழுது காலைச் சிற்றுண்டியையும் கொடுக்கிறார்கள்.
பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தீர்களே யானால், மாதந்தோறும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது ‘திராவிட மாடல்’ அரசு – ஓராண்டிற்கு 12 ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறது.
ஆகவேதான், உங்கள் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளைப் படிக்க வையுங்கள். ஆண் பிள்ளைகளையும் படிக்க வைக்கவேண்டும்.
அதைத் தடை செய்வதற்குத்தான், இப்பொழுது இந்தப் பக்கத்தில் காவிகள் வருகின்றன.
மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாகக் கொண்டு வரவேண்டும் என்ற முயற்சிகள் நடைபெறு கின்றன. ஆண் எஜமானனாக இருக்கவேண்டும்; பெண் அடிமையாக இருக்கவேண்டும்.
‘‘எல்லோருக்கும் எல்லாமும்’’ என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கைகள்!
எந்தக் காலத்திலும் சுதந்திரத்திற்குப் பெண்கள் தகுதி உடையவர்கள் அல்ல என்று சொல்வதுதான் மனுதர்மம். அதை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கம். இன்னாருக்கு, இதுதான் என்று சொல்வது மனுதர்மம்; அதற்கு நேர் எதிரான ‘‘எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்” என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கை கள்.
இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி வளரவேண்டும் என்பதற்காகத்தான் தோழர்களே, இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
பூஜை அறை பூஜை அறை என்று சொல்லி, அந்த அறையில் நிறைய கடவுள் படங்களை வைத்திருப் பார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமாக இடம்பெறவேண்டியது, பூஜை அறையல்ல – புத்தக அலமாரிதான்!
ஆனால், நான் இங்கே இந்தத் தோழர்களுக்கு நிறைய புத்தகங்கள் கொடுத்தேன். ஏனென்றால், ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமாக இடம்பெற வேண்டியது, பூஜை அறையல்ல – புத்தக அலமாரிதான் மிகவும் முக்கியம்.
அந்தப் புத்தகங்களை வைத்துக்கொண்டு, புத்தாக்கத்தை உங்கள் வாழக்கையில் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதன்மூலமாக நீங்கள் நல்ல பகுத்தறிவாளர்களாக, நல்ல தன்னம்பிக்கை உள்ளவர்களாக, மூடநம்பிக்கையற்றவர்களாக நீங்கள் வளரவேண்டும்.
அதற்கு இந்த வீடு – ஜெயமணி இல்லம் எடுத்துக் காட்டு என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.