(‘தமிழர் காவலர்’ என்று அன்றே அழைக்கப்பட்ட மூத்த திராவிட இயக்க முன்னோடி சி.டி.நாயகம் அவர்களது சமூக நீதி பற்றிய ஆழமான கருத்துகள் 90 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளன. நீதிக்கட்சி, தி.க., தி.மு.க. செயல்படுத்திய அந்தப் பயணம் தொடரும் நிலையில் இக்கட்டுரை ஒரு வியப்பான கொள்கை முழக்கமாக.. ஆழ்ந்து படியுங்கள் – ஆசிரியர்)
நீதிக்கட்சி துவக்கப்பட்ட பொழுது சட்டசபை முதலிய இடங்களில் போதிய அளவு இடம்பெறாத இனத்தாரிலும் வருவதற்கே முடியாமல் தடுக்கப்பட்டி ருந்த இனத்தாரிலும் ஒரு குறைந்த எண்ணிக்கை உடையோராவது இடம் பெற வேண்டும் என்ற ஏற்பாட்டை சட்ட மூலமாக உறுதிப்படுத்துவதே (அதாவது சகல வகுப்பாருக்கும் சம சந்தர்ப்பம் வழங்குவதே) முதல் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்குக் கடும்முயற்சி செய்ய வேண்டி இருந்தது. அதற்கு இடையூறுகள் பல ஏற்பட்டன. மாற்றாரிடமிருந்து மாத்திரமல்ல. நடுநிலையிலுள்ளவர்களிடமிருந்தும் தன் இனத்தாரிடமிருந்தும் முட்டுக்கட்டைகள் புறப்பட்டன. அவற்றை எல்லாம் மீறி நீதிக்கட்சியார் தங்கள் விருப்பத்தில் வெற்றி பெற்றனர்.
இலக்கை நோக்கி…
சென்னை மாகாண சட்டசபையில் இத்தனை பெயராவது பார்ப்பனரல்லாதார் வர வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. சற்று பொறுத்துத் தேர்தலும் வந்தது. அதுவரை ஒதுங்கி இருந்தவர்கள் உள்ளம் பூரிப்படையும்படி குறிப்பிட்ட குறைந்த எண்ணுக்கு பன்மடங்காகப் பார்ப்பனரல்லாதார் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப் பட்டார்கள். இந்தச் சட்டம் செய்ய எடுத்த ஊக்கத்தின் பலன் இதோடு நிற்கவில்லை. அமைச்சர் கழகம் முழுவதுமே பார்ப் பனரல்லாதாராலேயே ஆக்கப்பட்டது.
சட்டசபையில் மாத்திரமல்ல. நாட்டாண்மைக் கழகம், நகராண்மைக் கழகம் இவற்றிலும் பார்ப்பன ரல்லாதாரே பெருந்தொகுதியார் இடம் பெற்றனர். நாளாக ஆக இவர்கள் எண்ணிக்கை சட்டசபையிலும், நாட்டாண்மை நகராண்மைக் கழகங்களிலும், பின்னால் வந்த கல்விக்கழகங்களிலும் பெருகிக் கொண்டே வந்தது. அடுத்த தேர்தலிலும் இவர்களே பெருந்தொகுதி யினராக வர ஆரம்பித்தனர். வரவர இந்நிலையங்களி லெல்லாம் பருத்தி நூல்காரர் (பார்ப்பனர்) எண்ணிக்கை குறுகிக் கொண்டே வந்தது. எல்லா இடங்களிலும் நூலணியாத பெருமக்களே இடம் பெற்று ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். நூலணியாத தூய உடலார் குறைந்தது இவ்வளவு பெயராவது சட்டசபையில் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருப்பது கூட பலருக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லாது போய்விட்டது அந்தச் சட்டத்தை எடுத்து விடலாம் என்று சொல்லவும் அந்த மக்களில் பலருக்கு மன உறுதி ஏற்பட்டுவிட்டது. அவ்விதவெளி உதவியும் கட்டுப்பாடும் இன்றித் தங்கள் உரிமையைத் தாங்கள் பெறக்கூடும் என்ற மன உறுதி நூலால் பழுதுபடாத தூய உடலார் பலருக்கு ஏற்பட்டது.
எதிர்ப்புகளை வென்று…
அப்படி அவர்கள் மனம் உரம்பெற்று வருங் காலத்தில் அவ்வினத்து அமைச்சர் முத்தையா முதலியாரால் அரசு வேலையிலும், தூய உடலார் இத்தனை பெயராவது இருக்கவேண்டும் என்ற ஒரு விதியை ஏற்படுத்த முன் வந்தனர்.
அதற்கு எதிராக முன்போலவே பலர் கூக்குரலிட் டார்கள். நடு நிலையில் நிற்க வேண்டிய பலர் ஏமாற்றப்பட்டு கூக்குரலுக்குப் பக்கப்பாட்டுப் பாடினர். தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடும் மனப்பான்மையுடைய அறிவைப் பறிகொடுத்த பதர்கள் அதற்குத் தாளம் போட்டனர். எனினும் அமைச்சர் முத்தையா முதலியார் அறிவுடையோர் உதவியால் அந்த விதியை நிலைநாட்டினார்.
பருத்தி நூல்காரர்கள் இத்தனை பேர், அவர்கள் தாயாதிகளாகிய ஆதிதிராவிடர் முதலியோர் இத்தனை பேர், நூலால் பழுதுபடாத தூய உடலார் இத்தனை பேர் என்ற விதி அரசியல் வேலை விதியில் உறுதியான இடத்தைப் பெற்றது. இப்பொழுதுள்ள முதல் அமைச்சர் உழைப்பால், நாட்டாண்மை நகராண்மை வேலை களிலும் அந்த விதி இடம் பெற்றுவிட்டது. இடையில் புகைவண்டித்தொடர் வேலையிலும் அந்த விதியின் சாயல் ஒட்டிக்கொண்டது
இந்த நிலைமையில் அரசியல் சட்டம் மாறப் போகிறது அதில் சட்டசபையில் பருத்தி நூல்காரர் இத்தனை பெயருக்கு மேல் வரக்கூடாதென்ற கட்டுப்பாட்டுச் சட்டம் எடுத்துவிடப்போகிறார்கள். அது இருக்கவேண்டும் என்று விரும்புவார் ஒருவரையும் காணோம். நூலணியாப் பெருமக்கள் இப்பொழுது விரும்புவதெல்லாம் அரசாட்சிப் பாது காப்பி லுள்ள ஒவ்வொரு வேலையிலும் தங்களுக்குரிய பங்கு தங்களுக்குக் கிடைக்கவேண்டுமென்பதே. அதற்குரிய விதி இப்பொழுதைய நிகழ்ச்சி முறையிலிருப்பது போதாது.
இப்பொழுதைய விதி என்னவென்றால் ஒவ்வொரு வேலைத்துறையிலும் இனி நியமிக்கப்படுகிற வேலை யில் பன்னிரண்டு பேரில் இருவர் பருத்தி நூல்காரராய் இருக்கவேண்டுமென்பது. இந்த விகிதம் பெரிதும் பழுதுடையது. நூற்றுக்கு மூன்று பேரே உள்ள பருத்தி நூல்காரருக்கு நூற்றுக்கு பதினாறு பேர் வேலை பெறவேண்டுமென்று விதித்திருப்பது அவர்களின் உரிமைக்கு அய்ந்து மடங்குக்கு மேல் அதிகமாக அவர் களுக்குக் கொடுத்ததாகும்.
விளைவுகள்
இப்படிச் செய்வதால் நூலணியாப் பெருமக்கள் பலருக்கு உரிமையாகிய சாப்பாட்டைப் பறித்துப் பருத்தி நூல்காரர் வாயில் போட்டதாகும்.
இந்நாட்டில் நிலவரிக்கு அடுத்ததாக அரசாட்சிக்குப் பெரும் வரும்படி தருவது கள்ளுக்கடை முதலிய கலால் வரியாகும். பயிரிடுபவர்களிடமும்.பயிர் நில முடையவர்களிடமும், கலால் துறையிலும் வரியை வாங்கி அந்த வரிசெலுத்திய மக்களின் பிள்ளைகளைப் பசியால் வருந்தவிட்டு, புளிஏப்பம் விடும் பருத்தி நூல்காரர்களைப் பருக்க வைக்க அவ்வரிப்பணத்தைச் செலவிடுகிறதென்றால், இதனிலும் பொருந்தாச் செயல் வேறொன்றும் இராது.
புது நியமனங்கள் குறித்து
பருத்தி நூல்காரர்களின் எண்ணிக்கைக்கு தக்க வாறு அவர்கள் பொதுப்பணத்தில் சம்பளம் பெறுவதை யாரும் தடுக்க விரும்பவில்லை ஆகையால் ஒவ் வொரு வேலைத் துறையிலும் நூற்றுக்கு மூன்றுக்கு மேல் அவர்கள் வேலை பெறக்கூடாதென்று வேலை விதியை மாற்றவேண்டும்.
மாற்றப்படவேண்டியது எண்ணிக்கை விகிதத்தில் மாத்திரமல்ல, நியமன முறையிலும் உடனே மாறுதல் ஏற்பட வேண்டும். நூற்றுக்கு தொண்ணூறு பெயர் பருத்திநூல்காரராக நிரம்பியிருக்கிற ஒரு வேலை நிலையத்தில் ஏற்படுகிற காலி இடத்தில் மேலே கேட்ட உரிமைப்படியுள்ள பெரும் விகிதப்படி நூற்றுக்கு மூன்று வீதம் பருத்தி நூல்காரரை நியமித்துக் கொண்டிருந்ததால் தற்போது அந்நிலையத்திலுள்ள நூற்றுக்கு தொண்ணூறான பருத்தி நூல்காரப் பூண்டு நூற்றுக்கு மூன்றாக குறைந்து மற்ற செடிகளை வளர விடுவது எப்பொழுது? இன்னும் இருநூறு ஆண்டா னாலும் முடியாது போலல்லவா இருக்கிறது? ஆகை யால் வேலை விகிதத்தில் நீதிக்கட்சியின் அடிப் படையான நீதியைச் செலுத்த வேண்டுமானால் அந்த வேலை நிலையத்தில் பருத்தி நூல்காரர்கள் நூற்றுக்கு மூன்றாகக் குறையும் வரை, புதுப் பருத்தி நூல்காரர் களை நியமிக்கவே கூடாது. இதுதான் பெரும்பாலும் நீதியான முறையாகும்.
இட ஒதுக்கீடு வேண்டும்
அவர்கள் எண்ணிக்கை உடனே நூற்றுக்கு மூன் றாகக் குறையும்படி இருக்கிற பருத்தி நூல்காரர்களில் அந்த விகிதத்திற்கு அதிகப்பட்டவர்களை உடனே வெளிப்படுத்திவிட்டு மற்ற இனத்தார்களை அவரவர் களுக்குரிய விகிதப்படி அந்த இடங்களில் நியமிப்பது தூய நீதியாகும். எனினும் அதை இப்பொழுது வற் புறுத்தவில்லை. தங்கள் இனத்துக்குரிய விகிதத்திற்கு அதிகமாக வேலை பெற்றுள்ள எல்லாரிடமும் இம் முறையை உடனே கைக்கொண்டு எல்லா இனத்தையும் அதற்குரிய உயர்வுக்கு கொண்டு வரவேண்டும்.
இம்முறை மாகாண அரசாட்சியின் கீழ் உள்ள வேலைகளில் மாத்திரம் அல்ல, நாட்டாண்மை, நக ராண்மை வேலைகளில் மாத்திரமல்ல, அரசாட்சியின் பெரும்பணத்தாலும் அரசாட்சியின் உதவியாலும் நடத் தப்படும் புகைவண்டி முதலிய போக்குவரத்துத்துறை வேலைகளிலும் வற்புறுத்தப்படவேண்டும். இது மாத் திரமல்ல. இம்மாகாணத்திலுள்ள அரசாட்சி வேலை துறைகளில் கணிசமானவை இந்திய அரசாட்சியின் கீழ்உள்ளன. தபால், தந்தி, வருமானவரி. தணிக்கை முதலிய வேலைத் துறைகள் அப்படிப்பட்டவை. இம்மாகாணத்தைப் பொறுத்தவரையிலாவது அவற்றி லும் இம்முறை கையாளப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த இரு அரசாட்சியாருக்குங் கீழ்ப்படாத அய்க்கோர்ட்டிலும் இந்த முறை ஆளப்படவேண்டும். இது மாத்திரம் போதாது. அரசாட்சிப் பண உதவியால் நடைபெறும் தனி உடைமைப் பள்ளிக்கூடங்களிலும் இம்முறை கையாளப்படவேண்டும். அப்பள்ளிக்கூடம் நடப்பது பொதுப் பண உதவியால், சில இனப் பிள்ளைகள் படியாத பள்ளிக்கூடத்திற்கு அரசாட்சிப் பண உதவி கிடையாது என்று சொல்ல எவ்வளவு நீதியும் உரிமையும் உண்டோ, அதற்கு மேலாகவே இம்முறையை வற்புறுத்துவதற்கு அரசாட்சியாருக்கு உரிமையும் நீதியுமுண்டு – இதைப் புறக்கணித்தால் அவர்கள் தன் கடமையில் தவறியவர்கள் ஆவார்கள்.
சிறந்த வழி
ஆதிதிராவிடப் பிள்ளைகள் படிக்க வேண்டு மென்று வற்புறுத்தி ஒரு முதலாளியின் மாட்டு மேய்ச்சி பிள்ளையையோ, குதிரைக்காரன் பிள்ளையையோ பள்ளிக்கூடத்தில் சேர்ப்பிப்பதால் அவர்களிடமுள்ள கல்வியில்லா இருள் மாறிவிடாது. ஆனால், அப் பள்ளிக்கூடத்தில் ஆறு வாத்தியார்களில் ஒருவர் ஆதிதிராவிடராய் இருப்பாரானால், ஆதிதிராவிடப் பிள்ளைகள் ஏராளமாக வந்து சேருவார்கள். இப்படியே மற்ற இனத்திலும் இப்படிச் செய்வதால் பொதுப் பணத்தில் தனக்குரிய வேலையை ஒவ்வொரு இனத் தாரும் அடைவதுடன் அவ்வினப் பிள்ளைகள் படிப்பதற்கும் எளிய வழியாகும்.
கடைசியாக இன்னொன்று, நீதிமன்றங்களில் வாது புரியும் வழக்குரைஞர்களுக்கும் இவ்விகிதப்படியே இடம் கொடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு நீதிமன்றத் திலும் இத்தனை பேர்தான் வாது புரியலாம் என்று உத்தரவிட அரசாட்சியாருக்கு உரிமை ஏற்படுத்திக் கொள்வதில் புதுமையோ நீதிக்குறையோ ஒன்றும் இல்லை. அப்படிக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ் வொரு இனத்திற்குமுரிய விகிதத்தை வற்புறுத்துவது மேற்சொன்ன நீதியின் பாற்பட்டதேயாகும். இப்படி இனவிகிதம் ஏற்படுத்துவதில் ஒருவருக்கும் இரக்கம் காட்டியதாகாது. அவரவர்களுக்குரிய உரிமையை அவரவர்களுக்கு கொடுத்ததேயாகும்.
ஒவ்வொரு வேலைக்கும் இன்னின்ன படிப்பு முதலியவை இருக்கவேண்டுமென்று சொல்வதற்கு யாரும் பின்வாங்க வேண்டாம். அப்படிப்பு முதலிய உரிமைகள் உள்ளவர்கள் இருக்கும்பொழுது, ஒவ் வொரு இனத்தாருக்கும் அவரவர்கள் உரிமை அளிக் கப்பட வேண்டுமென்பதுதான் வற்புறுத்தப்படுகிறது.
நீதிக்கட்சி துவக்கப்பட்டபொழுது எப்படி சட்ட சபையில் இட உரிமை எண்ணிக்கையை நிலைநாட் டினார்களோ, அதே மாதிரி இனி மேலேசொன்ன மாதிரி பொதுப்பண வேலைத்துறைகளிலும், இன உரிமை எண்ணிக்கையை. மேலே விளக்கப்பட்டபடி நிலைநாட்டுவது நீதிக்கட்சியின் வருங்கால முதல் வேலையாக இருக்கவேண்டும். அப்படிச் செய்தால் நீதிக்கட்சி நாட்டில் ஓங்கி வளரும்.
– 30.12.1934 ‘பகுத்தறிவு’, மாத ஏடு