தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024-2025 பற்றி நிதித் துறை முதன்மைச் செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு
19.2.2024 அன்று சட்டப்பேரவையின் முன் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை நாம் பார்ப்போம்.
முதலில், பணவீக்கம் தொடர்பானது. தேசிய சராசரியை விட நம்முடைய பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணவீக்கமும் முக்கியம். இதை, ஏழைகள் மீதான மறைமுக வரி என்று பொருளாதார வல்லுநர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் ஒரு அரசினுடைய கடமை. அந்த வகையில், தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.
மூலதனச் செலவினத்தைப் பொறுத்தவரை நாம் தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். குறிப் பாக, 2024-2025 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை ரூ.47,000 கோடி அளவில் நாம் கட்டமைப்புகளுக்காகச் செலவழிக்கப் போகிறோம். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத் திற்காக அதிகம் செலவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
நிதிப் பற்றாக்குறை 3.5%-க்குள் இருக்க வேண்டும் என்று நம்முடைய நிதிப் பொறுப்புடைமை சட்டமும், நிதிக் குழுவும் சொல்கிறது. அந்த வரம்பிற்குள்தான் நாம் இருக்கிறோம்.
அடுத்து, மொத்த பொருளாதாரத்தினுடைய அளவு, அதில் கடன் எவ்வளவு என்று பார்ப்பது. அதிலும் நாம் படிப் படியாக குறைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமான செய்தி.
அடுத்தது, நம்முடைய வருவாய் தொடர்பானது. நிதி அமைச்சர் அவர்களும் மிக விளக்கமாக இது குறித்து எடுத்துச் சொன்னார். மிக நெருக்கடியான காலகட்டத்தில், நம்முடைய வரி வருவாய் எவ்வளவு சிக்கல்களுக்கு உள்ளானது என்பது குறித்து விரிவாக நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம், தமிழ்நாடு சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் இயற்கைப் பேரிடர்கள்.
இயற்கைப் பேரிடர்
அந்த இயற்கைப் பேரிடர்களால் இரண்டு விதமான சிக்கல்கள் நமக்கு வந்தன. ஒன்று, வருவாயில் நமக்குக் குறைவு ஏற்பட்டது. வருவாய் அதிகம் கொடுக்கக்கூடிய சென்னையும், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களும் மிக்ஜாம் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதனால் வருவாய் குறைவு ஏற்பட்டது. அடுத்து, அந்த வெள்ள நிவாரணத்திற்கென்று நாம் செலவுசெய்ய வேண்டியிருந்தது. அதேபோல நீண்ட கால வெள்ள நிவாரணத்திற்காகவும் குறுகிய கால நிவாரணத்திற்காகவும் நாம் அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தது. இந்த நெருக்கடிக்கு இடையே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை நான் முன்வைக்க விரும்புகிறேன். அப்படி இருந்தாலும், நம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறது என்பதுதான் எங்களுடைய அனுமானம்.
மிக முக்கியமாகச் சொல்லப்போனால், நம்முடைய சொந்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 15% வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். பத்திரப் பதிவுத் துறையில் சென்ற வருடம் நாங்கள் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. ஆனால், அடுத்த வருடம் இதில் நாங்கள் நிறைய எதிர்பார்ப்புகளோடு இருக்கிறோம். அதேபோல, மற்ற வரி வருவாயைப் பொறுத்த வரையில் அடுத்த வருடம் நாங்கள் 1 கோடியை 95 லட்சம் கோடி அளவிற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஏன் இதை நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம் என்றால் நிறைய சீர்திருத்தங்களை நாங்கள் செய்திருக்கிறோம். நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுச் சொன்னார். வணிகவரித் துறையைப் பொறுத்தவரையில், அய்அய்டி அய்தராபாத் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, தரவுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தியிருக்கிறோம். இதன் வழியாக, வரி ஏய்ப்பைத் தடுத்து, நிகழ் நேரத்தில் செய்திகளைப் பரிமாறி வரி திரட்டுவதை அவர்கள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்ற வருடத்தின் கடைசிக் காலாண்டில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டோம்.
அதேபோல், பத்திரப்பதிவுத் துறையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதிலும் சென்ற அரையாண்டிலிருந்து முன்னேற்றங்கள் வந்திருக்கின்றன. நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அத்தனையும் அடுத்த நிதியாண்டில் 12 மாதங்களுக்குப் பலன் அளிக்கப்போவது. ஆகவே, நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழ்நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. அதனால், திரட்டப்படக்கூடிய வரி வருவாயால் நிச்சயமாக நாங்கள் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒன்றிய அரசினுடைய நிதிப் பகிர்வு குறைவு
ஒன்றிய அரசினுடைய நிதிப் பகிர்வு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது. 6.6 சதவீதமாக இருந்து இப்பொழுது 4.08 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த நிதிப் பகிர்வு மிக முக்கியமானது. இது இல்லாமல் எல்லா மாநிலங் களுக்கும் சிக்கல்கள் உண்டாகின்றன. இது குறித்து பலமுறை ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு எழுதியிருக்கிறது.
ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய மானிய உதவிகளும் குறைந்துகொண்டே வருகின்றன. இதுவும் முக்கியமான அம்சம். இது குறைந்துகொண்டே வந்தால் நாம் எப்படி நம்முடைய நலத்திட்டங்களுக்குச் செலவழிப்பது?
வரி அல்லாத வருவாயிலும் நாங்கள் இந்த முறை நன்றாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனெனில், கனிமம் தொடர்பில் நிறைய திருத்தங்கள் செய்திருக்கிறோம். புதிய சீர்திருத்தங்கள் நிறைய வந்திருக்கின்றன.
வணிகவரித் துறையைப் பொறுத்தவரை, மிகக் கவனமாக முழுமையாக உடனுக்குடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். நிதி துறையும் வணிகவரித் துறையும் மற்ற துறைகளோடு இணைந்து இந்தக் கண்காணிப்பை செய்துகொண்டிருக்கிறோம்.
மோட்டார் வாகனத்திற்கான வரி உயர்வும் அண்மையில் செய்யப்பட்டது. அதிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஒரு காலாண்டில் மோட்டார் வாகன விற்பனை அதிகமாக இருக்கிறதென்றால் அடுத்த காலாண்டில் வரி வருவாய் அதிகம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுவது உண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மோட்டார் வாகன விற்பனை மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு சக்கர வாகனங்களைவிட நான்கு சக்கர வாகனங் களுடைய விற்பனை சற்று அதிகரிக்கிறது வரிவருவாயைத் திரட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொழில் நுட்பத்தின் துணையோடு நாங்கள் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். வரி ஏய்ப்பைத் தடுப்பதிலும் நாங்கள் முழுமூச்சாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். நிதித் துறையின் சார்பாக அனைத்து துறைகளோடும் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறோம்.
குடிசையில்லா தமிழ்நாடு
அடுத்தது, முத்திரைத் திட்டங்கள். குடிசையில்லா தமிழ்நாடு என்ற கலைஞரின் கனவு இல்லத் திட்டம். நம்முடைய ஊரகப் பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப் பின்படி 8 லட்சம் குடும்பங்கள் இன்னும் குடிசையில் வாழ்ந்துகொண்டிருப்பதாக எங்களுக்குத் தெரிய வந்தது. அடுத்த 7 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கெனவே இருந்த திட்டங்களில் ஒரு வீடு இரண்டே கால் லட்சம் அளவில்தான் கட்டப்பட்டு வருகிறது. அது பயனாளி கள் மத்தியில் மிகவும் சிக்கலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. அவர்கள் கடன் வாங்கி திட்டங்களை முடிக்க முடியாமல் இருந்தார்கள். எனவே, இது மூன்றரை லட்சம் என்ற உயர் அளவை நிர்ணயித்து இந்தத் திட்டம் வந்திருக்கிறது.
இதோடு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதுபோல் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் இரண்டரை லட்சம் வீடுகள் சீரமைக்கப்பட வேண்டும். இத்தனை வருடத்தில் பராமரிக்க முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை குடும்பங்களுக்கு நாம் உதவ வேண்டும் என்பதற்காக ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சம் வரை சீரமைப்பதற்காக அந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவிடப்படும்.
வறுமை ஒழிப்பு என்பது இருக்கக்கூடிய திட்டங்களை ஒருங்கிணைத்து, தேவைப்படும் நபர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கக்கூடிய திட்டம். இந்தியாவிலேயே இரண்டா வதாக, கேரளாவுக்கு அடுத்தபடியாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் தமிழ்நாட்டில் 2.2% மக்கள் பன்முக வறுமைக் குறியீட்டின் கீழ் வாழ்கிறார்கள். 2 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் சராசரியாக இருக்கும் என்று எடுத்துக்கொண்டால், 5 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களையெல்லாம் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதற்காக இந்தத் திட்டம்.
’தமிழ்ப் புதல்வன்’ திட்டம்.
அடுத்து, ’தமிழ்ப் புதல்வன்’ திட்டம். புதுமைப்பெண் திட்டம் பெற்ற வெற்றி அனைவரும் அறிந்தது. அந்தத் திட்டம் வந்த பிறகு உயர்கல்வியில் பெண்களுடைய சேர்க்கை அதிகரித்தது. இடைநின்ற பெண்களும் கல்லூரிக் குத் திரும்பி வந்தார்கள். அதனால், அரசுப் பள்ளியில் 6 முதல் 12 வரை படித்த மாணவர்களுக்கு தங்களுடைய உயர்கல்வி யைத் தொடர்வதற்காக ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்க இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொல்குடி என்ற திட்டம் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக. அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அவருடைய வாழ்விடங்கள் மேம்பாடு, திறன் மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு தொடர்பான மிகப் பெரிய திட்டம்.
காலை உணவுத் திட்டம்
புதுமைப்பெண். 2,73,000 பெண்களுக்குப் பயனளிக்கக் கூடிய திட்டம். ரூ. 370 கோடி ஒதுக்கியிருக்கிறோம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவி லேயே முதன்முறையாக நாம் அறிமுகப்படுத்தியதற்குப் பின்னால் தெலங்கானா பின்பற்றிக்கொண்டிருக்கிறது. காலை உணவுத் திட்டத்தில் 15 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். இப்பொழுது, ஊரகப் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத் தப்படவிருக்கிறது. அதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
விடியல் பயணம். பெண்களுடைய பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியத் திட்டம். இதுவரை ஒரு வருடத்திற்கு 444 கோடி அளவிற்கு அவர்களுடைய பயணங்கள் இருக்கக்கூடிய திட்டத்திற்கு ரூ.3,000 கோடி.
நான் முதல்வன் திறன் மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டம். அதற்கும் நிதி கணிசமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமை
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்குச் சென்ற வருடம் நிதிநிலை அறிக்கையில் ரூ.7,000 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தபோது ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் பயன்பெறும் வகையில் அந்தத் திட்டம் இருக்கும் என்று அறிவித்தார். இன்று இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் பயன்பெற்றுவரும் மகளிரின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரம். அந்தத் திட்டத்திற்காக இந்த வருடம் மிகக் கணிசமான அளவு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கப் பட்டிருக்கிறது.
சுய உதவிக் குழு வங்கிக் கடன் இந்த முறை ரூ.35,000 கோடி நிர்ணயித்திருக்கிறோம். பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் அதுவும் மிக முக்கியமான அம்சம். பெண் தொழிலாளர்களுக்கான முக்கியமான அம்சம் இது. மேலும், இந்தியாவிலேயே தொழிலாளர் பங்கேற்பில் பெண்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் தொடங் கப்படும் ஒவ்வொரு புதிய தொழிற்சாலையிலும் 500-க்கும் மேற்பட்ட பெண்களைப் பணிக்கு அமர்த்தினால் – பெண்கள் மட்டுமல்ல; மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என இந்த மூன்று வகை பிரிவினரையும் சேர்த்து 500 பேருக்கு மேல் பணியமர்த்தினால், அந்த மூன்று வகைத் தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் 10% நாங்கள் கொடுக்கவிருக்கிறோம்.
குழந்தைகள் வளர் காப்பகம்
ஒவ்வொரு தொழிற்சாலை வளாகத்திலும் பெண் தொழிலாளர்களுக்குத் தங்களுடைய குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தைகள் வளர் காப்பகம் நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இன்னொரு முக்கிய மான சிறிய திட்டம் உயரிய நோக்கம் என்று சொல்லலாம்… திருமணம் அல்லது உயர்கல்வி என ஏதேனும் ஒரு காரணத் தினால் பணிபுரியும் பெண்கள் தங்களுடைய பணியிலிருந்து இடைநிற்க நேரிட்டு மீண்டும் பணிபுரிய வேண்டும் என்று சொன்னால், அவர்களுக்குத் திறன் மேம்பாடு அளிக்கத் திட்டம் வகுத்திருக்கிறோம். மகளிர் நலனுக்காக பல முக்கிய மான திட்டங்கள் உள்ளன. இது தொடர்பாக, ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறோம்; புதிய திட்டங்களும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஒரு முக்கியமான அம்சத்தைக் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. 7.5% உள் ஒதுக்கீடு மூலமாக 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் படித்துவருகிறார்கள். அவர்களுடைய கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. இதற்காக வருடத்திற்கு ரூ.511 கோடி ஒதுக்கி நாம் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.
வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை வழங்கும் திட்டம்
புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை பற்றி முன்பு குறிப்பிட்டேன். இதையும் தாண்டி, அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க முற்பட்டால் அவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
கல்விக்காக ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள். அதேபோல, திறன்மிகு வகுப்பறைகள் 15,000. இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்பயிற்சி நிறுவனங் கள் தொடங்கப்படவுள்ளன. ஏற்கெனவே சொன்னதுபோல் தொழில் பயிற்சி தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக உள்ளன. தொழில்துறை 4.0 தகுதிக்குச் சென்ற ஆண்டு தரம் உயர்த்தப் பட்டன. அரசு நடத்தும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை விகிதம் 95 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. படித்து முடித்த மாணவர்களுக்கு 90% வேலை வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே புதிதாக நாம் 10 இடங்களில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தவிருக்கிறோம். குறிப் பிட்ட மாவட்டத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இவை நிறுவப்படும்.
அண்மையில் தூத்துக்குடியில் மிகவும் பாதிப்புக்குள்ளான ஏரல் பகுதியில் அங்கு ஒரு அய்டிஅய் நிர்ணயிக்கப்படுகிறது. நாமக்கல் என்று எடுத்துக்கொண்டால் சேந்தமங்கலம். அதுவும் பிற்படுத்தப்பட்ட பகுதி. வேப்பூர், குஜிலியம்பாறை ஆகிய அனைத்துப் பகுதிகளுமே பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தப்பட்டுள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடிய அத்தனை இடங்களுமே பிற்படுத்தப்பட்ட பகுதிகள். அங்கேயுள்ள மாணவர்களின் நலனுக்காக இது. அதே நேரம், நல்ல வேலைவாய்ப்பும் அவர்களுக்கு உண்டு.
போட்டித் தேர்வுப் பயிற்சி
போட்டித் தேர்வுப் பயிற்சி மிக முக்கியமான ஒன்று. சென்ற முறை நாம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததுபோல அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகக்கூடிய மாணவர்களுடைய எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதால் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 நாம் கொடுப்பதாகச் சொல்லியிருந்தோம். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வில் பங்குபெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் கொடுப்பதாக ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்னொரு மிக முக்கியமான ஒரு கவலையை நாம் அனைவரும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு இளைஞர்களுடைய பங்கேற்பு குறைவாக இருக்கின்றது. இதற்காகவும் சென்ற ஆண்டு நாங்கள் ஒரு போட்டித் தேர்வுப் பயிற்சி முறையை நாங்கள் ஆரம்பித்தோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறை ஆயிரம் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆறு மாத காலம் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு அந்தப் பயிற்சியைக் கொடுக்கும்போதுதான் நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறோம்.
கல்விக் கடன். ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்த நிதியாண்டில் கல்விக் கடன் கொடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதேபோல், முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ரூ.8 லட்சம் கோடி என்று நிர்ணயித்திருக்கிறோம். இது சென்ற ஆண்டைவிட 14% அதிகம். இதை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறோம். ஏனெனில், 12 மாத காலம், ஏப்ரல் மாதத்திலிருந்து நமக்கு இருக்கிறது. அதில் மழையும் தேர்தலும் குறிக்கிடாத அடுத்த ஆண்டில் முழுமையாக 12 மாதங்களும் கிடைக்கும் பட்சத்தில் ரூ.8 லட்சம் கோடியை தேவையான நபர்களுக்கு, முன்னுரிமை தரக்கூடிய அத்தனை துறைகளுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு நிறுவன தொழில் முனைவோருக்கு, கல்லூரி மாணவர்களுக்கு அதைக் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்.
பல்வேறு நலத்திட்டங்களை நாம் செயல்படுத்திவரும் போது நம் தொலைநோக்குப் பார்வையானது எதிர்காலம் நோக்கியும் இருக்க வேண்டும். எதிர்காலமானது அறிவுசார் பொருளாதாரம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அது குறித்து, தமிழ்நாடு அரசு மிக கவனமாகப் பார்த்து புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறது.
புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். சமீபத்தில் விழுப்புரத்தில் உள்ள ஒரு நியோ டைட்டில் பார்க்கை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள். இதுபோன்ற புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக தூத்துக்குடி, வேலூர், திருப்பூர். அதேபோல, அடுத்த கட்ட இடங்களான சேலம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.
திருச்சியில் 3 லட்சத்து 64 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். மதுரை மாட்டுத்தாவணிக்கு அருகே 3,00,000 சதுர அடி மதிப்பீட்டில் ரூ.350 கோடி ரூபாய் செலவில் மீண்டும் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
இப்பொழுது வளர்ந்து வரும் நகரங்களில் கோவை மிக முக்கியமான ஒரு தகவல் தொழில்நுட்ப மய்யமாக உருவெடுத்துவருகிறது. அதில் புதிதாக ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டப்படும். அதனால் கோவை இன்னும் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல மதுரையில் தொழில் புத்தாக்க மய்யம் ஒன்று அமைக்கப்படும். சிறு தொழில் நிறுவனம் தொடர்பாக சத்தியமங்கலத்தில் ஒரு தொழில்பேட்டை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த ஊதியத்தில் மட்டுமல்லாமல் அதிக ஊதியத் திலும் நம் மாணவர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். அதிலும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அந்தப் பயணத்தில் நாம் ஈடுபட வேண்டும். எனவே, செயற்கை நுண்ணுறிவு இயக்கம் ஒன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நுண்ணறிவினுடைய தாக்கம் இனிவரும் காலங்களில் மிக அதிகமாக இருக்கும். அந்தத் தாக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படி எதிர்கொள்வது, எப்படி இலகுவாகக் கையாள்வது என்பது குறித்து அந்த இயக்கம் நிச்சயமாக நமக்கு வழிநடத்தும்.
கோவையில் நூலகம்
கோவையில் ஒரு மாபெரும் நூலகம் கட்டப்படும். நூலகம் மட்டும் இன்றி, அங்கு இருக்கக்கூடிய தொழில் முனையும் திறன் கொண்ட தொழில் முனைவோர் மாண வர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு அறிவியல் மய்யம் அமைக்கப்படும். நிச்சயமாக ஒரு அறிவுசார் சமூகத்தின் மிக முக்கியமான அடையாளமாக கோவையில் கட்டப்படக்கூடும் அந்த மையம் திகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வுக்காக ஒரு முக்கியமான திட்டம். புற உலகச் சிந்தனை அற்ற மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளுக்காக ஒரு உயர் சிறப்பு மய்யம் சென்னையில் அமைக்கப்படும். ரூ. 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக முக்கியமான ஒரு திட்டம்.
மூன்றாம் பாலினத்தவர் கல்லூரியில்…
மூன்றாம் பாலினத்தவர் கல்லூரியில் படிக்கும்பொழுது அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்களுடைய ஆதரவு கிடைப்பது சற்று சந்தேகம் என்பதால் அவர்களுடைய கல்லூரிப் படிப்பை விட்டுவிடுகிறார்கள் என்ற செய்தி வெளி வந்ததை நான் முதலமைச்சரிடம் காட்டியபொழுது இதற்கு ஒரு திட்டம் வகுத்தால் நன்றாக இருக்கும் என்றார். அதைப் பின்பற்றி மூன்றாம் பாலின மாணவர்கள் கல்லூரி படிப்பைப் படித்தால் முழுமையாக அவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
35 வயதுக்கு மேற்பட்ட கைவினைஞர்கள், கலைத் தொழிலாளிகளுடைய தொழிலை நவீனப்படுத்துவதற்கான ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈ-ஆபிஸ் என்று சொல்லக்கூடிய நம்முடைய தலைமைச் செயலகத்திலிருந்து துறை அலுவலகம் வரைக்கும் இந்தப் புதிய திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை விரிவுபடுத்துவ தற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பதிவு துறைக்காக ஒரு திட்டம், காவல்துறையை நவீனப்படுத்த ஒரு திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், மொழித் தொழில்நுட்பத்தில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க ஒரு திட்டம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
பசுமைப் பயணம்
அடுத்தது, பசுமைப் பயணம். நீலக் கொடி சான்றிதழ் பெறுவதற்காக கடற்கரைகளைச் சீரமைக்கும் திட்டம், நெய்தல் மீட்சி இயக்கம், அடையாறு நதிச் சீரமைப்பு, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் நதிக்கரைகளைச் சீரமைக்கும் திட்டம், நகர்ப்புறப் பசுமை இயக்கம், 500 மின் பேருந்துகள் வாங்கும் திட்டம், சிற்றுந்துத் திட்ட விரிவாக்கம்.
அடுத்தது கட்டமைப்புத் திட்டம். புதிய குடிநீர் திட்டம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சுமார் ரூ.7,800 கோடி அளவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, பன்னாட்டு நிதி உதவி பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறோம். இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. விரைவில் பணி தொடங்கப்படும்.
குடிநீர் திட்டங்கள்
நிதிநிலை அறிக்கையில் மூன்று புதிய குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, பெரம்பலூர் கூட்டுக் குடிநீர் திட்டம். அது பெரம்பலூர் நகராட்சிக்கு மட்டுமல்ல; இறையூர், பாடலூர் ஆகிய இரண்டு இடங்களில் இருக்கக் கூடிய சிப்காட் தொழிற்சாலைகள் ஒவ்வொன்றுக்கும், தோல் இல்லாத காலணித் தொழிற்சாலை ஒவ்வொன்றுக்கும், அநேகமாக 15,000 – 20,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக்கூடிய அந்தத் தொழிற்சாலைகளுக்கும் அந்த நீர் போய்ச் சேருமளவுக்கான திட்டம் அது.
இரண்டாவது, திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் மாநகராட்சி ஆத்தூர், வத்தலகுண்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குப் பயணிக்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம். மூன்றாவது, நாமக்கல் மாவட்டம். அதேபோல, எருமைப்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கான திட்டம் மிக முக்கியமான ஒன்று.
ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, நெடுஞ்சாலைத் துறைகள் சார்பாக சுமார் ரூ.10,000 கோடி அளவில் இந்த வருடம் மட்டும் நாம் சாலைகளை மேம்படுத்தப்போகிறோம். சிங்காரச் சென்னை திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் வளர்ச்சி பெருக வேண் டும் என்பதற்காகப் பல திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
சாலைகளில் மழை வெள்ளம் வந்தால் கழிவுநீர் கலந்துவிடுவதாக அதிகக் கவலையோடு புகார்கள் வந்தன. அதற்காக ரூ.940 கோடி செலவில் ஒரு புதிய திட்டம் செயல் படுத்தப்படப்விருக்கிறது. புதிய கல்லூரிகள், அய்டிஅய், புதிய மருத்துவமனை கட்டடங்கள் வரப்போகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தினுடைய இரண்டாம் கட்டப் பணிகள் மிகத் துரிதமாக நடந்துவருகின்றன. அதனுடைய முதல் கட்டத்தின் ஒரு பகுதி, அநேகமாக 2025 டிசம்பரில் போரூர் முதல் கோடம்பாக்கம் வரையிலான பணிகள் முடிவெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மெட்ரோ ரயிலை நீட்டிப்பதற்காக…
அதேபோல கோவை, மதுரைக்காக நம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதோடு சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பதற்காக ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது. அதேபோல், கோயம்பேட்டிலிருந்து ஆவடி வரையும், பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் வரையும் நீட்டிப்பதற்கான அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது.
மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, மெட்ரோ ரயில் திட்டமானது தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் 50-50% அடிப்படையில் இணைந்து நடத்துவது. இரண்டாம் கட்டப் பணிகளை மொத்தம் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், ஒன்றிய அரசுக்கு நாம் எழுதி அவர்கள் இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஒன்றிய அரசின் பங்களிப்புக்கும் பன்னாட்டுக் கடன் உதவிக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. அது குறித்து நாம் ஒன்றிய அரசுக்கு எழுதியிருக்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். ஒருவேளை ஒன்றிய அரசிலிருந்து அந்த ஒப்புதல் கிடைத்தால் நம்முடைய நிதிநிலைமை இன்னும் சீரடையும் என்பது என்னுடைய கருத்து. ஏனெனில், நடப்பு நிதியாண்டில் சென்னை மெட்ரோவுக்குக் கொடுத்த நம்முடைய சொந்த வருவாயிலிருந்து கொடுத்த நிதி ரூ.9,000 கோடி. அடுத்த வருடம் நாம் செலவழிக்க வேண்டியது ரூ.12,000 கோடி. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும்விட ரூ.63 ஆயிரம் கோடி அளவில் கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருப்பது, அதுவும் மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரத்தை வைத்துச் செயல்படுத்திக்கொண்டிருப்பது தமிழ்நாடு மட்டுமே. இந்தத் திட்டத்தின் மூலமாக நம்முடைய நிதிச் சுமை சற்று அதிகமாகிறது. ஒரு வருடத்திற்கு ரூ.12,000 கோடி நாம் செலவுசெய்ய வேண்டுமென்றால் அதற்காக நாம் நிதி திரட்ட வேண்டியிருக்கிறது அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ஆகவே, ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் நமக்கு சற்று இலகுவாக இருக்கும். அது குறித்து நாங்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கி றோம்.
ஜவுளித் துறை
ஜவுளித் துறை குறித்துப் பல்வேறு கவலைகள் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. அதை நவீனமயமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் விண்வெளித் தொழில் & உந்துசக்திப் பூங்கா அறிவிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட் டங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்பட்டிருக் கின்றன. மிக முக்கியமான, ஆயத்த தொழில் வளாகங்கள் கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜவுளிப் பூங்காக்கள்
ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஈரோடு, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் மினி ஜவுளிப் பூங்கா முதன்மையாக அமையவிருக்கிறது. அதே போல, விருதுநகர், சேலத்தில் இரண்டு முக்கியமான ஜவுளிப் பூங்காக்கள் அமையவிருக்கின்றன. அதிக வேலைவாய்ப்பு களைத் தரக்கூடிய முதலீடுகளை ஈர்ப்பதும் நம்முடைய நோக்கம். அதற்காக இதையெல்லாம் நாம் செய்து கொண்டி ருக்கிறோம்.
இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழு முதன்மையான நோக்கங்களை வைத்துத் தயாரிக்கப்பட்டது. நலத் திட்டங் களைச் செயல்படுத்துவதில் நாம் தொய்வடையக் கூடாது என்பது ஒருபுறம். இன்னொரு புறம், கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதேநேரம், நமக்கு இருக்கக்கூடிய சவால் களையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
உண்மையில், இந்த நிதிநிலை அறிக்கை பல்வேறு சவால்களுக்கிடையே தயாரிக்கப்பட்டது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். சவால்கள் என்று சொன்னால் ஒன்று வரி வருவாய். இன்னொன்று, இயற்கைப் பேரிடர்களால் நமக்கு இருக்கக்கூடிய சிக்கல். அதனால் வருவாய் நாம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. அதே நேரம், இயற்கைப் பேரிடர் களுக்கு நாம் நிவாரணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வருடம் நமக்குக் கிடைத்த ஜிஎஸ்டி இழப்பீடு அடுத்த வருடம் நமக்குக் கிடைக்காது. ரூ.20,000 கோடி அளவுக்கு நமக்கு இழப்பு. அது ஒரு சிக்கல். இதற்கு முன்பு நான் சொன்ன சென்னை மெட்ரோ ரயில் இன்னொரு சிக்கல். சென்னை மெட்ரோ ரயிலை முதல் கட்டம்போல் செயல்படுத்தியிருந்தால் ரூ.12,000 கோடியை நம்முடைய நிதி ஆதாரத்திலிருந்து நாம் செலவழித்திருக்க வேண்டிய தேவை இல்லை. நாம் கடன் சற்று குறைவாக வாங்கி இருக்க முடியும் அல்லது வேறு நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருக்க முடியும்.
அடுத்ததாக, மிக முக்கியமான ஒன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் நட்டத்தை ஒவ்வொரு வருடமும் 75-90% அரசு ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை. அது மிக முக்கியமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற வருடம் அதாவது நடப்பு நிதியாண்டில் நாம் கொடுக்க வேண்டியது என்று உத்தேசித்த தொகை சுமார் ரூ.3,000 கோடி. ஆனால், நாம் அதிகமாகக் கொடுத்திருப்பது ரூ.15,000 கோடி. மொத்தம் ரூ.17,717 கோடி நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இது வருவாய்ப் பற்றாக்குறையில் பிரதிபலிக்கிறது.
2017 ஆம் ஆண்டில் இதே போன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தினுடைய நட்டத்தை அரசு ஏற்றுக் கொள்ளும் என்ற திட்டத்தை அறிவித்தது. உதய் என்ற திட்டம். அந்தத் திட்டத்தை அறிவித்தபோது, அரசு எவ்வளவு நட்டத்தை ஏற்றுக்கொள்கிறதோ அந்த அளவு தொகையை நிதிப் பற்றாக்குறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று சொல்லி இருக்கிறார்கள். அதேபோல, அரசு திரட்டக் கூடிய கடன் உச்சவரம்பில் அந்தத் தொகை கழித்துக் கொள்ளப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். உதய் திட்டத்திற்கு எப்படி நமக்குக் கிடைத்ததோ அதேபோல இதற்கும் கொடுங்கள் என்று நான் ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் வருவாய்ப் பற்றாக்குறை பொறுத்தவரையில் இரண்டாகக் காண்பித் திருக்கும்.
மேலே குறிப்பிட்டவற்றின் காரணமாக, நாம் நினைத்ததை விட ரூ.17,000 கோடி அதிகமாகச் செலவிட வேண்டியிருந்தது. ஆனால், நம்முடைய சிறப்பான நிதி நிர்வாகத்தால் கிட்டத் தட்ட ரூ.8,000 கோடி அளவிற்கு வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்து இருக்கிறோம். அதற்கு மிக முக்கியமான காரணம், புதிதாகத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு நிதி மேலாண்மை நாம் சீர்படுத்தி இருக்கிறோம். பப்ளிக் ஃபண்ட் ட்ராக்கிங் சிஸ்டம் (பி.எஃப்.டி.எஸ்.) என்று சொல்லக்கூடிய நிதி மேலாண்மை அமைப்பை நாங்கள் நிறுவி இருக்கிறோம். ஏனெனில், இதற்கு முன்னால் கருவூலத்திலிருந்து ஒவ்வொரு துறை அலுவலகத்திற்கும், செயல்படுத்தும் அமைப்புகளுக்கும் நிதி விடுவிக்கப்படும். நிதி செயலாக்கம் எப்படி இருந்தாலும் நிதி அங்கேயே தேங்கி இருக்கும். ஒவ்வொரு வங்கியிலும் தேங்கி இருக்கக்கூடிய நிதியின் அளவு சில ஆயிரம் கோடியைத் தொட்டது. அந்த நேரத்தில், நாங்கள் ஒரு ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்து, அந்தச் சேமிப்பு நிதியையெல்லாம் தொடர்ச்சியாக வாங்கி, அதையும் இதில் பயன்படுத்தியிருக்கிறோம்.
இதுபோல இனிமேலும் அந்தச் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக பி.எஃப்.டி.எஸ். அமைப்பை நிறுவியிருக்கிறோம். அந்த அமைப்பின் வழியாக சுமார் ஒரு லட்சம் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது என்பதை எங்களால் கண்டறிய முடியும். ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை தேங்கிவிடாமல் இருப்பதையும் இந்த அமைப்பின் மூலம் உறுதிப்படுத்தி யிருக்கிறோம்.
இந்த முறையைக் கடந்த மூன்று நான்கு மாதங்களாகச் செயல்படுத்தியதால் இந்த அளவிற்கு வருவாய்ப் பற்றாக்கு றைக் குறைக்க முடிந்தது. அபாயகரமான அளவிற்குச் சென்று விடாமல் தடுத்துக் கட்டுப்படுத்த முடிந்தது. அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக எங்களால் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த மதிப்பீடுகளில் தெரிவிக்கப் பட்டிருக்கும் வருவாய்ப் பற்றாக்குறையைவிட எங்களால் இன்னும் குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த வகையில் இந்த நிதிநிலை அறிக்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, அதே சமயத்தில் வருவாய் இழப்பு, ஒன்றிய அரசிடமிருந்து வரக்கூடிய ஒப்புதல்களால் பல திட்டங்களில் காலதாமதம் என்று இருந்தாலும், மிகவும் கவனமாகப் பார்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் திட்டங்கள் சென்றுசேர வேண்டும் என்றும், அனைத்துத் தரப்பு மக்களையும் இது திருப்திப்படுத்த வேண்டும் என்றும் யோசித்து கவனமாகச் செதுக்கிய நிதிநிலை அறிக்கை இது.
நம்முடைய வளர்ச்சி வீதம் அதிகம்
எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு பொருளா தாரம் மிகச் சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. தேசிய சராசரியைவிட நம்முடைய வளர்ச்சி வீதம் அதிகம்; நம்முடைய பணவீக்கம் குறைவு. அதேநேரம், நாம் இந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள, இந்த முன்னேற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாம் தொடர்ந்து கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும்; நலத்திட்டங்களில் நாம் முதலீடு செய்ய வேண்டும்; அடுத்த தலைமுறையை நாம் இன்னும் சிறப்பாகத் திறன் மேம்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது.