பாட்னா, பிப். 21- பீகார் மாநிலம் பகல் பூரில் உள்ள விக்ரமசிலா மகாவிகாரா பல்கலை.யில், 42 ஆண்டுகளுக்குப்பின் அகழ்வாராய்ச்சி பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் ககல்கான் என்ற இடத்தில் உள்ளது விக்ரமசிலா மகாவிகாரா பல்கலைக் கழகம்.
இது 8ஆ-ம் நூற்றாண்டில், பால வம்ச மன்னர் தர்மபாலாவால் கட்டப் பட்ட புத்தமத மடாலயம் மற்றும் பல்கலைக்கழகம். இந்தியாவில் உள்ள 3 முக்கிய புத்தமத மடலாயங்களில் இதுவும் ஒன்று.100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்மற்றும் சுமார் ஆயிரம் மாணவர்களுடன் இந்த பல்கலைக் கழகம் இயங்கி வந்தது.
இங்கு புத்தமத வேதங்கள், தத்துவம், இலக்கணம், மெய்யியல், இந்திய சாஸ்திரம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இங்கு பயின்றவர்கள், உலக முழுவதும் புத்த மதத்தை பரப்புவதற்காக சென்றனர்.
மவுரிய பேரரசு பர்ப்பனர் சுங்கன் என்பவரால் முடிவிற்கு வந்த பிறகு புத்த மதம் ம்ற்றும் அது தொடர்பானவைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வந்தது.
இங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 1972ஆ-ம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதில் மடாலய கட்டடம், நூலக கட்டடம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் அகழ்வாராய்ச்சி பணி கள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப் பட்டன. தற்போது இங்கு மீண்டும் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து பாட்னாவில் உள்ள இந்திய அகழ்வராய்ச்சி துறை நிபுணர் கவுதமி பட்டாச்சார்யா கூறும்போது, ‘‘பகல்பூரில் அகழ்வாராய்ச்சி பணி தொல்பொருள் ஆய்வு நிபுணர் ஜலஜ் குமார் திவாரி மேற்பார்வையில் தொடங்கியுள்ளது.
புதிய அகழ்வாராய்ச்சி மூலம் விக்ரமசிலா மகாவிகாரா பல்கலைக் கழகம் பற்றி புதிய தகவல்கள் மற்றும் வரலாறு தெரிவரும்’’ என்றார்.