நோபல் பரிசு பெற்ற ஒருவர், பழைய மாணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களைப்பற்றி நூல் எழுதி, அகில உலகத்திற்கும் சென்றிருக்கிறது
அவர் பெயராலே உருவாக்கப்பட்டு இருக்கின்ற அறக்கட்டளையை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்!
சென்னை, அக்.5 நோபல் பரிசு பெற்ற ஒருவர், பச்சையப் பன் கல்லூரியின் பழைய மாணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களைப்பற்றி நூல் எழுதி, அந்த நூல் அகில உலகத்திற்கும் சென்றிருக்கிறது என்றால், அவர் பெயராலே உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்த அறக் கட்டளை எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும்; மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழ்த்துறை – பச்சையப்பன் கல்லூரி ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழா
கடந்த 14.9.2023 அன்று காலை சென்னை பச்சையப் பன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட் டளை தொடக்க விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் குறித்த பேருரையை ஆற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக….
ஒருமுறை பெரியார் அவர்கள், இங்கேயும் சொன் னார், அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் சொன் னார்.
‘‘வேறு எந்தப் பல்கலைக் கழகங்களில் வேண்டு மானாலும், கலவரங்களோ, வேலை நிறுத்தங்களோ நடக்கலாம்; ஆனால், அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், பச்சையப்பன் கல்லூரியிலும் நிச்சயமாக நீங்கள் அதுபோன்று செய்யக்கூடாது என்று உங்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்; உரிமையாடு சொல்கிறேன் – ஏனென்றால், இதுதான் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக இருந்த கல்லூரிகள் – இவை இல்லையென்றால், உங்களுக்குக் கல்விக் கண் திறந் திருக்காது” என்றார்.
1928 ஆம் ஆண்டிற்கு முன் இருந்த வரலாறை தெரிந்துகொள்ளவேண்டும் நீங்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஆதிதிராவிட சமுதாயத் தைச் சேர்ந்த மாணவர்கள், நித்தியானந்தர்கள், கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை பச்சையப்பன் கல்லூரியில் சேர்க்க முடியாது.
அதற்கு என்ன வியாக்கியானம் சொன்னார்கள் என்றால், அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள் அல்ல; பச்சையப்பன் முதலியார் அவர்கள் ஒரு ஹிந்து – அவருடைய பணத்தில் உருவாக்கியதுதான் இந்த அறக்கட்டளை. ஆகவே, அது ஹிந்துக்களுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்று சொன்ன நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டினார்.
1928 இல் தந்தை பெரியார் கூட்டிய மாநாடு!
1928 இல், நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்தில் – 95 ஆண்டுகளுக்கு முன்பு, இதே சென்னையில் தந்தை பெரியார் அவர்கள் மாநாடு கூட்டினார். நீதிபதிகளும் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.
பச்சையப்பன் அறக்கட்டளையின் சார்பில் நடை பெறும் கல்லூரியில், மற்றவர்கள் சேரக்கூடாது; காரணம், ஜாதி அடிப்படையில், அவர்ணஸ்தர்கள் – அவுட் காஸ்ட் என்ற வார்த்தையைச் சொல்லி, ஜாதிப் பட்டி யலுக்கு வெளியே இருக்கக் கூடியவர்கள் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறிஸ்தவர். எனவே, அவர்களை கல்லூரியில் சேர்க்கமாட்டோம் என்று சொல்வது தவறு. ஆகவே, இந்நிலையை மாற்றியமைக்குமாறு நாங்கள் அரசாங் கத்திற்கு வேண்டுகோள் வைக்கிறோம் என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அன்றைய அரசாங்கம் நீதிக்கட்சியினுடைய ஆதரவுப் பெற்ற அரசாங்கம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீதியரசர்கள் ஒப்புக் கொண்ட பிறகு, அந்த நிலை மாறிய பிறகு, இன்றைக்கு எல்லோருக்கும் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது நண்பர்களே!
இன்றைக்கு எண்ணற்ற அறிஞர்கள் உருவாவதற்குக் காரணம்!
அப்படி திறந்த பிறகுதான், கல்விப் புரட்சி, அமைதிப் புரட்சி வந்தது. மாடு மேய்க்காதே, ஆடு மேய்க்காதே, குலத் தொழிலை செய்யாதே – நீ இந்தக் கல்லூரிக்குப் படிப்பதற்கு வா என்று சொன்னதன் விளைவுதான், இன்றைக்கு எண்ணற்ற அறிஞர்கள் உருவாவதற்குக் காரணம்.
உதாரணத்திற்கு அண்ணாவை சொன்னோம். இப்படி எத்தனையோ பேரை தயாரித்திருக்கிறது இந்தக் கல்லூரி.
அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், ‘‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வு” என்றார்.
‘‘அயம் ஃபிரம் பச்சையப்பாஸ் காலேஜ்’’
பிரித்தாளக் கூடிய தந்திரத்தில், ‘‘யு ஆர் ஃபிரம் அண்ணாமலை யுனிவர்சிட்டி, ஓ, ஆர் யூ ஃபிரம் பச்சையப்பாஸ் காலேஜ்” என்று கேட்டால், அது ஒரு மாதிரி தரக்குறைவான சூழ்நிலையை உண்டாக்குவது போன்று கேட்டது மாற்றப்பட்டு, பெருமையோடு ‘‘அயம் ஃபிரம் பச்சையப்பாஸ் காலேஜ்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தது.
மாணவத் தோழர்களே, உங்களிடையே நோபல் பரிசு வாங்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் படைத்தவர்கள் இருக்கிறார்கள்!
உங்களுக்கெல்லாம் ஒரு பெரிய வாய்ப்பு இன்றைக்கு. ஆகவே அருமை மாணவத் தோழர் களே, உங்களை அன்போடு கேட்டுக்கொள்வ தெல்லாம், படியுங்கள் – சிறப்பாகப் படியுங்கள். உங்களில் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்; உங் களில் பொறியாளர்கள் இருக்கிறார்கள்; உங்களில் டாக்டர்கள் இருக்கிறார்கள்; உங்களில் எல்லா திறமையும் உள்ளவர்கள் இருக்கிறார்கள்; ஏன்? உங்களிடையே நோபல் பரிசு வாங்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் படைத்தவர்கள் இருக்கிறார் கள்; நோபல் பரிசுகளால் பாராட்டப்பட வேண்டிய வர்கள் இருக்கிறார்கள்.
அதற்காக நீங்கள் என்ன செய்யவேண்டும்?
நாங்கள் எல்லாம் மாணவப் பருவத்திலிருந்து இந்த இயக்கத்தில் இருக்கின்றவர்கள்தான். ஆனால், எந்த நேரத்திலும், நாங்கள் வகுப்புகளைத் தவிர்த்ததே கிடையாது.
எங்களுடைய ஆசிரியர்கள் பார்ப்பன ஆசிரியர்கள். நான் இந்தக் கொள்கையை வெளிப்படையாகக் காட்டக் கூடியவன், மாணவப் பருவத்திலிருந்தே!
என்னுடைய பேராசிரியர் பாகிஸ்தானிலிருந்து வந்தார். சி.பி.ராமசாமி அய்யருக்குச் சொந்தக்காரர். பொருளாதாரப் பேராசிரியரான அவர், என்னை அழைத்தார்.
பெரியார் கூட்டங்களுக்கு நான் 14 வயதிலேயே தலைமை தாங்கியவன்.
என்னை, பேராசிரியர் அழைத்திருக்கிறார் என்ற வுடன், என்மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று நினைத்தார்கள். என்னுடைய பெயர் நன்றாக அவ ருக்குத் தெரியும்; நல்ல மாணவன் நான் என்பதும் அவருக்குத் தெரியும். அவருக்குப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நான் திராவிடர் கழகத்துக்காரன் என்பது அவருக்குப் பின்னாளில்தான் தெரிய வருகிறது.
நான் பெரியாரால் ஈர்க்கப்பட்டவன் –
அவரது வழி நடப்பவன்!
பெரியார் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவுடன், அதுபற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக என்னை அழைத்திருந்தார் அடுத்த நாள்.
‘‘நீங்கள் பெரியாரின் தத்துப் புத்திரனா?” என்று கேட்டார் பேராசிரியர்.
‘‘நான் பெரியாரால் ஈர்க்கப்பட்டவன் – அவரது வழி நடப்பவன். நான் அவரது தத்துப் புத்திரன் அல்ல” என்று சொன்னேன்
படிக்கவேண்டிய நேரத்தில்
படிக்கவேண்டும்!
ஆகவே, அது எந்த வகையிலும் என்னை பாதிக்க வில்லையே! அந்த ஆண்டில் நான்தான் ‘கோல்ட் மெடலிஸ்ட்’ – இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. படிக்கவேண்டிய நேரத்தில் படிக்கவேண்டும் என்பதற்காக இதனைச் சொல் கிறேன்.
இதுவரையில் நமக்குக் கதவு திறக்கவில்லை. அதற் காகத்தான் நாங்கள் வெளியில் இருந்து போராடுகிறோம். நீங்கள் போராடவேண்டிய அவ சியமில்லை. எங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தால், இதுபோன்ற நீதியரசர்கள் நல்ல இடத்தில் அமர்ந் திருந்தார்கள்; அந்த வாய்ப்புகளை அவர்கள் சரியாகச் செய்ததினால்தான், இந்த வாய்ப்புகள் வந்தன.
கல்விக்குப் பட்டா போடுங்கள்;
அறிவுக்குப் பட்டா போடுங்கள்!
படிக்கட்டு ஏறும்பொழுது விரைந்து ஏறுகிறோம்; அதைவிட்டுவிட்டு, பச்சையப்பன் கல்லூரியில் பட்டாக் கத்தி பளபளக்கும் என்று சொல்வதற்குப் பதிலாக – பட்டா போடுங்கள் – கல்விக்குப் பட்டா போடுங்கள்; அறிவுக்குப் பட்டா போடுங்கள்; உங்களுடைய பெயர் எதில் வரவேண்டும் என்றால், நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்தான் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார் என்று வர வேண்டும்.
அப்பொழுதுதானே ஆசிரியர்களுக்குப் பெருமை – அப்பொழுதுதானே ஆண்டவரே சந்தோசப்படுவார். ஏனென்றால், ஆண்டவர் சந்தோசப்படுவார் என்றால், வைதீக ஆசிரியர்களும் சந்தோசப்படுவார்கள். ஆண்ட வர் என்றால், எந்த ஆண்டவர் என்று அவர்களுக்குத் தெரியாது. எந்த ஆண்டவராக இருந்தாலும் சரி.
அதேபோன்று அண்ணாமலை கல்லூரியினுடைய மாணவன் நான் – முழுக்க முழுக்க அங்கேதான் படித்து வந்தவனாவேன்.
எனவே, இக்கல்லூரியில் படித்த ஒருவருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புகள் – நோபல் பரிசு பெற்றவர் பாராட்டக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார் என்று சொன்னால், நீங்கள் அதேபோல, அத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அது.
மாணவர்களே,உங்களுக்கு
ஒரே ஒரு வேண்டுகோள்!
அதுமட்டுமல்ல நண்பர்களே, படிப்பறிவோடு உங்கள் தனிச் சிறப்பாக இருக்கவேண்டியது என்ன வென்றால், உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், இதுபோன்ற அரங்கங்களுக்கு வந்தீர்கள் என்றால், ஆசிரியர்கள் இங்கே வந்து நிற்கவேண்டிய அவசியமே கூடாது.
நீங்கள் எல்லாம் சரியாக இருக்கிறீர்களா என்று பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆசிரியர்களுக்காக அல்ல; உங்களுக்காக.
வகுப்பிலே பெற முடியாத அறிவை, பட்டறிவை, பகுத்தறிவைப் பெறுவதற்குத்தான் இதுபோன்ற அரங்கக் கூட்டங்கள்.
அரசமைப்புச் சட்டத்தின்மீதுதானே எல்லோரும் பதவியேற்கிறார்கள் – பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் வரையில்.
அந்த அரசமைப்புச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை யைச் சொல்கிறது.
அது என்ன கடமை என்று சொன்னால், அடிப்படை உரிமை!
எனக்கு வேலை கிடைக்கவில்லை என்றெல்லாம் சொல்லி நீதிமன்றத்தை நாடி வழக்குப் போடுகிறார்கள், இது அடிப்படை உரிமை.
மறுக்கப்பட முடியாதது என்று அர்த்தம்; பறிக்கப்பட முடியாதது என்று அர்த்தம்!
ஆனால், அதற்கு அடுத்தபடியாக இருக்கிறதே, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51-ஏ – அடிப்படைக் கடமை.
அந்த அடிப்படைக் கடமைகளில் மிக முக்கியமானது என்னவென்றால்,
It shall be the duty of every citizen of India:
இந்தியாவினுடைய ஒவ்வொரு குடிமகனுடைய அடிப்படைக் கடமை.
அடிப்படைக் கடமை என்றால், மறுக்கப்பட முடி யாதது என்று அர்த்தம்; பறிக்கப்பட முடியாதது என்று அர்த்தம்.
அந்த அடிப்படைக் கடமை என்னவென்றால்,
to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform
அறிவியல் மனப்பான்மை –
ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று கேள்வி கேட்கக்கூடிய சிந்தனை!
ஒவ்வொருவரையும் மனிதத்தன்மையோடு பார்க்கவேண்டும்!
அதற்கடுத்தது, ஒவ்வொருவரையும் மனிதத்தன்மை யோடு பார்க்கவேண்டும். நாம் அன்போடு பழக வேண்டும்.
நம் மாணவர்கள், அறிவாயுதத்தைத் தூக்கவேண்டிய மாணவர்கள், கல்வியை கற்கவேண்டிய மாணவர்கள் வேறு ஆயுதத்தை ஏன் தூக்கவேண்டும்?
அறிவாயுதம்தானே நிரந்தரமாக இருக்கும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அறிவாயுதத்தைத் தேர்ந்தெடுக் கிறீர்களே, அவ்வளவுக்கவ்வளவு உயர்வீர்கள். எவ் வளவுக்கெவ்வளவு வேறு ஆயுதத்தை எடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் வீழ்ந்து போவீர்கள், தாழ்ந்து போவீர்கள், சமுதாயத்தில் குற்றவாளிகளாக மற்றவர்கள்முன் நிற்கவேண்டியவரும்.
உங்களுக்காக எங்களை அழித்துக்கொண்டோ, எரித்துக்கொண்டோ பாடுபடுவதற்கு நாங்கள் இருக்கிறோம்!
உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்; உங்களுக்காக எங்களை அழித்துக்கொண்டோ, எரித்துக்கொண்டோ பாடுபடுவதற்கு மாணவச் செல்வங்களே, நாங்கள் இருக்கிறோம். அந்தப் பணிக்காக நீங்கள் மற்ற இடங்களுக்குப் போகவேண்டிய அவசியமில்லை.
அதற்கு முன் வழிகாட்டியாக, எந்தக் கல்லூரி இருக்கவேண்டுமென்றால், ஒரு காலத்தில் உங்களுக் கெல்லாம் கதவு திறக்காத கல்லூரியாக இருந்த, ‘‘பச்சையப்பன் கல்லூரி படிக்கட்டும் படிப்பின் பெருமை பேசும்” என்ற பெருமை பெற்ற இந்தக் கல்லூரியின் மாணவர்களாகிய நீங்கள், ‘‘நாங்கள் எல்லா மாணவர் களுக்கும் வழிகாட்டிகளாக இருப்போம்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாணவச் செல்வங்களே நீங்கள் வரவேண்டும்; அந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின்
வேதனை!
அலகாபாத்தில், திருமணத்திற்கு ஒருவர் ஒப்புக் கொண்டு, அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விடுகிறது. அதற்குள் அந்த மணமகன், நிச்சார்த்தம் முடிந்த மணமகளை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். வழக்கு விசாரணையின்போது, அதற்குரிய காரணமாக என்ன சொல்கிறார் என்றால், ‘‘இந்தப் பெண்ணுக்கு செவ்வாய்த் தோஷம் இருக்கிறது; ஆகவே, இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள முடியாது” என்கிறார்.
நீதிபதியாக இருக்கின்றவர் என்ன சொல்லவேண்டும்?
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் என்ன சொல்கிறார் என்றால், ‘‘பல்கலைக் கழகத்தில் உள்ள ஜோதிடத் துறையில் உள்ளவரை அழைத்து, மணப்பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லுங்கள்” என்கிறார்.
இந்த வழக்கின் விவரத்தைக் கேட்ட, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலையில் அடித்துக்கொண்டு, இப் படியும் ஒரு நீதிபதியா? என்று கேட்டிருக்கிறார்.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
ஏனென்றால், பச்சையப்பன் கல்லூரி, பகுத்தறிவு துறையில் ஆசிரியர்களும், மாணவர்களும் வழிகாட்ட வேண்டும்.
கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குக்கூட ஜாதகம் பார்த்த விநோதம்!
நேற்றுகூட ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. விளை யாட்டில் கெட்டிக்காரர்கள் நம்முடைய மாணவர்கள் – அது கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, கால்பந்து போட்டியாக இருந்தாலும் சரி.
இந்திய அணியில் கால்பந்து போட்டிற்காக அணி வீரர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். தேர்ந்தெடுக்கும் பணியில் உள்ள ஒருவர், இவர்களையெல்லாம் நீக்கிவிடலாம்; அதற்குப் பதில் புதிய ஆட்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிறார்.
ஏனென்றால், இவர்களுடைய ஜாதகங்களை எல்லாம் ஜோதிடரிடம் காட்டினேன். அவர்களுடைய ஜாதகப்படி யார் யார் நன்றாக ஆடுவார்களோ, அவர் களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
அந்த ஜோதிடரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்பந்து அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இது எத்தகைய மூடத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
பச்சையப்பன் கல்லூரியில் பெரியாரியல் கூட்டங்கள் நடைபெறுவதால் மாணவர்களாகிய நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெரியார் தேவை: கல்வி வள்ளல் காமராஜர்
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜர் அவர்கள், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இங்கே வந்தார். அவரை செய்தியாளர்கள் சந்தித்தார்கள்.
‘‘இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்திருக்கிறீர்களே, என்ன செய்தி சொல்ல விரும்பு கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
காமராஜர் அவர்கள், ‘‘இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்ததில், ஒரு புது அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால், தமிழ்நாடுதான் சிறப்பான மாநிலம் என்பதை உணர்ந்தேன்.
காரணம், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெரியார் தேவை என்பதை உணர்ந்தேன். ஏனென்றால், காலை யில், என்ன கலரில் சட்டை அணியவேண்டும் என்பதை ஜோதிடரிடம் கேட்டுத்தான் அணிகிறார்கள்” என்றார்.
ஆகவேதான், அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொருவரும் பரப்பவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு, அதற்கு நேர் விரோதமாக இருக்கக்கூடிய சூழல் வந்திருக்கின்ற நிலையில், கல்வியை விரிவாக்கவேண்டும்.
எனவேதான், ‘‘அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு – விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை” என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, அந்த விசாலப் பார்வையால் உலகத்தைப் பார்த்த காரணத் தினால்தான், நோபல் பரிசு பெற்ற ஒருவர், பழைய மாணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களைப்பற்றி நூல் எழுதி, அந்த நூல் அகில உலகத்திற்கும் சென்றிருக்கிறது என்றால், அவர் பெயராலே உருவாக்கப்பட்டு இருக் கின்ற இந்த அறக்கட்டளை எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கவேண்டும்; மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
நம்முடைய செயலாளர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார் சுருக்கமாகச் சொன்னாலும், சுருக்கென்று படக்கூடிய அளவிற்குச் சொன்னார்.
தாய் – தந்தையர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கக் கூடிய அளவிற்கு நீங்களும் வளரவேண்டும்!
‘‘நீங்கள், உங்கள் தாய் – தந்தையர் பெயரில் அறக் கட்டளையை உருவாக்கக் கூடிய அளவிற்கு நீங்களும் வளரவேண்டும்” என்று.
முதுநெல்லிக்கனி முன் கசக்கும்,
பின் இனிக்கும்!
அருமை மாணவச் செல்வங்களே, சில செய்திகள் உங்களுக்குக் கசப்பாக இருக்கும் – ‘‘முதுநெல்லிக்கனி முன் கசக்கும், பின் இனிக்கும்” என்பதை மறந்து விடாதீர்கள்.
வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, என்னுரையை முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.