வி.சி.வில்வம்
ஆம்! மாநில சுயாட்சி பேசுகிற தமிழ் நாட்டில் தான் இந்தக் குரலும் ஓங்கி ஒலிக்கிறது!
இந்தியாவைக் காப்பாற்றுவது மிக, மிக முக்கியம் என்பதை உணர்கிறோம்! ஏற்கிறோமோ, மறுக்கிறோமோ, விரும்புகிறோமோ, தவிர்க்கி றோமோ இந்திய ஒன்றியத்தில் தான் தமிழ்நாடும் இருக்கிறது. வட மாநிலத்தோடு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு; எனினும் அது அந்த மாநில மக்களோடு அல்ல!
மாறாக இந்திய மாநிலங்கள் அனைத்தையும் தம் மதத்தால், தங்கள் ஜாதியத்தால் அடிமையாக்கி வாழும் ஆரியத்தோடு நமது போர் நீடிக்கிறது! ஈரோட்டுக் கண்ணாடி நமக்கு இருப்பதால், தமிழ் நாட்டிற்கு எதிரான சிறு, சிறு பிரச்சினைகளுக்கும் நாம் எதிர்வினை ஆற்றி வருகிறோம்! எப்போதும் இந்த மண் நீறுபூத்த நெருப்பு என்று சொல்வது இதனால் தான்!
அதேநேரம் வட மாநிலங்கள் உள்ளிட்ட மொத்த இந்தியாவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாவால் பெரும் வீழ்ச்சிகளைச் சந்தித்து வருகின்றன. அவர்களால் எப்போதுமே ஆபத்து தான் என்றாலும், வருங்காலம் ஏதோ ஒரு அத்தியாத்தின் முடிவாகவும் இருக்கலாம். எனவே 2024 இந்தியத் தேர்தல் என்பது கட்சி களுக்கான தேர்தல் மட்டுமல்ல; இந்தியர்களின் வாழ்வா? சாவா? போராட்டமும் கூட!
அரசியலில் மதத்தைக் கலந்து, மக்களின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி, நாட்டையே அவலத்திற்கு உள்ளாக்கி விட்டார்கள்; ஆதி காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல துடிக்கிறார்கள்!
ஹிந்து பெயரில் கட்சி நடத்துகிற இவர்கள், ஹிந்துக்கள் நலன்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை, நாமும் தொடர்ந்து சொல்லி வருகி றோம்! குறிப்பாக வடமாநிலத்தவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை! மக்களும் இவர்களை நம்பி போகிறார்கள். மதம் என்கிற போதை ஊசி ஏற்றப்பட்டு மந்த நிலையிலே இருக்கிறார்கள்!
வீட்டில் சாப்பாடு இல்லை, செய்வதற்கு வேலை இல்லை, பிள்ளைகளுக்குக் கல்வி இல்லை, ஊர்வலத்தைக் கண்டால் மட்டும்
ஜெய் சிறீராம் சொல்ல பழகி இருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் இதைக் கடுமையாக விமர் சித்த நிலையிலும், இப்போது அதிகமாகக் கவ லைப்படுகிறோம்! அவர்கள் வாழும் இந்தியா வையும் சேர்த்து நாம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது!
மிக முக்கியமாக வட மாநில மக்களைப் போல, தமிழ்நாட்டிலும் சில குழுக்கள் உருவாகி வருகிறது. இன்னும் மாட்டுச் சாணத்தை உடலில் பூசி, கோமியத்தைக் குடிக்கவில்லை என்பது தான் பாக்கி. இப்படி அடிக்கடி நாம் சொன்னால், ஏன்… அதையும் நாங்கள் செய்வோம் என அவர்கள் உருவாகலாம். அதற்கு முன்னால் மொத்த இந்தியாவையும் காப் பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது!
எவ்வளவு நாள் தான் மதத் தால் ஏமாறுவார்கள், அவர் களும் ஒருநாள் மாறுவார்கள் என நாம் பொறுமை காக்க முடியாது. அப்படி அமைதி காத்தால் இந்த நாடு வன் முறையின் எல்லைக்கு சென்று விடும்! இப்போதே அப்படித் தான் இருக்கிறது. இது மிகையோ, பயமுறுத்தலோ அல்ல. கிறிஸ்தவர்கள், இஸ் லாமியர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு ஹிந்துவானவரும் பெரும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதை நோக்கித் தான் இந்த நாடு வேகமாக சென்று கொண்டிருக்கிறது!
இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்தெந்த நாடுகள் மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்து கிறதோ, அவையனைத்தும் வீழ்ச்சியில் தான் முடிவு பெறுகின்றன! நீதி சுத்தமாகக் குழி தோண்டி புதைக்கப்படும்!
மதங்களே வேண்டாம் என்பது உயர்ந்த சிந்தனையாக இருந்தாலும், மதங்கள் இருக்கும் வரை மதம் வேறு; அரசியல் வேறு என்கிற நிலை வர வேண்டும். கடவுளும், மதமும் எப்போது ஒழியும் என்பதற்கு ஏங்கெல்ஸ் ஒருமுறை பதில் சொன்னார், “மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளும், மதமும், மனிதர்கள் ஒழிந்த பிறகு ஒழியும்”, என்றார். ஆக அவை ஒழிவது ஒருபுறம் இருந்தாலும், அவற்றால் மனித சமுதாயம் அழிவதை நாம் அனுமதிக்க முடியாது!
மதமும், அரசியலும் ஒன்று சேரக் கூடாது என நான்கு பிரிவினர் விரும்புவர்.
1) பகுத்தறிவாளர்கள் – நாத்திகர்கள்
2) அந்தந்த நாட்டில் பாதிக்கப்படுகிற சிறு பான்மையினர்
3) மனிதநேயம் கொண்ட, வன்முறையை விரும் பாத பெரும்பான்மை மதத்தைத் சேர்ந்த வர்கள்.
4) அரசியல் சாக்கடை, மதம் புனிதம். இரண்டும் கலக்கக் கூடாது என்கிற தூய்மைவாதிகள்.
ஆக தங்களுக்கென்று கொள்கை இல்லாத வர்கள், கொள்கையோடு வாழத் தெரியாதவர்கள் தேர்ந்தெடுக்கும் மலிவான உத்தியே இந்த மத அரசியல். திரும்பவும் சொல்வோம்! ஆயிரம் முறை சொல்வோம்! எந்த மதத்தை ஆதரித்து அரசியல் செய்கிறார்களோ, அந்த மதத்தவர் களுக்கே இவர்களால் பயனேதும் இல்லை! மாறாக பயன் இல்லாமல் கூட இருக்கட்டும், கடுமையான பின்னடைவுகளையும் அவர்கள் சந்திக்கிறார்கள். அந்தப் பாதிப்பும், அதன் வலியும் தெரியக் கூடாது என்பதற்கே மதம் என்னும் போதை ஊசி தொடர்ந்து ஏற்றப்படுகிறது!
போதையில் இருந்த மக்கள் ஏதோ ஒரு கால கட்டத்தில் விழிக்கும் போது, கலகக் குரல் எழுப்பும் போது, தம் மதத்தவர் மீதே கடுமையான வன்முறையை ஏவிவிடுவர். தங்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்கிற உச்சபட்ச வெறி அது!
இது ஆன்மீக மடங்களில் இருந்து வந்த வழிமுறை. மதம் சார்ந்து உருவாக்கப்படும் அத் தனை அமைப்புகளிலும் இந்த சர்வாதிகாரத்தை நாம் பார்க்கலாம். சர்வாதிகாரம் என்பதே ஒரு அதிகாரக் குறியீடு தானே! அவர்கள் அனை வருமே கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள். இப்படி யான மடங்கள் வழியில் ஒரு ஆட்சி அமைந்தால் நாடு என்னவாவது?
அதைத் தான் நாம் அனுபவித்துக் கொண்டி ருக்கிறோம்! மடங்கள் போல அரசும், மடாதி பதிகள் போல பிரதமரும் அமைந்திருக்கிறார்கள். ஆன்மீகக் காவியும், அரசியல் காவியும் இரண்டறக் கலந்த இடம் இது!
ஜெய் சிறீராம் எனக் கோயிலில் மட்டும் சொல்லப்பட்டதை, அரசியல் முழக்கமாக மாற்றிவிட்டார்கள். இன்று அதுதான் பாஜகவின் குறியீடு! ஆக கோயிலும், பாஜகவும் ஒன்று, மதமும், பாஜகவும் ஒன்று, கோயிலைப் போலவே பாஜகவும் புனிதமானது எனக் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஆக எந்தக் காரணத்தைக் கொண்டு நீங்கள் பாஜகவை எதிர்த்தாலும், அது ஹிந்து மதத்தை எதிர்ப்பதற்குச் சமம், கோயிலை அவமதித்ததற்குச் சமம், பெரும்பான்மை ஹிந்துக்களைக் கேலி செய்ததற்குச் சமம் என்று ஆக்கிவிட்டார்கள். இன்னும் சற்றுக் கூடுதலாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜகவை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகி, நாட்டுக்கு எதிரானவன் என்கிற நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்!
அண்மையில் வந்த காணொலி ஒன்று நமக்கொரு எச்சரிக்கையைத் தந்தது. பாஜக கொடியைக் கட்டிக் கொண்டு காரில் சிலர் வரு கிறார்கள். ஒரு கடைக்குப் போய் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். சற்றுப் பொறுங்கள் என்ற கடைக்காரர், உள்ளே சென்று காவி நிறத்தில் ஒரு துண்டை போட்டுக் கொண்டு, நானும் பாஜக தான் எனக் கூற, ‘இவர் நம்மாளு’ எனக் கூறி காரில் வந்தவர்கள் போய்விடுகிறார்கள்.
இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். வெறும் ஹிந்துவாக இருந் தால் மட்டும் பாஜகவுக்குப் போதாது, மாறாக அவர்களுக்குப் பயன்படுகிற ஹிந்துவாக நீங்கள் இருக்க வேண்டும். திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஹிந்துக்களை அவர்கள் ஏற்ப தில்லை. மாறாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஹிந்துவாக நீங்கள் மாற வேண்டும்.
எம்மதமும் சம்மதம், கிறிஸ்தவ, இஸ்லா மியர்கள் என் சகோதரர்கள் என்கிற ஹிந்துக் களை அவர்கள் கோழையாகப் பார்க்கிறார்கள். அனைவரையும் நீங்கள் வெறுக்க வேண்டும், என் மதம் மட்டுமே உயர்ந்தது எனக் கொடி பிடிக்க வேண்டும்,
ஜெய் சிறீராம் என முழக்கமிட வேண்டும், ஊர்வலம் செல்ல வேண்டும், கலவரம் செய்ய வேண்டும். அப்போது தான் நீங்கள் “அக்மார்க்” ஹிந்துவாக அடையாளம் பெறுவீர்கள்!
உங்களுக்குத் தெரியுமா? பாஜகவின் தலைவராக யாரை நியமிப்பார்கள்? அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் தலைவராக யாரை நியமிப்பார்கள் என்று பார்ப்போம்! உங்கள் உடலை இரண்டாகப் பிளந்து, மொத்த இரத்தத்தையும் வெளியேற்றி, நான் ஹிந்துதான் என நிரூபித்தாலும் நீங்கள் தலைவராக முடியாது. அந்தத் தகுதி இந்தியாவின் எந்த ஹிந்துக்குமே கிடையாது. மாறாக அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது. காரணம் அவர்கள் தான் ஹிந்து மதத்தின் உரிமை யாளர்கள்; நாமெல்லாம் அவர்களின் அடியாட்கள்!
ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவியை எங்களுக்கும் கொடு என எந்த ஹிந்துக்களும் இதுவரை கேட்டதில்லை. பாகிஸ்தானில் மூக்கை நுழைப்பார்கள், அமெரிக்காவைக் கேள்வி கேட்பார்கள், அகண்ட பாரதம் வேண்டும் என்பார்கள், ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவியைக் கொடு என்று கேட்பதில்லை.
ஒருவேளை தங்களுக்குத் தகுதி இல்லை என இவர்களே முடிவிற்கு வந்திருக்கலாம். நம்மைத் தொடுவதில்லை, அருகில் கூட வருவதில்லை, அவாள் வேறு; நாம் வேறு என இவர்களுக்குப் புரிந்திருக்கலாம். எனினும் அதுவா முக்கியம்? நம் மதம் முக்கியம். இஸ்லாம், கிறிஸ்தவர்களை விட நாம் தாம் பெரியவர்கள், நமக்கென்று நாடு வேண்டும், பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் இருக்கிறது என இவர்களே பொழிவுரை வாசித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.
சரி! ஆர்.எஸ்.எஸ் தலைவரை விடுவோம்! பாஜகவில் யார் தலைவராக முடியும்? அதற்கு என்ன தகுதி? எவ்வளவு உழைப்பு? எத்தனை ஆண்டுகள் அனுபவம்? ஏதாவது அறிவுத் திறன் வேண்டுமா? எதுவுமே இல்லை. நீங்கள் எந்த அளவு தீவிரவாதப் பேச்சுகள் பேசுகிறீர்களோ, எவ்வளவு வன்முறைகளைக் குவிக்கிறீர்களோ, சாமான்ய இந்துக்களின் உணர்ச்சிகளை எவ்வ ளவு அதிகம் கொழுந்து விட்டு எரிய வைக் கிறீர்களோ, அப்போதே நீங்கள் கவனிக்கப் படுவீர்கள். அடுத்த தலைவராக வரும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்! நான்கு எழுத்து உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் “குஜராத்”.
அடுத்த தலைவர் இதைவிட கூடுதலாக செய்ய எதிர்பார்க்கப்படுவார். அந்த முயற்சியில் தான் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் இருக்கிறார். பிரச்சினையின் போது பெயர் கெட்டுப் போகுமே, உலகம் காரித் துப்புமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். இந்த மக்களை, இந்த நாட்டை எப்படித் திசை திருப்புவது, மறக்கடிக்கச் செய்வது என்பது எங் களுக்குத் தெரியும் என்பார்கள் நாக்பூர்வாசிகள்!
ஆக பார்ப்பனீயக் கருத்துகளால் ஆர்.எஸ்.எஸ் இந்த மக்களை முட்டாள் ஆக்குகிறது. அரசியல் கருத்துகளால் பாஜக இந்த நாட்டை நாசமாக்குகிறது! கடந்த 10 ஆண்டு களில் இந்த நாட்டின் பொருளாதாரம், மக்கள் வளர்ச்சி என்பது துளி கூட உயரவில்லை. மாறாகப் படுபாதாளத் தில் சென்றுவிட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பை இவர்களுக்குக் கொடுத்தால், நினைத் துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லாத சில ஆப்பிரிக்க நாடுகளைப் போல, இந்தியாவை மாற்றி விடுவார்கள்.
பாரதீய ஜனதாவை வெறும் அரசியல் கட்சியாக யாரும் கருதி விடாதீர்கள். அவர்களுடைய கொள்கைகள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் தான். மனிதர்களை மதிக்கும் பண்புகள் இல்லை, ஜனநாயகம் இல்லை, குறிப்பாக நாட்டுப் பற்று அறவே இல்லை. அப்படியான பாரதீய ஜன தாவை 2024 தேர்தலில் அறவே ஒழித்துக் கட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது!
பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பது, மற்றொரு கட்சிக்கு ஆதரவான நிலை என்பதாகக் கூட எடுத்துக் கொள்ள வேண்டாம். மாறாக பாரதீய ஜனதா சாதாரண அரசியல் கட்சியையும் தாண்டி ஆபத்தானதும், வன்முறை நிறைந்த கட்சியும் ஆகும். அதை மீண்டும் வெற்றி பெறச் செய்வது என்பது நம் தலையில் நாமே மண் அள்ளிப் போடுவது அல்ல; மாறாக நம் தலையில் நாமே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமானது ஆகும்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்! இந்தியாவைக் காத்திடுவோம்!