பட்டியலின மக்களுக்குப் பூணூல் போட ஹிந்து மத ஸநாதனத்தில் புருஷ சூக்தத்தில் இடம் உண்டா?
பூணூல் போடப்பட்ட பட்டியலின மக்களை கோவில் கருவறைக்குள் பூஜை செய்ய ஆளுநர் அழைத்துச் செல்வாரா?
பட்டியலின மக்களுக்குப் பூணூல் அணி விக்க ஏற்பாடு செய்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களைக் கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்று பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்வாரா? ஜாதியை ஒழிக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசு சட்டம் கொண்டு வருமா? என்று ‘நியூஸ் 18′ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். பேட்டி வருமாறு:
ஆதிதிராவிடர்களுக்குப் பூணூல் அணி வித்ததில் தொடங்கி, பிரதமருடைய குற்றச் சாட்டுவரை பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘நியூஸ்-18′ தமிழ்நாடு தொலைக் காட்சிக்கு இன்று (5.10.2023) காலை அளித்த பேட்டி வருமாறு:
நெறியாளர்: நேற்றைக்கு நந்தனார் குரு பூஜையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிராமணர் அல்லாதவர் களுக்கு பூணூல் அணியும் நிகழ்வை நடத்தி யிருக்கிறார்; அதற்குக் கடுமையான எதிர்ப்பும் மற்ற தலைவர்களிடமிருந்தும் எழுந்திருக் கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஆளுநர் ரவி, தன் வேலையை விட்டுவிட்டு, வேறு வேலைகளைச் செய்கிறார்!
தமிழர் தலைவர்: ஆளுநர் அவர்கள், அவ ருடைய வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் அரசாங்க சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து நடத்தி வரு கிறார். ஒரு போட்டி அரசாங்கம் நடத்துவதாக நினைத்துக் கொண்டு பல காரியங்களைச் செய்கிறார்.
அதிலே, நந்தனார்மீது திடீரென்று அவ ருக்குப் பக்தி வந்ததோடு மட்டுமல்லாமல், அங்கே உள்ள ஆதிதிராவிட தோழர்களுக்குப் பூணூல் மாட்டி, அதன்மூலமாக ஸநாதனத்தி னுடைய பெருமைகளையெல்லாம் சொல்லி, ஜாதி என்பது வேதத்தில் இல்லை என்ற ஒரு பெரிய பொய்யை சொல்லி, இப்படி எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறார்.
பொதுவாக இப்படி பூணூல் மாட்டி, அதன் மூலமாக ஆதிதிராவிடர்களை உயர்த்து கிறோம் என்று சொல்லும்பொழுதே அவர் ஒன்றை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பூணூல் அணியாதவர்கள் எல்லாம் கீழ் ஜாதிக்காரர்கள்; பூணூல் அணிந்தவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள்.
எனவே, ஒருவரை உயர்த்தவேண்டு மானால், ஜாதி ரீதியாக பூணூல் போட்டு உயர்த்தவேண்டும் என்பதற்கு அடையாள மாகத்தான் அவர் புரமோஷன் கொடுக்கிறார். அவ்வளவுதானே தவிர, அந்தப் பூணூலினால் என்ன பலன்? என்பதைப்பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
ஏன் பூணூலை எல்லோரும் போட்டுக் கொள்ளலாமே என்று ஒருமுறை என்னிடம் பேட்டி எடுத்த ‘துக்ளக்’ ஆசிரியர் சோ கேட்டார்.
உடனே நான், ‘‘நூற்றுக்கு மூன்று பேர் அணிந்துள்ள பூணூலை, மீதமுள்ள 97 பேரும் அணியவேண்டும் என்றால், அதற்குப் பதில் மூன்று பேர் அணிந்துள்ள பூணூலை அகற்றி விட்டால், எல்லோரும் சமமாகிவிடுவார்கள் அல்லவா! நூல் விலையும் குறையும் அல்லவா” என்றேன்.
‘கீழ்’ஜாதிக்காரர்கள் பூணூல் அணிவதை சங்கராச்சாரியார் ஏற்கிறாரா?
இந்தப் பூணூலை அவர்கள் ஒரு ஜாதி சின்னமாகத்தான் அணிகிறார்கள். உதாரண மாக, ஆவணி அவிட்டம் என்று சொல்லக் கூடிய நிகழ்வில்கூட, மற்றவர்கள், கீழ்ஜாதிக் காரர்கள், பார்ப்பனரல்லாதவர்களாக இருக்கக் கூடியவர்கள் பூணூல் அணிந்தால், அது மனு தர்மத்தின்படியோ அல்லது சங்கராச்சாரி யாராலோ அல்லது பிராமண சங்கத்தாலோ ஒப்புக் கொள்ளப்பட்டது அல்ல.
அதுமட்டுமல்ல, இன்னொரு செய்தியை இந்த நேரத்தில் சொல்லியாகவேண்டும். இதோ என்னுடைய கைகளில் இருப்பது மனுதர்ம சாஸ்திரம் – இதுதான் ஸநாதனத்தினுடைய மிக முக்கியமான கோர் சப்ஜெக்ட் அதனுடைய ஒரு தத்துவ ரீதியான ஒரு நூல் – இதை அவர்கள் மறுக்க முடியாது.
இதைத் தவறு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வாரா? இது முதல் கேள்வி.
இரண்டாவது அத்தியாயத்தில், இந்தப் பூணூல் போடுவதில்கூட ஜாதி ரீதியாக வேற்றுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது நிறைய பேருக்குத் தெரியாது.
மனுதர்மம் இரண்டாவது அத்தியாயம் – 44 ஆவது சுலோகம்-பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும்,
சத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும்,
வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும்
மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்கவேண்டியது.
எனவே, பஞ்சு நூல் பூணூல் பிராமணர்களுக்கு – உயர்ஜாதிக்காரர்களுக்கு.
அதிலும் பாருங்கள், பிராமண, சத்திரிய, வைசியர் களுக்கு மட்டும்தான்.
ஆளுநர் ரவி, சாஸ்திரியா?
சூத்திரர்களுக்குக் கிடையாது. ஏனென்றால், மேற் சொன்ன மூன்று பேர்தான் துவிஜர்கள் – இருபிறப்பா ளர்கள் என்று சொல்லக்கூடிய நிலை.
அப்படி வரும்பொழுது, பிராமணர்களுக்குப் பூணூல் பஞ்சு நூலில் இருக்கவேண்டும்.
அவர்களுடைய ஸநாதனப்படி, அவர்கள் மற்றவர்களுக்கு என்ன செய்யவேண்டும்?
சூத்திரர்கள் பூணூல் அணியக்கூடாது என்று இருக்கிறது – ஆனால், ஆளுநர், பூணூல் போட்டு அவர்களை உயர்த்துகிறேன் என்று சொன்னால், அவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
ஆளுநர் ரவி சாஸ்திரியா? புரோகிதம் செய்வதற் காகப் போயிருக்கிறாரா? அல்லது ஆளுமை செய்வதற் காகப் போயிருக்கிறாரா? என்கிற கேள்விகள் எழு கின்றன.
சரி, ஆண்களுக்குப் பூணூல் போட்டு உயர்த்துகிறார்; அந்த சமூகத்தைச் சார்ந்த பெண்களை எப்படி உயர்த்துவார்? உயர்ஜாதிப் பெண்களுக்கு ஏன் பூணூல் இல்லை என்கிற பிரச்சினை எழுகிறது அல்லவா!
சத்திரியனுக்கு க்ஷணப்ப நூல் – இது அடுத்த குவாலிட்டி.
வைசியனுக்கு வெள்ளாட்டு மயிரால் –
புருஷ சூக்தம் கூறுவது என்ன?
சூத்திரனுக்குக் கிடையாது – ஏனென்றால், சூத்திரன் அடிமை. ஆகவே, அவன் இருபிறப்பாளன் கிடையாது. இரு பிறப்பு – துவிஜர் என்று சொன்னால், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல்.
ஆகவே, இவருடைய அடிப்படையே முழுக்க முழுக்க பேதத்தை மீண்டும் இவர் வலியுறுத்தி இருக்கிறார்.
நெறியாளர்: நேற்றைய கூட்டத்தில் ஆளுநர் சொல்கிறார், வேதங்கள் எந்த சூழலிலும் உயர்வு – தாழ்வை கற்பிப்பதே இல்லை. இப்படியான ஒரு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று சொல்லியிருக் கிறாரே?
தமிழர் தலைவர்: அவர் சொல்வது என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
நான் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன், அறிவு நாணயம் உள்ளவராக இருந்தால், அந்தக் கேள்விக்கு ஆளுநர் பதில் சொல்லட்டும். நான் நேரிடை யாகவே அவரிடம் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.
‘ரிக்’ வேதத்தில், புருஷ சூக்தம் என்பதில், ஜாதி வருணாசிரம தர்மம் சொல்லப்பட்டு இருக்கிறதா, இல்லையா?
இதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உள்பட எடுத்துச் சுட்டிக்காட்டி இருக்கிறார்களா, இல்லையா?
இது நூலாக வடிக்கப்பட்டு இருக்கிறதா, இல்லையா?
எனவேதான், இவர் சொல்கிற கருத்தை சங்கராச் சாரியார் ஏற்றுக்கொள்வாரா?
வேதங்களில், பேதம் இல்லை என்று சொல்லக்கூடாது.
இன்னுங்கேட்டால், வேதத்தினுடைய சாரம்தானே மனுதர்மம்.
ஸ்மிருதி – ஸ்ருதி அப்படி என்று வருகின்றபொழுது, மனுதர்ம சாஸ்திரத்தை இவர் ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா?
அதற்கு நேரிடையாக அவர் பதில் சொல்லட்டும்!
வேதத்தில் பேதம் இருக்கிறது. இவர் சொல்வதுதான் அப்பட்டமான, வடிகட்டிய, அதுவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்!
அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், நான் ஆதாரத்தோடு சொல்கிறேன்,
ரிக் வேதத்தில், புருஷ சூக்தம் என்று இருக்கிறது. அதில், தலையில் பிறக்கிறான், தோளில் பிறக்கிறான், தொடையில் பிறக்கிறான், காலில் பிறக்கிறான் – சூத்திரர்கள் என்பது இருக்கிறதா, இல்லையா?
இதற்கு ஆளுநர் தெளிவான பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதை எதிர்ப்பது ஏன்?
நெறியாளர்: இந்தப் பூணூல் விவகாரத்திற்குக் கடுமையான எதிர்ப்பு எழக்கூடிய நிலையில், ஆளுநர் தரப்போ அல்லது பா.ஜ.க. தரப்போ எழுப்பக் கூடிய கேள்வி என்னவென்றால், அரசு சார்பில் இப்பொழுது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற ஒரு திட்டம் இருக்கிறது. அவர்கள் முறையான பயிற்சி களைப் பெற்ற பிறகு, பூணூல் அணிந்த பிறகுதானே, அவர்கள் கோவிலுக்குள் சென்று பூஜை செய்யக்கூடிய நிலைமை இருக்கிறது என்கிற எதிர்கேள்வியை அவர்கள் வைக்கிறார்களே?
தமிழர் தலைவர்: அப்படியென்றால், அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?
பெண்கள் பூணூல் போடுகிறார்களா?
ஆகம விதிகள் என்று வைத்திருக்கிறார்கள்; அது குறித்து உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அர்ச்சகராவ தற்கு குவாலிபிகேசன் வைத்திருக்கிறார்கள். ஆகமப் பயிற்சி முடித்தவர்கள்தானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இப்படி இருக்கையில், ஏன் அதனை இவர்கள் எதிர்க்கிறார்கள்? இதுவரையில் அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்களா? அர்ச்சகர் சங்கம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறதா? வழக்குத் தொடுக் காமல் இருக்கிறார்களா?
இப்பொழுதுகூட உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மூன்று வார தடை, நான்கு வாரத் தடை என்று வாங்கி யிருக்கிறார்களே, இது எதைக் காட்டுகிறது?
பூணூல் போட்டால்தான் கோவிலுக்குள் போக வேண்டும் என்று இருப்பதே, முதலில் பேதமானதுதானே!
அது சரி, இப்பொழுது பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்களே, அவர்கள் எந்த நூல் போட்டு இருக்கிறார்கள்; இதற்குப் பதில் சொல்வார்களா?
ஜாதிகளை ஒழிக்க சட்டம் கொண்டுவரட்டுமே!
நெறியாளர்: தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில் ஜாதியப் பாகுபாடுகள் இருக்கின்றன. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன – வேங்கைவயல், நாங்கு நேரி உள்ளிட்டவற்றைக் காட்டலாம்; அந்தப் பிளவுகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறாரே, ஆளுநர்?
தமிழர் தலைவர்: ஜாதியை ஒழிக்கிறேன் என்று ஒரு சட்டத்திற்கு இவர் பரிந்துரை செய்யட்டும். இவர்களு டைய ஆட்சிதானே ஒன்றியத்தில் இருக்கிறது. அதை நாங்கள் வரவேற்போமே!
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி, ஒரே தேர்தல் எல்லாம் ‘‘ஒரே, ஒரே” அதற்குப் பதில் எல் லோரும் ‘‘ஒரே ஜாதி” என்று சொல்லிவிட்டுப் போகட் டுமே – பிரச்சினை யாருக்குமே இல்லையே!
ஜாதி ஒழிந்தது – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17 ஆவது விதியில், “Untouchability” is abolished and its practice in any form is forbidden Þ¼ŠðŠ ðF™ “Untouchability” என்ற வார்த்தையை எடுத்துவிட்டு “Caste” என்று சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரட்டுமே!
தமிழ்நாடு ஆளுநர் அதற்குப் பரிந்துரை செய் யட்டுமே – ஒன்றிய அரசின் ஏஜெண்டாகத்தானே இவர் இங்கே இருக்கிறார். ஜாதியை ஒழியுங்கள், அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
ஜாதியை ஒழிப்பதற்காகத்தானே இவ்வளவு பாடுபடு கிறோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதே ஜாதி தீண்டாமை ஒழிப்பினுடைய ஓர் அம்சமே தவிர, அவர்களுக்கு மோட்சமோ, அல்லது பதவி வாங்கிக் கொடுப்பதோ அல்ல என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்து அறநிலையத் துறை தமிழ்நாட்டில் செயல்படும் வரலாற்றை அறியாத பிரதமர் மோடி!
நெறியாளர்: இதனுடைய நீட்சியாகத்தான் பிரதமர் தெலங்கானாவில் பேசுகிறார், தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஹிந்து வழிபாட்டுத் தலங்களை மாநில அரசே ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இப்படியான ஒரு விஷ யத்தை, சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களை, அதனுடைய நிர்வாகத்தை உங்களால் கைப்பற்ற முடியுமா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: பிரதமரின் நிலை கண்டு நான் சங்கடப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். எப்படி யென்றால், ஒரு பிரதமருக்கு, 1924 இல், அவர் பிறப்பதற்கு முன், நாமெல்லாம் பிறப்பதற்கு முன் – நீதிக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர், இந்து அறநிலையப் பாதுகாப் புத் துறை சட்டத்தைக் கொண்டு வந்து, கோவில்களில் ஒழுங்கீனங்கள் நடக்கின்றன என்பதற்காகத்தான், இந்த முறைகளைக் கையாண்டு, ஒரு துறையையே ஏற்பாடு செய்தார்கள்.
அதுமட்டுமல்ல, அதற்குப் பிறகு, பின்னாளில் வந்த ஒன்றிய அரசு, சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்களுடைய தலைமையில், இந்திய முழுவதும் உள்ள கோவில்களில், எவ்வளவு ஊழல்கள் நடந்திருக்கின்றன; ஒரு பாட்டில் சாராயத்திற்காக சிலையை விற்றிருக்கிறார்கள் என்பதை யெல்லாம் இரண்டாண்டுகள் விசாரணை நடத்திய சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் ‘‘Hindu Religious Endowments Commission” என்று அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார்.
ஆகவே, அந்தக் காலத்தில் நடந்ததையெல்லாம் அறிந்துதான், கணக்கு வழக்குப் பார்த்து, தணிக்கைப் பார்த்து நடத்துவதற்காக, இந்து அறநிலையத் துறை மூலமாக சட்டப்பூர்வமாக 1924 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டிருக்கின்றது.
அதேபோன்று, வஃக்போர்டு தனியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கே தவறு நடந்தாலும், அதில் தலையிடக்கூடிய அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது.
மற்ற மதக் கடவுள் சிலைகள் காணாமல் போனது என்ற செய்தி வரவில்லையே! அந்த சிலை காணாமல் போயிற்று, இந்த சிலை காணாமல் போயிற்று என்று செய்தி வரவில்லையே! இங்கேதானே, கடவுள் விசா வாங்காமல் வெளிநாட்டிற்குப் போய்விட்டு வருகிறார்.
ஆகவே, இந்த சூழ்நிலைகளையெல்லாம் பார்க்கின்ற பொழுது, எங்கே ஊழல் அதிகமாக இருந்ததோ, அதற் காக 1924 ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பூர்வமாக ஒரு துறை இருக்கிறது – அந்தத் துறை எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. இன்னுங்கேட்டால், அந்தத் துறையை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அந்தத் துறை தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் கோவிலில் கொலையும் – ஒழுக்கக்கேடும் நடக்கவில்லையா?
அரசமைப்புச் சட்டப் பிரிவு 25, 26 இல், சப்ஜெக்ட் 2- மத சுதந்திரம் என்பது கட்டுப்பாடு இல்லாத – லகான் இல்லாத குதிரை அல்ல. அதற்குக் கட்டுப்பாடு இருக் கிறது. அந்தக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கத் திற்குப் போதுமான அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் கொலை நடக்கவில்லையா? அதே ஊரில், தேவநாதன் என்கிற அர்ச்சகர் கோவிலில் எப்படி நடந்து கொண்டார் என்பது ஊரறிந்த விஷயம் அல்லவா!
ஆகவேதான், கோவில்களை தி.மு.க. அபகரிக்க வில்லை. கோவில்களை முழுக்க முழுக்க மற்றவர்கள் அபகரிப்பதைத் தடுப்பதற்காகத்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையே உருவாயிற்று.
வடபுலத்தில் இவையெல்லாம் இல்லாமல், அவரவர் கள் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டு, சாமியார்களும் மற்றவர்களும் கோவில்களை தங்கள் சொத்தாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அங்கே இதுபோன்ற தேவையில்லையென்று அவர்கள் சொல்கிறார்கள்.
இங்கே 1924 ஆம் ஆண்டே இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
பிரதமரின் தோல்வி பயம்!
நெறியாளர்: இவையெல்லாம் தேர்தலில் எதிரொலிக் குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. அதைத் தேர்தல் பிரச்சாரமாகக் கூட முன்வைப்பதற்கான வாய்ப் புகள் இருக்கின்றன. அதனுடைய தொடக்கமாகத்தான் தெலங்கானாவில் பிரதமர் பேசியிருப்பதை நாம் பார்க்கிறோம்?
தமிழர் தலைவர்: தோல்வியினுடைய பயத்தினால் தான் பிரதமர் மோடி அப்படி பேசுகிறார்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியில் கூறியுள்ளார்.