தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வியப்பின் விளிம்பில் நம்மைத் தள்ளும் அறிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின், சட்டப்பேரவை யில் சமர்ப்பிக்கப்படுவது -இடைக்கால பட்ஜெட் உள்பட (நான்காவது – முழுமையான பட்ஜெட்) நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் (165 பக்க உரை) இன்று (19-2-2024) சட்டப்பேரவையில் – ஒன்றிய அரசின் நிதி தரவேண்டிய பங்களிப்பைக் கூட சரியாகத் தராமல், பொருளாதாரக் கொள்கை நெருக் கடியை வைத்துள்ள நிலையிலும், நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும், பல்வேறு புதிய திட்டங்களுக்காக ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பு, பண வீக்கக் கட்டுப்பாடு எல்லாவற்றிலும் தமிழ்நாடு அரசின் தனித்த சாதனை சரித்திரத்தை மிக அருமையாக தயாரிக்கப்பட்டு, புதிய சாதனை சரித்திரத்தை இந்தியாவிற்கே ஒரு புதிய ஒளிகாட்டும் வகையில் – ஏழு வண்ணங்கள் ஒளியும், ஏழிசையும் கேட்க முடிகின்றது.
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் – வாழ்த்துகள்!
முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும், நிதித் துறை செயலாளருக்கும் நமது பாராட்டுகள்!
வியப்பின் விளிம்பில் அனைவரையும் தள்ளும் வித்தகு திறன்வாய்ந்த அரிய பட்ஜெட் இது!
விரிவாக பிறகு எழுதுவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19-2-2024