எதிர்த்து அழிக்க முடியாத பவுத்தத்தை அணைத்து அழித்தது ஆரியம்
சென்னை, அக், 6- அசோகர் – அம்பேத்கர் தம்ம யாத்திரை நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் அமைச்சர் கே.எஸ். மஸ்தான் கலந்துகொண்டார்.
அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான தம்ம அணிவகுப்பு எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அசோகர் – அம்பேத்கர் தம்ம யாத்திரை எனும் நிகழ்ச்சி 5.10.2023 அன்று காலை 11 மணியளவில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் டாக்டர் பாரதி பிரபு தலைமையேற்க, இரா.ஆதிமொழி அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் அமைச்சர் கே.எஸ். மஸ்தான், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, புத்தத் துறவி சமண அரிய பிரம்மா, சிறுபான்மையினர் ஆணையத் தின் உறுப்பினர் அறவண அடிகள் மவுரிய புத்தர், விமல் ராஜ், தம்ம தேவேந்திரன், மகாராட்டிராவைச் சேர்ந்த விகண்ட மெண்டே ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். இந்த தம்ம அணிவகுப்பு கேரளாவில் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங் கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைக் கடந்து அம் பேத்கர் பவுத்தம் தழுவிய நாளில் மகாராட்டிராவிலுள்ள தீட்சா பூமிக்கு சென்றடைந்து 10 அடி உயரமுள்ள அசோகர் சிலையை அங்கே நிறுவ உள்ளதாக அறிவித்தனர்.
“புத்தரும் அவரது தம்மமும்” என்ற நூலை ஆசிரியர் வெளியிட முதல் பிரதியை அமைச்சர் மஸ்தான் பெற்றுக் கொண்டார். கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு அசோகர் சிலை, இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரை நினைவுச்சின்னங்களாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பேசினார். இறுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார்.
அவர் தனது உரையில், திராவிடர் கழகம் 18 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிட்டு பரப்பி வருகின்ற புத்தகம்தான் இங்கே வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இது அம்பேத்கர் எழுதிய ஒப்பற்ற நூல்; அவர் எழுதிய கடைசி நூல்; அம்பேத்கரின் மேக்னம் ஓபஸ் நூல் என்றெல்லாம் அந்த புத்தகத்தின் சிறப்பை எடுத்துரைத்தார். இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள லிபர்ட்டி, ஈக்குவாலிட்டி, ஃப்ரட்டானிட்டி என்ற மூன்று சொற்களை அவர் பிரெஞ்சு புரட்சியிலிருந்து எடுத்தாள வில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னதிலிருந்து எடுத்தாண்டார் என்ற வரலாற்றுத் தகவலை கூடியிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டார். புத்தம் சரணம் கச்சாமி என்று தொடங்கும் மூன்று சொற்றொடர் களுக்கு பெரியார் சொன்ன விளக்கத்தை விளக்கினார். தந்தை பெரியாரோடு எந்த வடபுலத்துத் தலைவரும் அம்பேத்கர் போல் நட்பாக இருந்தது இல்லை என்கின்ற வரலாற்று உண்மையை வெளிப்படுத்தினார். மக்களுக் குத் தேவையான கொள்கையான பவுத்தம் ஏன் வீழ்ந்தது என்று கேள்வி கேட்டு, எதிர்த்து அழிக்க முடியாத பவுத் தத்தை அணைத்து அழித்துவிட்டது ஆரியம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தியா முழுவதும் தமிழர் கள் வாழ்ந்தார்கள் என்பதை அம்பேத்கர் நாகர்கள் என்று குறிப்பிட்டதை நினைவூட்டி, ஜாதி ஒழிந்து சமத் துவம் பரவவேண்டுமானால் பவுத்தம் பரவ வேண்டும். அந்தப் பணியைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ் நாடு, புதுச்சேரி, மகாராட்டிரா ஆகிய ஆறு மாநிலங்களி லிருந்து பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, மாரிமுத்து, உடுமலை வடிவேல், கமலேஷ், யுகேஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியில் தம்ம யாத்திரையில் அமைச்சரும் ஆசிரி யரும் கலந்துகொண்டனர்.