இது பெரியார் மண் இங்கு எதையுமே நேருக்கு நேர் நின்று எதிர்கொள்வதுதான் சங்ககாலம் முதல் திராவிட மாடல் ஆட்சி வரை நடக்கும் நிகழ்வுகள்
நடந்துமுடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் துவக்க நாள் அன்று சட்டமன்றத்தில் அவைத்தலைவர் செயல்பட்ட விதம் தந்தைபெரியார் தந்த துணிவு மேலும் மெருகேறி இருக்கிறது என்றே கூறலாம்.
சுயமரியாதைக்கு இழுக்கு வரும் இடங்களில் எல்லாம் தந்தை பெரியாரின் மாணக்கார்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? சட்டப்பேரவையில் நடந்தது என்ன? பேரவைத் தலைவர் மு.அப்பாவு விளக்கத்தைக் கவனியுங்கள்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “நடப்பாண்டு சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத் தொடரில் மரபுப்படி ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு வந்த அவரை அவை தலைவரான நானும், பேரவை முதன்மை செயலாளரும் வரவேற்றோம். அப்போது அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அச்சமயம் முழுமையாக தேசிய கீதம் இசைக்கப்பட்டே வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டப் பேரவைக்குள் விதி எண் 176(1) இன் படி தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர் உரை, தேசிய கீதம் என்ற வரிசையிலேயே மரபுப்படி அவை நடந்தது. ஆனால், மரபை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி விட்டார். இது போல் பல மாநிலங்களில் ஆளுநர்கள் மரபை மீறுவதால் தான், சட்டப் பேரவைக்கு அழைக்கப்படுவதே இல்லை. தெலங்கானாவில் சந்திர சேகரராவ் முதலமைச்சராக இருந்த போது, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்தது இல்லை.
ஆனால், கொள்கை, சித்தாந்தம் உள்ளிட்டவற்றில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் அரசமைப்புச் சட்டத்தை பின்பற்றி ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் உரை முன்பே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்றப் பிறகே வாசிக்கப்படுகிறது. அதில், உண்மைக்கு புறம்பான எந்த கருத்துகளும் இல்லை. எந்த அரசையும் குறை கூறும் வகையில் தமிழ்நாடு அரசின் உரை இல்லை.
ஆனால், ஆளுநர் முதல் சில வரிகளை வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார். இதே போல் தான் கேரளாவிலும் கடைசி வரிகளை மட்டும் ஆளுநர் வாசித்தார். அரசமைப்புச் சட்டத்தை மாற்றி ஆளுநர்கள் தங்கள் கருத்தை கூறுவது முறையல்ல.
“நாட்டுப்பற்றிலும் தேசிய தியாகத்திலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான். முதன்முறையாக சிப்பாய் கலகம் நடந்தது வேலூரில்தான்.” இது தமிழ்நாட்டு வரலாறு பற்றி மேடை தோறும் தப்புத்தப்பாக பேசும் ஆளுநருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு உணர வைக்க உரைக்கவைக்க இனிய பொருநை மண்வாசனை கலந்த தமிழ் பேசும் அவைத்தலைவர் அப்பாவு உடனடியாக தாமதமின்றி, “ ஆளுநரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND இல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ரூ50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என்று பதிலடி கொடுக்க அங்கே மொழி தெரியாமல் என்ன பேசுகிறார்கள் என்று உதவியாளரிடம் கேட்க அவரும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு சுருக்கமாக எடுத்துக்கூற உடனே அங்கிருந்து வெளியேறினார்.
தேசப்பற்று தேசபக்தி நாட்டுப்பண் என்று எல்லாம் தேசபக்தி பாடம் எடுக்கவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டுப்பண்ணைக் கூட புறக்கணித்து விட்டு இரண்டாவது முறையாக அவையிலிருந்து கிளம்பிவிட்டார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த மத்தியப் பிரதேச தேர்தலில் வெற்றிபெற்று நீண்ட இழுபறிக்குப் பிறகு மோகன் யாதவ் என்பவர் அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவின் போது அம்மாநில ஆளுநரான மங்குபாய் சாகன்பாய் படேல் முன்பு முதலமைச்சராக பதவி ஏற்ற மோகன் யாதவின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியது. பணிவு என்ற பெயரில் அவர் செய்த சில நடவடிக்கையால் ஒரு மாநில முதலமைச்சர் பதவிக்கான மாண்பே கேள்விக்குறியானது.
ஒருவேளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் மத்தியப்பிரதேச அமைச்சரவை போன்று தமிழ்நாடு அமைச்சர்களும் நடக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ.
ஆளுநர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் – இது பெரியாரின் பள்ளியில் பாலபாடம் படித்தவர்கள் அமரும் சட்டமன்றம். சுயமரியாதை இயக்கத்தால் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்து தெற்காசியாவிலேயே சிறந்த நற்குணங்களைப் பெற்றவர்கள் நிறைந்த மாநிலம் – இது அவர்களின் பிரதிநிதிகள் அமரும் சட்டமன்றம் என்பதை மறந்துவிட வேண்டாம்.