பாணன்
ஒருமுறை மதுரைப் பகுதிகளில் உள்ள சமணப் படுகைகள் தொடர்பான ஆய்விற்கு சென்றிருந்தோம். யானை மலையின் மேலே உள்ள பழைய எழுத்துகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் மட்டும் கீறல் போன்று தோன்றியது. அது ஏதாவது எழுத்தின் எச்சங்களாக இருக்குமா என்று பார்த்த போது அது கீழிருந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உருவான விரிசல் என்று தெரிந்துகொண்டோம். மெல்ல அதை பெயர்த்துப் பார்த்த போது அங்கே சிறு செடிகள் முளைவிட்டு பாறையை பிளந்து கொண்டு வெளியே வர காத்திருந்தன. பிறகு கவனித்த போது மலையில் பல பகுதிகளில் இதேபோன்று ஒருவித்திலைத் தாவரம் பாறையைப் பிளந்துகொண்டு பல இடங்களில் வளர்ந்து நின்றது.
பறவைகள் புல்லரிசிகளை உண்டு மலைமீது எச்சமிடும். அந்த எச்சத்தில் சில புல்லரிசிகள் வெளியே வந்து மழை பெய்யும் போது அம்மலையின் மீதான சிறிய பிளவுகளுக்குள் சென்றுவிடும். அப்படிச்சென்ற விதைகள் மீண்டும் மழை பொழியும் போது கடினமான பாறைகளைப் பிளந்து வளர்ந்து நிற்பதுதான் இயற்கை நிகழ்வு.
ஆனால் அடக்குமுறையை எதிர்த்து நின்று வெற்றி கொண்டதே அந்தக் கடினப் பாறைகள் நமக்குச் சொல்லும் பாடம் ஆகும்.
இந்தியத் தீபகற்பம் நதிக்கரை நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே வன்முறையில்லாத சமத்துவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தது. அந்த சமத்துவ வாழ்க்கைதான், வெளியே இருந்து வந்த அடக்குமுறைக்காரர்களை எதிர்த்து அமைதியான வழியில் போராட நமக்கு பெரிதும் உந்துதலாக இருந்து வந்தது.
இந்திய வரலாற்றில் தந்தை பெரியாரின் போராட்டங்களைப் போன்று வடக்கே தொடர்போராட்டங்களை நடத்திய தலைவர்கள் வெகுசிலரே.
தந்தை பெரியார் அவர்களின் போராட்டங்களில் எங்குமே வன்முறை கிடையாது. அமைதி வழியில் நடந்த அந்தப் போராட்டம் ஒவ்வொரு முறையும் வெற்றிக் கனியையே பரிசாகத் தந்துள்ளது.
வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சுசீந்தரம் சத்யாகிரகப் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம், ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம், ரயில் நிலையங்களில் ஹிந்தி பெயர் அழிப்புப் போராட்டம், வகுப்புரிமைப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், பிராமணாள் கபே பெயர் அழிப்புப் போராட்டம், ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்கள். எங்கும் வன்முறை என்பது கிடையாது.
ஆனால், அந்தப் போராட்டங்கள் ஆதிக்க சக்தியின் அகம்பாவத்தை அசைத்துப் பார்த்தன.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஒன்றே மிகப் பெரும் எடுத்துக்காட்டு. வட இந்தியாவில் பல மாநிலங்களில் கல்வியின் நிலை இன்றும் கேள்விக் குறியாகவே உள்ள நிலையில், போர்ச்சுகீஸ், ஸ்பெயின், தென்கொரியா, ஹாலந்து போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் கல்வித்தரத்தோடு தமிழ்நாடு போட்டிபோட்டுக்கொண்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓட்டுமொத்த இந்தியாவும் அடையவேண்டிய கல்வித்தர குறியீட்டை தமிழ்நாடு 2009ஆம் ஆண்டே கடந்துவிட்டது.
இதற்குக் காரணம் ஹிந்தித் திணிப்பு நீங்கி, மும்மொழிக்கொள்கை ஒழிந்து இருமொழிக்கொள்கை இங்கே உறுதி செய்யப்பட்டதுதான்.
அன்றைய காலகட்டத்தில் நவீன புரட்சிக்கு ஈடான சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி திராவிட இனத்தின் தன்மானத்தைக் காக்க பெரியார் மேற்கொண்ட போராட்டங்களை அன்றைய பார்ப்பனிய ஊடகங்கள் முற்றாக மறைக்கும் வேலையைச் செய்தன.
முக்கியமாக அய்ரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும், ஆண்டான் – அடிமை ஒழிப்புப் போராட்டமும் உலகம் முழுவதும் பேசப்பட்டது,
கிட்டத்தட்ட அதே போராட்டம் தான் தந்தை பெரியாராலும் திராவிட மண்ணில் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் மேலை நாட்டுப் போராட்டங்களை சிலாகித்து எழுதிய பார்ப்பனிய ஊடகங்கள் தந்தை பெரியாரின் சீரிய போராட்டங்களை வெகுஜனத்திடம் கொண்டு செல்லாமல் மறைத்துவிட்டன.
அன்றைய காலகட்டத்தில் மட்டும் நாளிதழ்கள் அனைத்துப் போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் தந்தை பெரியாரின் போராட்டங்களும் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தையே எடுத்துக்கொள்ளலாம்.
சுமார் 80 ஆண்டுகள் கழித்து மேற்கு வங்கத்தில் கர்கா சாட்டார்ஜியும், கருநாடகத்தில் வியஜகுமரனும், 1930களில் தந்தை பெரியார் நடத்திய ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை நினைவு கூருகின்றனர். இப்போது அந்த நிகழ்வுகளை வங்கத்திலும், கன்னட மொழியிலும் எழுதி வருகின்றனர்.
இந்தியாவிற்குள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் ஏதேனும் ஒரு வகையில் தந்தை பெரியாரின் போராட்டத்தின் தாக்கம் எதிரொலிக்கிறது, ஆகையால் தான் வட இந்தியாவில் நடக்கும் போராட்டங்களில் தந்தை பெரியாரின் படங்களோடு பஞ்சாபியரும் வங்கத்தினரும் பேரணி செல்கின்றனர்.
போர்க்காலத்தில் இரவு நேரத்தில் கூட எதிரிகளின் திட்டங்களை அறிந்து அதனை முறியடிக்க அதற்கென்று சிறப்பாக அமைக்கப்பட்ட படைப் பிரிவு உண்டு. இரவு நேர தாக்குதலுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று தாக்குதல் நடத்துவார்கள்.
ஆனால், டில்லி எல்லைகளில் விவசாயிகளுக்கு எதிராக நள்ளிரவு நேரத்திலும் தாக்குதல் நடத்துகின்றனர்.
காவல்துறை மற்றும் சிறப்பு ராணுவத்தினரால் நவீன வகை புகைக் குண்டு, மூளையைக் குழப்பும் ஓசையை உருவாக்கும் சோனிக் கருவிகள், ரப்பர் குண்டுகள், ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறியவகை ரவைகளை ஒலியின் வேகத்தில் வீசச் செய்யும் ஏவுகணைகள் என்று ஏதோ எதிரி நாட்டு பகைவர்களைக் கையாள்வது போல் டில்லி எல்லைகளில் விவசாயிகள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களோ காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு அடுத்த குழு குண்டுகளை தங்கள் மீது ஏற்றுக்கொள்ள தாயராக முன்னோக்கிச் செல்கின்றனர்.
“ஜாலியன் வாலாபாக்” போன்ற ஒரு கொடூரத்தை இங்கே விவசாயிகள் மீது தொடுத்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு.
“தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழில் வந்த ஒரு செய்தி – அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது நடந்த கொடூரத்தாக்குதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழாக்கம்
அரியானா காவல்துறை விவசாயிகள் மீது பெல்லட் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதில் 3 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாட்டியாலாவில் உள்ள கனாவுரைச் சேர்ந்த விவசாயி டேவிந்தர் சிங் பாங்கு ஷேகுபுரியா, (22) என்பவருக்கு கண்ணில் உள்ள துப்பாக்கி துகள்களை அகற்ற அறுவைச் சிகிச்சை வேண்டியதாயிற்று. சண்டிகரில் செக்டார் 32இல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஷேகுபுரியாவின் மருத்துவர்கள் நிலைமை மோசமானதை உறுதிப் படுத்தினர். அவர் தனது இடது கண் பார்வையை நிரந்தரமாக இழந்திருக்கலாம் என்று கூறினர்.
இதுபோன்று பெல்லட் துப்பாக்கி தாக்குதலில் குறைந்தது மூன்று விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர் என அமைச்சர் கூறினார். அரியானா காவல்துறை, டில்லியை நோக்கி விவசாயிகள் பேரணி செல்வதைத் தடுக்கும் முயற்சியில் பஞ்சாப் – அரியானா எல்லையில் ஷம்பு (பாட்டியாலா-அம்பாலா எல்லை) மற்றும் கானவுரி (சங்ரூர்-ஹிசார் எல்லை) ஆகிய இரண்டு இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் கூறுகையில், “3 விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சண்டிகரில் உள்ள GMCH32இல் சிகிச்சையில் உள்ளார். இருவர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களை சென்று பார்த்தோம். அவர்களின் கண்களை காப்பாற்ற முடியவில்லை.
அரியானா காவல்துறை தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமல்ல, தோட்டாக்கள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளது என்றார். டாக்டர் மற்றும் அமைச்சரான பல்பீர் சிங் கண் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆவார். 12க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெல்லட் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
அரியானா ஏ.டி.ஜி.பி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மம்தா சிங் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்”ஸிடம் கூறுகையில், “கண்ணீர் புகைக்குண்டு தவிர, நாங்கள் ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களில் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினோம், எங்கள் படைகள் 2,000-3,000 பேர் கொண்ட கும்பலால் சூழப்பட்டபோது அதை செய்தோம். ரப்பர் தோட்டாக்கள் உயிரிழப்பு ஏற்படுத்தாத வெடிமருந்துகளாகக் கருதப்படுகின்றன. அவர்கள் எங்களை நெருங்கி வந்து தாக்குதல் நடத்திய போது தான் நாங்கள் அவற்றைப் பயன்படுத்தினோம்” என்றார்.
ஷேகுபுரியா உடன் இருந்த நண்பர் பர்மிந்தர் சிங் கூறுகையில், “அவர்கள் Ghaggar ஆற்றங்கரையோரம் உள்ள வயல்வெளிகளில் நடந்து கொண்டிருந்தபோது, ஷேகுபுரியா அவர்கள் குழுவில் இருந்தவர்களை விட சிறிது முன்னே நடந்தார்.”
“எல்லையை நோக்கி நடந்து கொண்டிருந்த வேறு சில விவசாயிகளுடன் அவரைப் பார்த்தோம். சாலைத் தடுப்புகளை உடைக்க விவசாய சங்கத் தலைவர்களிடம் இருந்து உத்தரவு வரவில்லை; அவர்கள் வெறுமனே ஆர்வத்தால் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, எதிர்ப்பாளர்களில் சிலர் அவரைத் தூக்கிச் சென்றனர் – அவர் இடது கண்ணில் இருந்து அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது” என்று பர்மிந்தர் கூறினார்.
“நாங்கள் அவரை பானூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்கள் அவரை சண்டிகரில் உள்ள செக்டார் 32 மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் “அவரது இடது கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாக கூறினர்” என்றார்.
“ஷேகுபுரியா தனது பட்டப்படிப்புக்குப் பிறகு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் இப்போது பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ. சமூகவியல் படித்து வருகிறார்” என்றார்.
40 கி.மீ. தொலைவில், ராஜ்புராவில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜக்தார் சிங் கோட்டா ரோடா (56) பதிண்டாவில் உள்ள ராம்பூர் பூலைச் சேர்ந்த விவசாயி, அவரது கை மற்றும் முதுகில் எலும்பு முறிவு மற்றும் பெல்லட் குண்டு காயங்களிலிருந்து மீண்டு வருகிறார்.
ஜக்தார் சிங் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸி’டம் கூறுகையில், “நான் யாரையும் தூண்டவில்லை. அரியானா காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது, வாயு வெளியேறுவதைச் சரிபார்க்க நான் அவர்களில் சிலரை ஈரமான பைகளால் மூட விரைந்தேன். திடீரென்று பின்னாலிருந்து ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது. வலி இருக்கிறது. எனக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
பார்தி கிசான் யூனியனின் (ஏக்தா-சித்துபூர்) செய்தித் தொடர்பாளர் குர்தீப் சிங் சாஹல் கூறுகையில், பல விவசாயிகளுக்கு பெல்லட் குண்டுகளால் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வருகிறோம். விரைவில் அவற்றை வெளியிடுவோம்” என்றார்.
போராட்டக்களத்தில் வன்முறைகள் என்றுமே ஆதிக்க சக்திகளின் சதித்திட்டத்திற்கு துணை போகுமே தவிர தீர்விற்கான வழியாக அமையாது.
தந்தை பெரியாரின் போராட்டக்களம் எதிர்கால இந்தியாவில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களிற்கும் புதிய பாதையை அமைக்கும், அது வெற்றிக்கான பாதையாக இருக்கும். இதை – வரலாறு இன்றும் சொல்கிறது, எதிர்காலத்திலும் சொல்லிக்கொண்டுதான் இருக்கும்.