சில நாள்களுக்கு முன் நமது வளர்ச்சிக்கு முதல் எதிரி, இரண்டாம் எதிரி, மூன்றாம் எதிரி, நான்காம் எதிரி யார் யார் என்பதை வாழ்வியல் நெறி மேதை வள்ளுவப் பேராசான் எப்படி தனது குறளான
“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்” (குறள் 605)
காலந்தாழ்த்துதல், மறவி எய்தல், சோம்பல் அடைதல், அளவுக்குமீறிய தூக்கம் கொள்ளுதல் ஆகிய நான்கு தீய பண்புகளும், உறுதியாக அழியக் கூடிய இயல்புடையோர் தாமே விரும்பி ஏறிச் செல்லும் மரக்கலன்களாக ஆகிவிடும்.
இதில் சோம்பேறித்தனம் எப்படி ஒரு மனிதனின் வாழ்வை சீர்கேடடையச் செய்யும் என்பதை முன்பு இரண்டு வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் மூலம் வாசகர்களிடையே கருத்தைப் பரிமாறிக் கொண்டோம்.
இப்போது “காலந் தாழ்த்துதல்” – (அதைத்தான் குறளாசிரியர் வள்ளுவர் முன்னே வைக்கிறார் என்பதை கூர்ந்து கவனித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் நாம்!)
“காலம்” என்பதைவிட உலகில் குறிப்பாக மனித வாழ்வில் – கிடைத்தற்கரிய பொருள், விலை மதிக்க வொண்ணா, ஒன்று வேறு கிடையவே கிடையாது.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நமக்குக் கிட்டிய ஒப்புவமையற்ற வாய்ப்புச் செல்வம் என்பதை மறந்து விட்டு – பயனற்ற முறையில் காலத்தை – அதன் அருமை, பெருமை புரியாமல் வீணடிக்கிறார்கள் பல மனிதர்கள்!
வெட்டி வேலைகளிலும் – வீண் முயற்சிகளிலும் தனக்குக் குழியை தானே தோண்டிக் கொள்ளும் விவகாரங்கள் உருவாக்கிய வெற்றுச் செயல்களில் ஈடுபட்டு – காலம் என்ற மதிப்பிட முடியாத அருமைச் செல்வத்தைப் பெற்று வளர்த்துப் பயனடைய மறுத்து, பயனற்ற வாழ்க்கையை அளவற்ற சுயநலத்தோடு வாழ்ந்து, மிருகங்களுக்கு எப்படி காலத்தின் அருமை புரிய வாய்ப்பில்லையோ – அப்படி விழுவது பகுத்தறிவுள்ள மனித குலத்தின் மாண்பையே கொச்சைப்படுத்தும் கோணல் செயல் ஆகும்!
உலகின் ஒப்பற்ற சாதனையாளராக வலம் வந்த அல்லது வலம் வரும் அறிஞர்கள் அனைவருக்கும், அதேபோல் வெட்டியாக கால மதிப்புத் தெரியாத வாழ்வை வீணடிக்கும் மனிதர்கள் ஆகிய இரு சாராருக்கும் – மற்ற எல்லோருக்கும் கிடைப்பது 24 மணிநேரம் தான், 60 மணித் துளிகள்தாம்; 60 வினாடிகள்தான்.
அவர்களுக்கு அவை எப்படிப் பயன்பட்டு உலகின் வியப்புக்குறிகளாக, அவர்கள் ஆக முடிகிறது? என்ற கேள்வியைக் கேட்டு அதற்குத் தக்க விடை காண முயலுங்கள்.
வாழ்வில் வெற்றி பெற்ற மாமனிதர்கள் முதல் வழி முறையே, காலத்தை மதித்து, அதனை மிகவும் சிறப்புடன் கூடிய அரிய வாய்ப்பாக மதித்து, உழைத்து வெற்றிக்கனி பறித்து வருகிறார்கள்!
வேறு சிலரோ, காலத்தின் அருமை புரியாமல் பயனற்ற பேச்சு, வீண் செயல்களில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட்டு ‘மனிதப் பதர்களாக’ மாறி ‘சோகாப்பர்களாகி’ நிற்கும் பரிதாபத்திற்குரிய ஆளாகி மடிகின்றனர்.
காலந் தாழ்த்துவதில் உள்ள முதல் குற்றம் – திரும்பப் பெற முடியாத அரிய செல்வத்தை அதன் அருமை தெரியாது ஏதோ ஒன்று என்று மதிப்பிடாது – மூடத்தனத்தினால் மூலையில் முடங்காது – சொன்ன நேரத்தில் எண்ணிய செயலைச் செய்யப் பழகுவதுதான் தனி மனித வாழ்வின் வெற்றிக்கான முதல் தேவையாகும்!
குறித்த நேரத்தில் குறித்தச் செயல் என்பதுதான் ஆங்கிலத்தில் றிuஸீநீtuணீறீவீtஹ் என்ற நேரந் தவறாமை.
புரட்சிக் கவிஞரின் ஓரிரு வரிகளை வாழ்வின் வெளிச்சமாக்கி வாழுங்கள் “கடிகாரம் ஓடு முன் ஓடு!” என்னே நேர்த்தியான வாசகங்கள்!
(நாளை தொடரும்)
இதோ, நமது இரண்டாவது எதிரி! (1)
Leave a comment