உத்தராகண்ட் மாநிலம் ஹல்ட்வானி நகரில் வான்புல்புரா பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலமான மசூதி மற்றும் இஸ்லாமிய மதப்பள்ளியான மதராசா உள்ளன. இந்த இரு கட்டடங்களும் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன என்று கூறி கட்டடங்களை இடிக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த பிப்.8ஆம் தேதி (வியாழக்கிழமை) நகராட்சி அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் கட்டடங்களை இடிக்க வான்புல்ரா பகுதிக்குச் சென்றனர். “நீதிமன்ற ஆணை” எனக் கூறி 2 கட்டடங்களையும் இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
மேலும் அப்பகுதி ஹிந்து அமைப்பினர் மசூதிகள் இடிக்கப்படும் போது, கூட்டம் கூட்டமாக வந்து பஜனை பாடிக்கொண்டு இருந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழலில், காவல்துறையினர் ஹிந்து அமைப்பினரை அகற்ற முயன்ற போது, அவர்கள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால், வான்புல்புரா பகுதியே வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். வன்முறை நிகழ்வால் காவல்துறையினர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ஹல்ட்வானி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தொலைப்பேசி இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை நிகழ்வு தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையால் உத்தராகண்ட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், வான்புல்புரா பகுதியில் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் காவல் நிலையம் கட்டப்படும் என்று உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் ஒரு கால கட்டத்தில் இது போன்ற மதக் கலவரங்களை உற்பத்தி செய்து, மத நம்பிக்கையுள்ள மக்களை இரு கூறாகப் பிரித்து, (Polarisation) பெரும்பான்மை மத நம்பிக்கையுள்ள மக்களின் வாக்குகளை அள்ளுவதுதான் பி.ஜே.பி. சங்பரிவாரங்களின் கடைந்தெடுத்த புத்தியும், யுக்தியுமாகும்.
சாதனைகளைச் சொல்லி வாக்கு வாங்க முடியாத வர்களின் கோழைத்தனமான செயல்கள் தான் இவை.
இதற்கு முன்புகூட உத்தரப்பிரதேசத்தில், 2013ஆம் ஆண்டில் தேர்தலுக்கு முன்பு முசாபர் என்னுமிடத்தில் மதக் கலவரத்தை உருவாக்கி வெற்றி அறுவடையை அனுபவிக்கவில்லையா? உத்தராகண்டில் இப்பொழுது நடந்திருப்பதும் அந்த வகை கீழ்த்தர வக்கிர நட வடிக்கையே!
அரசு நிலத்தில் மசூதி மட்டும்தான் கட்டப்பட்டுள் ளதா? ஹிந்துக் கோயில்கள் கட்டப்படவில்லையா?
“நாட்டில் அனுமதியின்றி பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள எந்த மதக் கோயிலாக இருந்தாலும் இடிக்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தால் 2010ஆம் ஆண்டில் தீர்ப்புக் கூறப்படவில்லையா!
“தமிழ்நாட்டில் மட்டும் அனுமதியின்றி பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள 77,450 கோயில்கள் அகற்றப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்தாத மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் உச்சநீதி மன்றம் வர வேண்டும்” என்று தீர்ப்புக் கூறப்பட்டதே! (14.9.2010).
அதனைச் செயல்படுத்தாது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உட்பட தேர்தலுக்கு முன் மதக் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டு விட்டார்கள். அதன் சமீப கால தொடக்கம்தான் உத்தராகண்ட் – எச்சரிக்கை!