காஞ்சிபுரம்,பிப்.15- கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியரும் திராவிட சித்தாந்த எழுத்தாளருமான ப.திருமா வேலன் எழுதிய ’வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்’ புத்த கம் கடந்த 9.2.2024 அன்று காஞ்சிபுரத்தில் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமையில் நடந்த வெளியீட்டு நிகழ்வில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு புத்தகத்தை வெளியிட, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனின் முன்னிலை யில் நிதி மற்றும் மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். புத்தகத்தின் ஆசிரியர் ப.திருமா வேலன் புத்தகத்தை அறிமுகப் படுத்தி ஆற்றிய உரை:
”50 ஆண்டுகளுக்கு முன்பு 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி, இதே நாளில்தான், திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப் பட்ட நாள், இந்த நாள்.
”1300 ஆண்டுகளுக்கு முன்பு சீன யாத்ரீகரான யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வந்து சென்றதை குறிப்பிடும்போது அவரின் டைரி யில் ’’கஞ்சியாவரம்’ என்கிற திரா விட தேசத்துக்கு, நான் சென்று வந்தேன்’ என்று எழுதியிருக்கிறார். இதன் மூலம், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு திராவிட தேசம் என அழைக்கப்பட்ட ஓர் இடம்தான், இந்த காஞ்சிபுரம் என்பது நிரூபணமாகியுள்ளது.
”1925-ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி ஏற்க முடியாது என்று சொன்ன போது, காங்கிரஸிலிருந்து வெளி யேறிய, பெரியார், சுயமரியாதை இயக்கம் காண்பதற்கு தூண்டு கோலாக இருந்தது, இந்த காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாடுதான்.
”காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியாரை 10 ஆண்டுகள் கழித்து, அறிஞர் அண்ணா சந்தித்து, அவரோடு பயணம் செய்து சமூக சீர்த்திருத்த இயக்கத்தில் அவரின் தளபதியாக செயல்பட்டார். பெரியாரின் சீட ராக மட்டுமே இருந்து விடாமல் அவரின் தத்துவங்களை எல்லாம், நாட்டுக்கு சட்டங்களாக இயற்றித் தர வேண்டும் என்பதற்காக, ஒரு தனி இயக்கத்தை திராவிட முன் னேற்றக் கழகம் என அறிஞர் அண்ணா தொடங்காமல் போயிருந்தால், தமிழ்நாட்டின் 50 ஆண்டு காலமும் இருண்ட காலமாக ஆகியிருக்கும்.
”இருண்ட காலம் தமிழ் நாட்டை அண்டாமல் தடுத்தவர், இதே காஞ்சி மண்ணை சேர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள்தான். சி.என். அண்ணாதுரை என்பது காஞ்சிபுரம் நடராஜன் அண்ணா துரை என்பதாகதான் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
”இத்தகைய பெருமைகள் பெற்ற இந்த ஊரில், வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சில நாசகார சக்திகள், பெரியா ருக்கும் வைக்கத்திற்கும் தொடர் பில்லை என்று எழுதியபோது, அதற்கு பதிலாக எழுதப்பட்ட நூலை காஞ்சிபுரத்தில் வெளியிடுவதில், நாங்கள் பெருமையடை கிறோம். ஏனென்றால், பெரியா ருக்கு தொடர்புடைய ஊர் இது.
”காந்தியார், 1933-இல் இதே காஞ்சிபுரத்திற்கு வந்து, தீண் டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்த போது, தாழ்த்தப்பட் டோரை கோவிலுக்குள் அழைத்து சென்றுவிடுவாரோ என்பதற்காக, அன்று காஞ்சிபுரத்தில் கோவிலை மூடினார்கள். அதற்கு பிறகு தான், தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம் என்பதையே காந்தியார் மிகவேக மாக முன்னெடுத்தார் என்பதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
”அப்படிப்பட்ட பெருமை மிகுந்த ஊரில், இந்த புத்தக வெளி யீட்டு விழாவை நடத்துவதில், நான் பெருமை கொள்கிறேன்.”
இவ்வாறு ப. திருமாவேலன் உரையாற்றினார்.