இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி 2024 மக்களவைத் தேர்தலைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் பேசும் பொழுதெல்லாம் பதற்றமடைவதாகத் தெரிகிறது.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் – விவரம் தெரியாமலும் வார்த்தைகளைக் கொட்டுகிறார்.
அவருக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியானது – அவர்களின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு மட்டும் அடி பணிந்தே ஆக வேண்டும் என்பதுதான் அந்த உண்மை.
சில நாட்களுக்குமுன் – தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக அமைப்பு ரீதியில் இயங்கி வரும் இந்து அறநிலையத் துறைபற்றி – அவர் பேசிய பேச்சு மிகவும் பரிதாபத்துக்குரியது!
தமிழ்நாடு அறநிலையத் துறையின் வரலாறு தெரியாது அரைகுறை தகவல்களோடு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார். தனிநபர்களின் கையில் கோவில்கள் இருந்தபோது தமிழ்நாட்டில் ஹிந்து மக்கள் தங்கள் கடவுள்களை கும்பிட நடத்திய ஆலய நுழைவுப் போராட்ட வரலாறு மோடிக்கு தெரிய வாய்ப்பு இல்லை!
மக்கள் வரிப் பணத்தில், அரசர்கள் வழங்கிய பல லட்சக்கணக்கான ஏக்கர்கள் கோயில் நிலம் பார்ப்பனர்களால் மட்டுமே சுரண்டப்பட்ட போது அதனைத் தடுத்து நிறுத்த நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் சென்னை மாநிலப் பிரதமராக (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்து அறநிலையத்துறை. இந்த வரலாறு எல்லாம் மோடிக்கு தெரிய வாய்ப்பு இல்லை!
மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களில் கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்ததுபோல ஆரிய நாகங்கள் குடிபுகுந்து கோயில் சொத்துகளை எல்லாம் ‘சோகா’ செய்த கொடுமையை சுரண்டலைத் தடுத்து நிறுத்தத்தான் இந்து அற நிலையத்துறை கொண்டு வரப்பட்டது.
கோயில் அர்ச்சகர்களின் சுரண்டலைக் கண்ணுக்கெதிரே பார்த்த பக்தப் பெரு மக்களின் குமுறலின் வெளிப்பாடுதான் இந்து அறநிலையத்துறை என்பதைப் பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும்.
சர்.சி.பி. ராமசாமி அய்யரின் தலைமையில் இந்து மத அற நிலையங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்று 1960ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. அது இரண்டாண்டுகள் நாடு முழுவதும் சுற்றி விரிவான அறிக்கையை அரசிடம் தந்தது.
அந்த அறிக்கையைப் பார்த்தாலே – கோயில்கள் பார்ப்பனர்களின் சுரண்டல் ‘சொர்க்கமாக’ இருந்தன என்பது நிர்வாணப்படுத்தப்பட்டு விட்டதே!
எடுத்துக்காட்டுக்காக ஒன்று.
தமிழ்நாட்டின் புகழ் மிக்க வளம் மிக்க நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 60 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் சொந்தமாக இருந்தது என்று தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன. ஆனால் இந்தக் கோயிலின் விவகாரங்களை சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான ஆணையம் பரிசீலித்துப் பார்த்த போது 40 ஆயிரம் ஏக்கர் நிலம் காணாமல் போய் விட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
“தமிழ்நாட்டில் மட்டுமல்ல; காசி, விந்தியாச்சல் கயா, தேவ்சார், பூரி மற்றும் புவனேஸ்வரம் ஆகிய கோயில்களில் பெரும்பான் மையான காணிக்கைகளின்மீது கட்டுப்பாடு விதிக்கவும் பரம்பரைப் பாத்தியதை கோரவுமான உரிமை பண்டாக்களுக்கே இருந்தது.
அனேகமாக இவர்கள் தற்குறிகளாக இல்லையென்றால் தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் பெற முடியுமோ, அவ்வளவுப் பணம் பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே வேலை – இவற்றை எல்லாம் ஆதாரப் பூர்வமாக ஆவணங்கள் ரீதியாக அலசிக் காட்டியது அய்யர் கமிஷன் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
தமிழ்நாட்டில் கணபதி பிள்ளை தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை 1968இல் தாக்கல் செய்யப்பட்டது. அது கூறுகிறது: “கோயில் நிலங்களில் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் பினாமிப் பட்டாக்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் பிறர் அனுபோகத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தோண்டத் தோண்ட நெஞ்சை உலுக்கும் கேடு கெட்டுப் போன முறைகேடுகளும், ஒழுக்கக் குறைபாடுகளும் பீறிட்டுக் கிளம்பும்.
இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும், பினாமி நிலங்களை மீட்கவும் தான் இந்து அற நிலையத்துறை என்பது இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டது நீதிக்கட்சி ஆட்சியில்!
திராவிட மாடல் அரசில் மாண்புமிகு அமைச்சர் பி.கே. சேகர்பாபு அற நிலையத்துறைக்குப் பொறுப்பேற்ற நிலையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலங்களை மீட்டெடுக்கும் தகவல்கள் நாளும் வந்து கொண்டுள்ளன.
தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை பற்றிய தகவல்களை இதுவரை பிரதமர் அறியாமையில் இருப்பாரேயானால் அவருக்குரிய வசதிகளையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தித் தரவுகளைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்போர் ஹிந்துக் கோயில் களின் சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டாமா? அந்தக் கண் ணோட்டத்தில் பார்த்தாலும் இத்துறையை அகில இந்திய அளவில் கொண்டு வந்து கோயில் கொள்ளைகளையும் சுரண்டல்களையும் தடுக்கலாமே!
தடுப்பாரா? தப்புத் தப்பாகப் பேசுவதை நிறுத்துவாரா? எங்கே பார்ப்போம்!