இனி வெறும் விளம்பரங்களும், வித்தைகளும் எடுபடாது- விவசாயிகளின் கண்ணீர் தேர்தலில் பிரதிபலிக்கும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

viduthalai
5 Min Read

* விவசாயிகளின் ஜனநாயக முறையான போராட்டத்தை ஒடுக்குவது நியாயமா?
* 2021 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தானே அவர்கள் கோருகிறார்கள்!

2021 ஆம் ஆண்டில் பஞ்சாப், அரியானா, உத்திரப் பிரதேச விவசாயிகள் ஓராண்டு தலைநகரமாம் டில்லியில் நடத்திய போராட்டத்தின்போது, பிரதமர் கொடுத்த உத்தரவாதங்களை செயல்படுத்தாமல், கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை ஒடுக்க முயலுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீர் நடக்கவிருக்கும் தேர்தலில் எதிரொலிக் கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:
எல்லா தொலைக்காட்சிகளையும் திறந்தால், அடிக் கொரு தரம் நிகழ்ச்சிகள், செய்திகள், சீரியல்களுக் கிடையே ‘‘பிரதமர் மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில் புதுப்புது உத்தரவாத அறிவிப்புகள் என்ற வெளிச்சம் மின்னிக் கொண்டே இருக்கிறது.
விளம்பரங்களும், வித்தைகளும் செல்லுபடியாகுமா?
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொது வெளிகளிலும் இந்த உத்தரவாத விளம்பர வெளிச்சங்களுக்குப் பஞ்சமே இல்லை.
இந்தப் புதிய உத்தரவாதங்கள் என்ற தேர்தல் வாக் குறுதிகள்மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று கனவு காண்பதோடு, ஒருபுறம் உள்ளார்ந்த அச்சம், மறுபுறம் சில சில புதிய ‘‘வித்தைகள்” அரங்கேற்றம் – அதில் ‘பாரத ரத்னா’ விருதுகளை வாரி வழங்கி, அவற்றையே தனதுவாக்கு வங்கியின் ‘‘சக்கர வியூகமாக” எண்ணி, வியூகம் வகுத்து உலா வருகின்றார் பிரதமர் மோடி – மணிப்பூரைத் தவிர்த்து!

விவசாயிகளின் ‘‘டில்லி சலோ” பயணம்!
இந்த நிலையில், தலைநகர் டில்லியில் எந்த அரசியல் கட்சியையும் சாராத அகில இந்திய கிசான்கள் – விவசாயிகள் ஒரு பெரும் திரளாக அணிவகுத்து, ‘‘மோடி அரசு ஏற்கெனவே கொடுத்த உத்தரவாதத்தை நிறை வேற்றவே இல்லை. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் விவசாயிகளுக்குப் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி கள் காற்றோடு போய்விட்டதை இப்போதாவது நிறை வேற்றிக் காட்டுங்கள்” என்று கோரிக்கை வைத்தே பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநில விவசாயிகள் ‘‘டில்லி சலோ” என்று டிராக்டர்களில் பயணம் செய்து டில்லியை நோக்கி வருவது பரபரப்புச் செய்தியாகி உள்ளது!
‘‘இந்தப் பெருந்திரள் விவசாயிகளின் போராட்டத் திற்கு எந்த அரசியல் கட்சிகளின் தூண்டுதலும் கிடை யாது” என மீண்டும் போராடக் கிளம்பியுள்ள விவசாய சங்க அமைப்பின் பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள்.

விவசாயிகள் கோரிக்கைகள் என்ன?
‘‘2021 ஆம் ஆண்டு முழுவதும் நடந்த (விவசாயி களின்) போராட்டத்தின்போது, பிரதமர் மோடி எங்களது அன்றைய போராட்டத்தை நிறுத்தச் சொல்லி கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றத் தவறியதால் தான், மீண்டும் ‘‘டில்லி சலோ” என்ற அமைதி வழி அறப்போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
புதிய கோரிக்கைகள் எதனையும் நாங்கள் இப்போது வைக்கவில்லை. அவற்றிற்கு செயல் வடிவம் தந்து – உத்தரவாதங்களை – நீர் எழுத்தாக அமையாமல் செயற் பாடுகளாக மோடி தலைமையிலான அரசு மாற்றிக் காட்டவேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்” என்று கூறுகிறார்கள்.
சண்டிகரில் ஒன்றிய அரசுடன் நடந்த மாராத்தான் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்பதால், ‘‘எங்கள் போராட்டம் தொடரும்” என்று ஆயத்தமாகி களமாடப் புறப்பட்டு விட்டார்கள்!

பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை!
சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத) ஒருங் கிணைப்பாளர் ஜக்ஜித் டல்வால் மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஒருங் கிணைப்பாளர் சர்வான்சிங் பந்தர் ஆகிய விவசாய அமைச்சகப் பிரதிநிதிகள் – ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவகார மூத்த அமைச்சர் பியுஷ் கோயல், விவசாய அமைச்சர் அர்ஜூன்முண்டா மற்றும் அதிகாரி களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் வராததால், போராடத் துணிந்த விவசாயிகள் அறவழி யில், ‘‘டில்லி சலோ” முழங்கி, கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகிய இரண்டு அமைப்புகள் தங்களது கோரிக்கைகளுக்காக பிப்ரவரி 13 ஆம் தேதி (செவ்வாயக்கிழமை) மேற்கொண்ட ‘‘டில்லி நோக்கி அணிவகுப்போம்” என்ற முழக்கத்தோடு டில்லிக்கு வரத் தொடங்கி விட்டனர்.

பிரதமர் மோடி கொடுத்த
உத்தரவாதம் என்னாயிற்று?
விவசாயிகளது நியாயமான கோரிக்கைகளை ஏற்று – செயற்படுத்துவோம் என்று பிரதமர் மோடி கொடுத்த உத்தரவாதப்படி செய்தாரா?
1. அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price – MSP) உறுதி செய்யும் சட்டம்.
2. எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் ஃபார்மூலாமூலம் பயிர் விலை நிர்ணயம்.
3. 2021 ஆம் ஆண்டு முழுவதும் நடந்த போராட்டத்தின்போது விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகளை ‘வாபஸ்’ பெறவேண்டும்.
4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை நாட்களின் எண்ணிக்கை 200 ஆக இருக்கவேண்டும்.
5. 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் உத்திரப்பிரதேசம் லக்கிம்பூர் – கெரியில் விவசாயிகள்மீது வாகனம் ஏற்றிக் கொன்றதில் அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்மிஸ்ரா- நீக்குதல் போன்ற வாக்குறுதிகள்.
இவற்றை மீண்டும் பேசி, உத்தரவாதங்களை எப்படித் தீர்ப்பது என்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு விவசாயிகளின் போராட்டத்தை அடக்கிவிட யோசிப்பது நியாயமா?

ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவது
சரியான அணுகுமுறையா?
ஜனநாயக உரிமைப்படி, வன்முறையில் ஈடுபடாமல் போராட வருவோரைத் தடுக்க அச்சுறுத்துவதோடு, ஆயுதங்தாங்கிய காவல்துறையினரை ஏவுகணைகளாக் கினால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்திவிட முடியுமா?
எல்லையில் முள்வேலி, சாலைகளில் ஆணிகள், கற்களைப் போடுதல், டிராக்டர்களைத் தூக்குவதற்குப் பெரிய பெரிய கிரேன்கள் ஏற்பாடு, இவற்றால் விவசாயிகளின் போராட்டத்தை அடக்கிவிட பிரதமர் மோடி அரசு நினைப்பது சரியான அணுகுமுறையா?
விவசாயிகளுக்கு முன்பு பிரதமர் மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்தக் கோரும் அவர்களது நியாயமான போராட்டத்தை, 10 ஆயிரம் டிராக்டர்கள்மூலம் திரளுவோரை அழைத்துப் பேசாமல், கண்ணீர்ப் புகை, அடக்குமுறை, டீசல், பெட்ரோல் விநியோகத்தை சுற்று வட்டாரங்களில் குறைப்பது தகுந்த பதிலாகுமா? ஒன்றிய அரசு தீப்பொறியை அணைக் காமல், அதனைப் பெருந்தீயாக மாற்றும் வகையில், அடக்குமுறை, காவல்துறையினரை ஏவுதல் என்பது ஒருபோதும் பயனளிக்காது!
வெயில், மழை, கடுங்குளிர் போன்ற பல இயற்கை உற்பாதங்களை – இன்னல்களை லட்சியம் செய்யாமல் குடும்பம் குடும்பமாக ஓராண்டு முகாமிட்ட உறுதிக்கு முன்னால், தங்களது வெற்றி சாத்தியமில்லை என்று பிரதமர் மோடி உணர்ந்துதான், மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்று, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் – அதை மறக்கலாமா?

விவசாயிகளின் பிரச்சினை
தேர்தலில் எதிரொலிக்கும்!
விவசாயிகளின் பிரச்சினை வரும் தேர்தலில் பிரதிபலிப்பது உறுதி!
விவசாயிகளின் கண்ணீர் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை மறக்கலாமா? விவசாயிகளால்தான் விடியல் ஏற்படும்.
எனவே, தீர்வு தேவை!
பிரதமரின் உத்தரவாதம் – உத்தரத்தில் தொங்கலாமா?

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
14-2-2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *