தமிழ்நாடு மேனாள் ஆளுநர்
செல்வி எம்.பாத்திமா பீவிக்கு சட்டமன்றத்தில் இரங்கல்
சென்னை, பிப். 13- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (13.2.2024) தமிழ்நாடு மேனாள் ஆளுநர் செல்வி எம்.பாத்திமா பீவி மற்றும் பேரவை மேனாள் உறுப் பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024ஆம் ஆண்டிற்கான கூட்டத்தொடர் நேற்று (12.2.2024) காலை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.
இன்று (13.2.2024) காலை மீண்டும் 10 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் சட்டமன்றப் பேரவையின் மேனாள் உறுப் பினர்களான மறைவுற்ற ஆர்.வடிவேல், ஏ.தெய்வ நாயகம், எம்.தங்கவேல், துரை.இராமசாமி, கு.க.செல் வம், எஸ்.இராசசேகரன் ஆகயோர் மறைவுக்கு அவர் கள் குறித்த இரங்கல் குறிப்பை வாசித்து அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
அதேபோன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் எஸ்.வெங்கடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழ்நாடு மேனாள் ஆளுநர் செல்வி எம்.பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் மற்றும் ஒடிசா மாநில மேனாள் ஆளுநர் எம்.எம்.இராஜேந் திரன், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவர் மற்றும் மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசித்தும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தும், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
ஆளுநர் பேருரைக்கு
நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
இதையடுத்து பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் கீழ்க்கண்ட தீர்மானத்தை முன் மொழிந்தார்.
தமிழ்நாடு அரசால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட ஆளுநர் உரையில், 46 பக்கங்களில், முதல் பக்கத்தினை மட்டும் படித்தும் மற்றும் சில பகுதிகளை தானாகவே இணைத்தும் ஆளுநர் அவர்கள் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறது.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12ஆம் நாளன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் அவர்களின் பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர்களாவர் என முன்மொழிந்து பேசினார்.