சேலம்,பிப்.12- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க ஆட்சிமன்ற (சிண்டிகேட்) மற்றும் ஆட்சிப்பேரவை (செனட்) குழுக்கள் உள்ளன. இதில், சிண்டிகேட்டை பொறுத்தவரை, இணைவுபெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சார்பில், 2 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். சேலம் உள்பட 4 மாவட்ட கல்லூரிகளைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள், தேர்தல் மூலம் இந்த 2 பிரதிநிதிகளையும் தேர்வு செய்வார்கள். ஒரேநேரத்தில் இந்த இரு பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்தும்போது, வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அரசு, உதவிபெறும் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் சிண்டிகேட்டில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும்.
இதனிடையே, சமீபத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த பேராசிரியர் ஒருவர் பணியில் இருந்து விலகினார். இதனால், அந்த பொறுப்பு காலியாக உள்ளது. அதேசமயம், மற்றொரு சிண்டிகேட் பொறுப்பிற்கு இன்னும் 6 மாதம் மட்டுமே பதவிக்காலம் உள்ளது. இந்நிலையில், காலியாக உள்ள ஒரு சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பிற்கு மட்டும், நாளை (13.2.2024) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்குகள் அடிப்படையில் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்கான பிரதிநிதிதுவம் பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களை சிண்டிகேட் உறுப்பினர்களாக்கி கொள்வதற்காக, பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொள்ளும் திட்டமிட்ட பாரபட்சமான நடவடிக்கை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழுவின், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ், உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரியார் பல்கலைக்கழக செனட் கூட்டம் நாளை (13ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே ஆட்சிமன்ற, ஆசிரியர் தொகுதியில் ஏற்பட்ட காலி இடத்திற்கான தேர்தலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்ற குழுவின் காலம் முடியும் தருவாயில், உள்நோக்கத்தோடு ஆசிரியர் தொகுதியில் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்பவே நிர்வாகம் முயற்சிக்கிறது. இது இடைக்காலத்திற்கான தேர்தலாக நடத்தப்படாமல், முழுமையான காலத்திற்கு இப்படி தனித்தனியாக தேர்தல் நடத்தும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமான சூழலை உருவாக்கி, சுயஆதாயம் பெறும் மோசடி இதில் உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள், இத்தேர்தலில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதே நோக்கமாக உள்ளது.
சுயநிதி கல்லூரி தற்காலிக ஆசிரியர்களை கைபாவைகளாக ஆக்கிக்கொள்ளலாம் என்ற சதியே, இதன் பின்புலனாக இருக்கக்கூடும் எனும் சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது. அதேசமயம், பேரவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலிலும் கூட குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக, தற்போது கல்லூரிகளில் பணிபுரியாத ஆசிரியர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. மரபுகளை மாற்றி, தேர்தல் நடைபெறும் நாளிலேயே பொருள் நிரல்களுடன் கூடிய, பேரவைக் கூட்டத்தையும் கூட்டுவதன் மூலம், பேரவைக் கூட்டத்தையும், தேர்தலையும் நீர்த்துப்போக செய்யும் தந்திரம் உள்ளது. குறிப்பாக, இன்றைக்கு பல்கலைக்கழகமே வெட்கித் தலைகுனியும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், அனைத்தையும் இருட்டடிப்பு செய்ய, குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவான செயல்களைச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இச்சூழலில் இந்த அவசரத் தேர்தல், பல்கலைக்கழகத்திற்கு செலவையும், களங்கத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். எனவே, அரசு தலையிட்டு இத்தேர்தலை தடைசெய்து, உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.