தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை “எழுத்தாளர்-கலைஞர்” குழுவின் சார்பில் கவிதைப்போட்டி
சென்னை,அக்.8- தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் உறுப்பினர் செயலர் / சமூகநலத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.
அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் “எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000, இரண்டாவது பரிசு ரூ.30,000, மூன்றாவது பரிசு ரூ.20,000, சிறப்பு ஊக்கப் பரிசு 10 பேருக்கு தலா ரூ.2,500 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
இந்த கவிதைப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பண்முகத்தன்மையினை விளக்கும் வகையில், 1) தமிழுக்கு மறு பெயர் கலைஞர், 2) திராவிடச் சிந்தனைகளின் முரசொலி, 3) எட்டாத கல்வியை எல்லோர்க்கும் வழங்கிய எட்டாவது வள்ளல், 4) சொல்லைச் செயலாக்க பல துறைகள் கண்டவர், 5) வருங்கால வரலாற்றை அச்சுக் கோர்த்தவர் – போன்ற தலைப்புகளின் கீழ் 26 வரிகளுக்கு மிகாமல் கவிதைகளை 22.10.2023க்குள் ezhuthalarkalaignar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கவிதைகளை அனுப்பும் போது தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை தவறாது குறிப்பிட வேண்டும்.
– இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.