மேனாள் நீதிபதி கே. சந்துரு
(சென்னை உயர்நீதிமன்றம்)
பெங்களூரு ரமணியம்மாளின் பக்திப் பாடல்களைக் கேட்பதற்கு, 1960களில் பெருங்கூட்டமே சேரும். அவர் தன்னுடைய கம்பீரமான குரலில், “பால் மணக்குது பழம் மணக்குது…” என்று உச்ச ஸ்தாயியில் பாடலை ஆரம்பித்தால் கூட்டமே சாமி யாடும். “தேன் இருக்குது தினை இருக்குது… தென் பழநியிலே… தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்” என்று அவர் விடுக்கும் வேண்டுகோளில் எந்த இடத்திலும், ‘பழநிமலைக்கு
ஹிந்துக்களே வாருங்கள்…” என்று இருக்காது.
பழநி முருகன் கோயிலைப் பற்றிப் பல செய்திகள் உண்டு. பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியார் தேச விடுதலையின் ஒரு பகுதியாக, சமூக விடுதலைக்கும் செயல்பட முற்பட்டார். அதன் பகுதியாகத்தான், ‘அரிஜன சேவா சங்கம்’ 1932இல் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்தின் கொள்கையை விளக்குவதற்கும், அதற்கு நிதி திரட்டுவதற்கும் தமிழ்நாட்டில் ஒரு சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டார் காந்தியார். தென் தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது பயணத்தில் நீலமலைக்குச் சென்று திரும்பும் வழியில், பழநிமலை அடிவாரத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடானது. காந்தியாரின் அன்பர்கள் பழநி முருகனை தரிசிக்க அவரை அழைத்தனர். காந்தியார் எங்கு சென்றாலும் அங்கிருக்கும் கோயில்களுக்கு விஜயம் செய்யாமல் இருந்ததில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. ‘அந்தக் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களை அனு மதிப்பார்களா, இல்லையா…” என்று கேள்விக்கான பதிலைப் பொறுத்தே அவரது முடிவு இருக்கும்.
சாஸ்திரங்களின்படி கடல் தாண்டிப் பயணம் செய்தால் அவர் சார்ந்த ஜாதியிலிருந்து, மதத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழ்நிலை இருந்தது. அதை மீறித்தான் வெளிநாடுகளில் படிக்கச் சென்றார் காந்தியார். அது குறித்துத் தனது சுயசரிதையில் கூறும்போது, ‘அத்தகைய நியமங்கள் தன்னைக் கட்டுப்படுத்தாது’ என்று கூறிய அந்த காந்தியார்தான், முருகனை வழிபட தாழ்த்தப்பட்ட மக்களை அனும திக்காத காரணத்தால் அவர் பழநிமலை ஏறவில்லை. ஆனால், விரைவிலேயே பழநி முருகனை வழிபட இருந்த தடையை ரத்து செய்ய சட்டப் பாது காப்பு கொண்டு வரப்பட்டது. 12.11.1936இல் தாழ்த்தப் பட்ட மக்களின் கோயில் நுழைவுக்கு அனுமதியளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பழநி முருகன் கோயில் சந்திக்காத சட்டப் பிரச் சினைகளே இல்லை. நான் நீதிபதியாக இருக்கும்போது, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் ஒப்பந்ததாரர் சார்பில், பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் சிறுமலை வாழைப்பழத் துக்கு பதிலாக நேந்திரம் பழம் போடுவதற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. கோயில் விதிகளுக்கப் புறம்பாக அப்படியெல்லாம் நீதிமன்றம் அனுமதிக்க முடியாது என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அடிவார மலைப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தரை வாடகைகூடத் தராமல் இருந்த மையால் அவர்களை வெளியேற்று வதற்குக் கோயில் நிர்வாகம் முயன்றபோது, அதை எதிர்த்து போடப்பட்ட வழக்கும் என்னால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு சமீப காலங்களில் நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகளைப் பார்க்கும்போது, இவையெல்லாம் கோயிலைக் குறி வைத்துத் தாக்கும் செயல்களாகவே தெரிகின்றன.
கோயிலில் தூய்மைப் பணிக்காக ஒப்பந்தப் புள்ளியை செயல் அலுவலர் கோரியபோது, அதற்குத் தடை விதித்து தூய்மைப் பணிக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டது – நல்வாய்ப்பாக மேல் முறை யீட்டில் அந்த உத்தரவு தடை செய்யப்பட்டது. பின்னர் மற்றொரு நீதிபதி கோயில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்க உத்தரவிட்டபோது, இரு நீதிபதிகள் அமர்வு அதை ரத்து செய்து, ‘கோயில் நியமங்கள், அனுஷ்டானங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று உத்தரவிட்டார்கள். இப்போது திடீ ரென்று நீதிமன்றம் புதிய தடையை உருவாக்கி யிருக்கிறது.
“ஹிந்துக்கள் அல்லாதவர்கள் பழநி முருகன் கோயிலில் நுழைய முடியாது” என்கின்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிப்பது சரியா என்பது முதல் கேள்வி. ஒவ்வொரு திருக்கோயிலின் நியமங்களை முடிவு செய்வது கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்டது. அனைத்துக் கோயில்களுக்கும் பொதுவாக ஓர் உத்தரவைப் பிறப்பிக்கும்போது அதனால் குழப்பங்கள் எதுவும் ஏற்படக் கூடாது.
அடுத்ததாக, ‘
ஹிந்துக்கள் மட்டுமே’ என்று நீதிபதி கூறும்போது, ‘ஹிந்து’ என்பவர் யார் என்றும், அதற்கான வரையறை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆகம விதிகளின்படி ஏற்படுத்தப்பட கோயில்களில், ஸ்மார்த்த பிராமணர்களைக் கொடிமரம் தாண்டி உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில், அவர்கள் ‘அத்வைத’ சித்தாந்தத்தை நம்புபவர்கள். உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், ‘ஹிந்து’ என்ற வரையறையே நமது பழைய ஆவணங்களில் இல்லை. சொத்து குறித்து ஆவணங்களைப் பதிவு செய்பவர்கள் தங்களை, ‘சைவர்கள்’ என்றும், ‘வைணவர்கள்’ என்றுமே பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தனர். அதன் பின்னர் ஹிந்துக்களால் நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஏற்பட்டபோது, அதில் நான்கு வர்ணத்தினரை (சவர்ணா) மட்டுமே அனுமதித்தனர். பச்சையப்பன் அறக்கட்டளை ஏற்படுத்திய கல்லூரியில் ஒரு தாழ்த்தப் பட்ட மாணவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அவர்கள் நால்வர்ணத்தில் வராத பிரிவினர் (அவர்ணா) என்று கூறியதை எதிர்த்து சென்னை சிவில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘தாழ்த்தப் பட்டவர்களும் ஹிந்துக்களே’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே அந்த மாணவனுக்கு அனுமதி வழங்கினர். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோயிலுக்குள் அனு மதிக்காத நிலைமை இருந்ததையொட்டி பல கலவரங்களும் வழக்குகளும் ஏற்பட்டன.
‘ஹிந்து மதம்’ என்பது ஒரு நிறுவனப்பட்ட மதமல்ல. ஆலமரம் பல்வேறு கிளைகள் விழுது களுடன் காணப்படுவதுபோல் பலதரப்பட்ட சமய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாடுகள் கொண்ட பல தரப்பினரையும் சேர்த்துக் குறிப்பிடுவது தான் இன்றைய ஹிந்து மதம் – அப்படிப்பட்ட மதத்தில் இருப்பதற்கான தகுதியையோ (அ) வரையறையையோ எந்தச் சட்டமும் கூறவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஹிந்து என்ற சொல்லுக்கு எந்தவிதமான வியாக்கியானமும் இல்லை. மதம் சார்ந்த அடிப்படை உரிமை வழங்கும் பிரிவு 25-இல் சுதந்திரமான நம்பிக்கையும், தங்களது நம்பிக்கையை நடைமுறைப்படுத்தவும், அதைப் பிரச்சாரம் செய்யவும் அனைவருக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது திடீரென்று நீதிபதிகள் ஹிந்து அறநிலைய சட்டத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட உத்தரவைப் பிறப் பிக்கலாமா? ஹிந்து அறநிலைய சட்டத்தில் எங்கும் இப்படிப்பட்ட தடை விதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் அந்தச் சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட விதிகளில் ‘கோயில் நிர்வாகங்கள் தங்களது கோயிலுக்குள் வருபவர்களைப் பற்றி கட்டுப்பாடுகளை விதிக்கலாம்’ என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடு என்று சொல்லும்போது அதில் ஹிந் துக்களை மட்டும்தான் அனுமதிக்க வேண்டுமென்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில், தாய் சட்டத் தின்கீழ் வரையப்படும் விதிகள் அந்தச் சட்டத்துக்கு எதிரானதாக, அப்பாற்பட்டதாகச் செல்ல முடியாது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான, என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய தகவலில், ‘நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின்படி அதன் தத்துவங்களையும் கொள்கைகளையும் கடைப்பிடிப்பதற்கு பதிலாக மத அடிப்படையிலான நீதிமன்றங்கள் போல் செயல்படுவது வேதனை யளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
அரசமைப்புச் சட்டத்தைக்கூடப் படிக்க வேண்டாம்.. சிறீமதிகள் ரமணியம்மாளின் பக்திப் பாடல்களைக் கேட்டாலே ஒரு விடயம் புரியும். அவர், அனைத்து அன்பர்களையும் பழநிமலைக்கு வரும்படிதான் கேட்டுப் பாடியிருக்கிறாரே தவிர, அதில் சமயச் சாயம் எதுவும் பூசவில்லை. எனவேதான் சிறீமதிகள் ரமணியம்மாளைக் கேட்க வேண்டும்!
நன்றி: ஜூனியர் விகடன் 14.2.2024