* தமிழ்நாடு ஆளுநர் இரண்டாவது முறை அரசியல் சட்டமீறலில் ஈடுபட்டுள்ளார்!
* ‘தேசிய கீதம்’ என்பது நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்படக் கூடியது!
* ‘தேசிய கீதம்’ பாடும்வரை ஆளுநர் அவையில் இல்லாதது ஏன்?
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி சட்ட மீறல், ஜனநாயக மரபு மீறலைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார். இன்றும் அதே அத்துமீறலை செய்துள்ளார்; இவரை பதவி நீக்கம் செய்வதே ஒரே தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம்தான்; தனியே அவரது சிந்தனையோ, செயலாக்கமோ – கொள்கைப்பூர்வமான அதன் முடிவுகளில் வேறு விதமாகவோ இருக்க முடியாது – இருக்கக் கூடாது என்பதை இந்திய அர சமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
இரண்டு வகையில் மரபுகளை மீறிய
தமிழ்நாடு ஆளுநர்
இவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்கும்முன் பிரமாணம் எடுத்துள்ள நிலையில், அவர் இரண்டு வகையில் மரபுகளையும், சட்டங்களையும் மீறி அதீதமாக இன்று சட்டப் பேரவையில் நடந்துகொண்டிருக்கின்றார். இன்று (12-2-2024) 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து, இரண்டாவது முறையாக மரபு மீறி, அரசியல் அநாகரி கத்தை அரங்கேற்றியுள்ளார். சட்டமன்றத்தையும் அவமதித்து, அரசமைப்புச் சட்ட நெறிகளையும் மீறியுள்ளார். அவையிலிருந்து வெளியேறியது அவமதிப்பதாகும். இவ்விரண்டு குற்றங்களையும் இழைத்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
அப்பதவி வகிக்க, சற்றும் தகுதியவற்றவராக தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார்.
அவர் ஒரு சில மணித்துளிகளே உரையைப் படித்துவிட்டு, உட்கார்ந்துவிட்டதோடு, அவர் படிக்கவேண்டிய எஞ்சிய பகுதி களை வேண்டுமென்றே திட்டமிட்டுப் புறக்கணித்திருக்கிறார். தனது சொந்தக் கருத்துகளைக் கூற எந்த உரிமையும் அவருக்குக் கிடையாது.
‘தேசிய கீதம்’ என்பது இறுதியில் பாடப்பட வேண்டியதே!
‘தேசிய கீதம்’ என்பது நிகழ்வின் இறுதியில்தான் பாடப்படும். நிகழ்ச்சித் தொடக்கத்தில் மொழி வாழ்த்து இசைப்பது வழமை.
பிறகு ஏன் அவர் உரையைத் தொடர்ந்து படிக்கவில்லை?
அரசின் சாதனைகள் – கொள்கைப் பிரகடனங்களை உரை யாகச் சொல்வதுதான் சட்டப்படி, மரபுப்படி அவரது கடமையும், பொறுப்பும் ஆகும்!
அதில் அவர் மாறுபடுவாரேயானால், முன்கூட்டியே அவர் அந்த உரையை – அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்த வரைவினை அவர் ஏற்க மறுத்து, திருத்தும்படி சம்பந்தப்பட்ட வர்களுக்கு எழுதியிருக்கவேண்டும்; அல்லது பேசியிருக்க வேண்டும்.
அப்படி மறுக்க அவருக்கு உரிமையே இல்லை – அரசமைப்புச் சட்டப்படி; காரணம், எந்த மாநிலத்திலும் ஆளுநர் உரை என்பது அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதல்ல.
‘தேசிய கீதம்’ பாடுவது இறுதியில்தான் என்பது சட்டமன்ற மரபு. அதனை சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்!
ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்!
ஆளுநர் வெளிநடப்புச் செய்தும், தேசிய கீதத்தை இசைக்கும் முன்பே வெளிநடப்புச் செய்ததும், கூடுதலாக அவர் படிக்க வேண்டிய உரையை, அவரே மறுத்துப் பேச சபையில் அவருக்கு அரசமைப்புச் சட்டத்தின்படியோ, சபை மரப்புப்படியோ உரிமையே இல்லாத நிலையில், அவையை விட்டு வெளியேறியது – திட்டமிட்ட ஜனநாயக மரபை மீறிய குற்றச்செயல். இவரை உடனடியாக பதவி நீக்கம் (‘டிஸ்மிஸ்’) செய்ய முன்வந்தால்தான் ஒன்றிய அரசு ஜனநாயகத்தை உண்மையிலேயே மதிப்பதாகும்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பு மேலும் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்.
தனக்குத் தனி விளம்பரம் தேடிடவே, இந்த உரை வாசிப்பினையும் பயன்படுத்தியுள்ளார் இந்த ஆளுநர் என்பதும் அகிலம் அறியும் செய்தியாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12-2-2024