இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிடுக – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் – (22.11.2019)
இடஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017 -2018ஆம் ஆண்டுகளில் ஒன்றிய அரசின் பொதுத்தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 2689 மருத்துவ இடங்கள் கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால், ஒன்றிய அரசு வெறும் 260 இடங்களையே ஒதுக்கியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2018-2019ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3400 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் 299 சீட்டுகள் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியதாகவும், கடந்த இரு ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 5530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-2018, 2018-2019-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன? என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.