புற்றுநோய் ஒரு கொடிய நோய். ஆரம்பத்திலேயே அதைக் கண்டுபிடித்தால் மட்டுமே நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். அதிலும் குறிப்பாக, குடல் புற்றுநோயைக் கண்டறிய தற்போதுள்ள முறைகள் அதிக செலவு எடுப்பவை, எளிமையானவையும் அல்ல. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இந்தப் புற்று நோயைச் சுலபமாகக் கண்டறிய அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை விஞ்ஞானிகள் பாக்டீரியாவைப் பயன்படுத்தும் புது முறையைக் கண்டறிந்துள்ளனர்.
ஈ கோலை நிசில் (E. coli Nissle) என்ற இந்த பாக்டீரியா மனித உடலுக்கு நன்மை செய்கிறது. இதை ஏற்கெனவே குடல் நோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இது மிக இயல்பாகவே புற்றுநோய் கட்டிகளை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இதற்கு இருக்கும் இந்தத் தனித்துவமான பண்பை விஞ்ஞானிகள் புற்றுநோயைக் கண்டறிய பயன்படுத்தி உள்ளனர். இந்த பாக்டீரியா, கட்டிகளை அடைந்ததும் சாலிசிலேட் (Salicylate) எனும் ஒரு மூலக்கூறை உற்பத்தி செய்யும்படியாக விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்தனர். பின்பு அவற்றை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், எலிகளுக்கு வாய் வழியாகக் கொடுத்தனர்.
உடலுக்குள் சென்ற பாக்டீரியா, கட்டிகளைச் சரியாகச் சென்று சேர்ந்தன. சேர்ந்த உடன் எதிர்பார்த்தபடி மூலக்கூறை உருவாக்கின. இந்த மூலக்கூறு ரத்தத்தில் கலந்தது. இது ரத்தப் பரிசோதனையில் தெரிந்தது. ஆரோக்கியமான எலிகள், மனிதர்களுக்கு தரப்பட்ட பாக்டீரியா இப்படியான மூலக்கூறை உற்பத்தி செய்யவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த எளிமையான, அதிகம் செலவாகாத முறை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.