பிற மதத்தினர் தாமாக முன்வந்து இந்துவாக மாறினால் திருமலையில் மதம் மாற்றி ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்படும் என ஸநாதன தர்ம பிரச்சார மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் ஸநாதன தர்ம பிரச்சார 3 நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 62 மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்து மதத்தை நம்பும் பிற மதத்தினருக்காக திருமலையில் சிறப்பு மய்யம் ஏற்பாடு செய்யப்படும். இங்கு பிற மதத்தினர் தாமாக முன்வந்து இந்துவாக மாறினால், திருமலையில் புனித நீராட வைத்து அவர்களை மதம் மாற்றி, ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்படும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில், இந்து மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக, புராணங்களை தெரியப்படுத்தவும், பரவுவதற்கு திறமையான புராண சொற் பொழிவாளர்களாக பயிற்றுவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில ஜாதிகள்மீது சிலரின் பாரபட்சமான அணுகுமுறையே இந்து சமுதாயம் எப்போதும் பலவீனமாக இருப்பதற்குக் காரணம். அதனால், ஜாதிகள் இந்து சமுதாயத்திலிருந்து விலகிச் செல்கின்றன. அனைவரையும் உள்ளடக்கி ஸநாதன தர்மம் அனைவருக்கும் சொந்தமானது என்று கூற முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் மதமாற்றத்தைத் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மாநாடு முடிவு செய்தது.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்து மதம் எந்த அளவுக்குப் பலகீனமாகி இருக்கிறது என்பதற்கு இந்த நடவடிக்கைகளே போதுமான சாட்சியமாகும்.
ஜாதிகள்மீது சிலரின் பாரபட்சமான அணுகுமுறையே இந்து சமுதாயம் எப்போதும் பலகீனமாக இருப்பதற்குக் காரணம் என்பதை அவர்களே அறியாமல் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஜாதி என்பதே பாரபட்சம் காட்டுவது தானே – அதுவும் பிறப்பின் அடிப்படையில்!
இந்த நிலையில் ஜாதி ஏதோ அந்தரங்கத்தில் தொங்குவது போலவும் – ஜாதிக்கும் இந்து மதத்திற்கும் – இதன் விளைவான பாரபட்சத்திற்கும் சம்பந்தமே கிடையாது என்பதுபோல பம்மாத்து செய்வது யாரை ஏமாற்றிட?
கொஞ்சமாவது யோக்கியப் பொறுப்பும், அறிவு நாணயமும் இருந்தால் ‘இன்று முதல் இந்து மதத்திலிருந்து ஜாதி விலக்கப் படுகிறது’ என்று திருமலையில் மூன்று நாள் நடைபெற்ற மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதுதானே –
அவ்வாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்தவர்கள் யார்?
‘கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்பானாம்’ என்ற மொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
ஜாதி ஒழிப்பு பிறகு இருக்கட்டும் – குறைந்தபட்சம் தீண்டாமையை இந்த மாநாடு நிராகரிக்கிறது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கலாமே!
‘தீண்டாமை க்ஷேமகரமானது’ என்று சொன்னவர்தானே மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
பாலக்கோட்டில் முகாமிட்டிருந்த அந்த சங்கராச்சாரியாரை தீண்டாமை ஒழிப்புக்கு ஆதரவு கேட்டு காந்தியார் சென்றபோது, மாட்டுக் கொட்டகையில் காந்தியாரை உட்கார வைத்து, முகத்தில் அடித்ததுபோல, ‘தீண்டாமையில் நம்பிக்கை வைத் துள்ள ஆன்மிகவாதிகளின் மனதை நோக அடிக்க எனக்கு விருப்பமில்லை’ என்று காந்தியாரிடமே சொன்னவர்தானே அந்த சங்கராச்சாரியார்.
‘உலகத்திலே உயர்ந்த வகை நவீனமான வாசனை மிக்க சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும்(With the Best Available Soap and Any Clothing and Decoration) , அணி மணிகளை ஆடைகளை அணிவித்தாலும், பிறப்பின் அடிப்படையில் பரம்பரைப் பரம்பரையாகப் பஞ்சமர்களைப் பீடித்த அந்தப் புனிதமற்ற தன்மையைப் போக்கவே முடியாது – முடியவே முடியாது’ என்று சொன்னவர்தானே சிருங்கேரி சங்கராச்சாரியார் (The Hindu Ideal Page 230). அவர் அப்படிக் கூறியதைக் கிழித்துக் குப்பைக் கூடையில் வீசி எறியத் தயாரா?
பாழாய்ப் போன இந்து மதத்தின் – வர்ணாசிரம சீழ் பிடித்த இந்து மதத்தின் கொடுமையைத் தாங்காமல் தானே, ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு மதத்திற்குச் சென்றனர். இப்பொழுது எந்த முகத்தை வைத்துக் கொண்டு, இந்து மதத்திற்கு வாய் வலிக்க வலிக்கக் கூவி அழைக்கிறார்கள்?
அப்படியே இன்னொரு மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்தாலும், அவர்களை எந்த ஜாதிப் பட்டியலில் அடைப்பார்கள்? மாநாட்டில் சொல்லியிருக்க வேண்டாமா?
குடியரசுத் தலைவராக இருந்த – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைவரான – முப்படைகளின் தலைவரான – இந்தியாவின் முதல் குடிமகனான – ராம்நாத் கோவிந்த் அவர்களைப் பூரி ஜெகந்நாதர் கோயிலிலும், அஜ்மீர் பிர்மா கோயிலிலும் உள்ளே போய் சாமி கும்பிடவிடாமல் தடுத்தது சென்ற நூற்றாண்டிலா? நம் கண்ணுக்கு நேராக நடந்த இந்தக் கொடுமைமீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டதுண்டா?
இப்பொழுது குடியரசுத் தலைவராக இருக்கக் கூடிய திரவுபதி முர்மு அவர்களின் நிலைதான் என்ன?
“பாருங்கள், பாருங்கள் ஒரு பழங்குடியினப் பெண்ணைக் குடியரசுத் தலைவராக ஆக்கியிருக் கிறோம்!” என்று ஊரை ஏமாற்றிட, பழங்குடி மக்களின் வாக்குகளை வாரிக் குவிக்க நடத்திடும் நயவஞ்சக நாடகம் தானே இது!
அந்த அம்மையார் எப்படி நடத்தப்படுகிறார்? நாடாளுமன்ற புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கோ, திறப்பு விழாவுக்கோ குறைந்தபட்சம் ஓர் அழைப்பிதழ் கூடக் கொடுக்காமல் அவமதித்த கொடுமையை என்னவென்று சொல்ல!
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் – அது மட்டுமல்ல, கணவரை இழந்தவர் என்ற ஸநாதனக் கண்ணோட் டத்தில்தானே அவர்கள் பார்வையில் மங்கலகரமான நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது என்பதுதானே இதற்குள் அடங்கி இருக்கும் அவாளுக்கே உரிய நயவஞ்சக மர்ம முடிச்சு!
ஸநாதனமா மாநாடாம் – அதன் பொருள் என்ன? நாம் சொல்ல வேண்டாம் – இந்து மதத்தில் முக்கிய சங்கராச்சாரியாரான காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ‘தெய்வத்தின் குரல்’ – முதல் பகுதி பக்கம் 282 அய்க் கொஞ்சம் திறந்து பார்க்கட்டும்!
கட்டுரையின் தலைப்பு “ஸநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி” என்பதாகும். அந்தக் கட்டுரையில் ஸநாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது என்று பச்சையாகக் குறிப்பிட்டுள்ளாரே!
ஸநாதன தர்மம் என்றால் வர்ணதர்மம் தான் என்று கூறிய பிறகு – வேறு வெண்டைக்காய் விளக்கெண் ணெய் விளக்கங்கள் எடுபடுமா?
பார்ப்பனர்களே, பார்ப்பனர்களே, இது பெரியார் யுகம். உங்கள் பருப்பு எல்லாம் இங்கு இனி வேகாது! வேகாது!!