இன்றைய (10.10.2023) ‘தினமலர்’ ஏட்டில் “இது உங்கள் இடம்” என்ற இடத்தில் ஒரு கடிதம் வெளி வந்துள்ளது.
ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது “சமூகநீதி காத்த வீராங்கனை!” என்று பட்டம் கொடுத்தார் வீரமணி. இப்பொழுது தஞ்சையில் “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார் என்று கேலி செய்கிறது ‘தினமலர்’.
பொதுவாக ‘இது உங்கள் இடம்’ என்ற பகுதியில் தினமலரே வலது, இடது கையாலும் கிறுக்குவதுதான்.
தினமலர் குழுமம் நடத்தும் தினமலர், காலைக் கதிரில் ஒரே கடிதம் பெயர் மாற்றி வெளியிடப் பட்டதை அப்படியே அப்பட்டமாக எடுத்துப் போட்டு ‘உள்ளி மூக்கை’ ‘விடுதலை’ உடைத்தது உண்டே!
தினமலருக்கும் சரி, அதன் வகையறாக் களுக்கும் சரி ஒன்றைத் தெளிவாக்குகிறோம். சமூகநீதி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது – எந்த ஆட்சி இவ்வகையில் ஆதரவு காட்டினாலும் – ஆணைகள், சட்டங்களை இயற்றினாலும் அதனை திராவிடர் கழகம் வரவேற்பது என்பது – அந்தத் தத்துவத்தின்மீது திராவிடர் கழகத்திற்கே உரித்தான அக்கறையே!
எம்.ஜி.ஆர். அவர்கள் ஆளும் கட்சியாக 13 ஆண்டுகள் இருந்தபோது அந்தக் கால கட்டம் முழுவதும் அதிமுகவை எதிர்த்து நின்றது திராவிடர் கழகமே!
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த – பிற்படுத்தப் பட்டவர்களைப் பாதிக்கச் செய்யும் வருமான வரம்பு ஆணையைக் கடுமையாக எதிர்த்தது – அந்த ஆணையையே எரித்து கோட்டைக்குச் சாம்பலை அனுப்பியது திராவிடர் கழகமே!
வருமான வரம்பு ஆணையைப் பிறப்பித்த எம்.ஜி.ஆர். தலைமையிலான கட்சி 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 37 இடங்களில் தோல்வியைத் தழுவியதே!
இந்த நிலைக்குக் காரணம் தாம் கொண்டு வந்த வருமான வரம்பு ஆணைதான் – நாடெங் கும் தங்கள் ஆட்சிக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம் தான் – ஒரு கட்சிதான் – ஒரு தலைவர் தான் என்று செய்தியாளர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தவர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். என்ற வரலாறு ‘தினமலர்’க் கும்பலுக்குத் தெரியுமா?
அதனைத் தொடர்ந்து அதுவரை பிற்படுத் தப்பட்டவர்களுக்கு இருந்து வந்த 31 விழுக் காட்டை 50 விழுக்காடாக முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். உயர்த்தியதையும், அதற்காக நாடெங்கும் நன்றி அறிவிப்புக் கூட்டங்களை நடத்தியதும் திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்தான் என்பது ‘தினமலர்’ வகையறாக்களுக்குத் தெரியுமா?
தெரிந்திருந்தும் ‘அழிபழி’ சுமத்தி எழுதுவது அவர்களின் பாரம்பரியப் புத்தி என்பதுதான் கல் மேல் பொறிக்கப்பட்ட அழியா எழுதுக்களாகும்!