25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். அதற்கு `ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன்’ (SCAD) என்று பெயர்.
கரோனரி ஆர்ட்டரி எனப்படும் ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது. இதயத்தில் இன்டர்னெல் லேயர், மிடில் லேயர், எக்ஸ்டெர்னல் லேயர் என மூன்றுவிதமான லேயர்கள் இருக்கும். ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பிரச்சினையில் இன்டர்னெல் லேயர் கிழியும். அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இதற்கான ரிஸ்க் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். உடலின் இணைப்புத் திசுக்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி நிகழலாம். இணைப்புத்திசுக்கள் பலவீனமாக இருப்பது என்பது ரத்தக்குழாய்களில் மரபணு தொடர்பாக ஏற்படுகிற ஒரு பிரச்சினை.