சென்னை,பிப்.6- தமிழ் நாட்டில் உள்ள நடு நிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமைக்கப் படும். பின்னர் அதனை சென்னையில் உள்ள உயர் தொழில்நுட்ப ஸ்டூடியோ வுடன் இணைத்து, மாணவர் களுக்கு பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில், கல்வித் தொலைக்காட்சிக்கான உயர் தொழில் நுட்ப படப்பதிவுக் கூடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (5.2.2024) திறந்து வைத்தார். அங்குள்ள ஸ்டூடியோவில் கேமரா ஒன்றையும், ஜிம்மிஜிப் என்னும் தொழில்நுட்பக் கருவியையும் இயக்கி வைத்தார். பிரிவியூ தியேட்டரில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பதை படம் பிடித்து காட்டியதையும் பார்வையிட்டார். உயர் தொழில்நுட்பங்களை பொறுத்தவரை இணைய படப்பதிவுக்கூடம்(virtual studio), உயர் தொழில் நுட்ப சோதனைக்கூடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் பாடம் நடத்துவதில் தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் தவிர்க்கப்படும். இந்த தொழில் நுட்பத்தை ஒவ்வொரு வகுப்பறைக்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 6,218 பள்ளிகளில் ஹைடெக் லேப்களை வலுப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக நடுநிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வ கங்கள் அமைக்கப்படும். அதனை இங்கிருக்கும் உயர் தொழில்நுட்ப ஸ்டூடியோக்களுடன் இணைத்து பாடங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கிரியேட்டிவிட்டிகளை காட்டப்போகிறோம் என்றார்.