“இவர்களா பெரியார்கள்? என்று பலரைப் பார்த்து, திரு ஈ.வெ.ரா. கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது . . . ஜாதி, மத வித்தியாசங் களின் அடித் தளத்தையே ஆட்டி வைத்து சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அடித்து நொறுக்கும் பணியில் ஈடுபட்டதற்காக இவரைப் பாராட்டத் தான் வேண்டும். . . அர்த்தமற்ற இந்த ஜாதி, மத பேதங்கள் என்ற வறட்சி நிலையில் அகப்பட்டுத் துவண்டு கொண் டிருந்த தமிழ் நாடு என்ற பயிர் மீது ஈ.வெ.ரா. என்ற பருவ மழை கொட்டியது . . . தன் மனத்திற்கு அவ்வப்போது சரி யென்று படுவதை எந்த மேடையிலும் துணிவாகப் பேசிவிடும் இவர் நேர்மை, பொது வாழ்வில் சஞ்சரிக்கும் மற்றவர்களிடம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
1-.6.-1970 ‘துக்ளக்’கில் பெரியார் பற்றி எழுதியிருந்த கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைத்தான் மேலே கொடுத்திருக்கிறோம்…
அந்தக் கட்டுரையிலும் சரி, மற்ற பல சந்தர்ப்பங்களிலும் சரி, பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடைய சில செயல் களை நாம் விமர்சனம் செய்திருக் கின்றோம்.
அர்த்தமற்றவையாகவும், பல சமயங்களில் அவருடைய பேச்சுக்கள் வேதனையளிப்பதாகவுமே இருந்தன என்பதே நம் அபிப்பிராயமாக இருந்தது.
அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப் போக முடிய வில்லை என்றாலும் ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித் துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை என்று அலையும் அரசியல் வாதிகளே எங்கும் பரந்து கிடக்கும் சூழ்நிலையில் திரு.ஈ.வெ.ரா. மட்டும் தன் கொள்கைகளில் கடைசி வரையில் அசையாது பிடிப்புக் கொண்டிருந்தார்.
ஊருக்குத் தகுந்தாற்போல், மேடைக் குத் தகுந்தாற் போல், வந்திருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற் போல் தங்கள் பேச்சுக்களைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் பேச்சாளர்கள் நிறைந்த நம் நாட்டில், எங்கு பேசினாலும் சரி, எவர் வந்தாலும் சரி, தனது கருத்தை மண்டையிலடித் தாற் போல் கூறும் துணிவு கொண்டி ருந்தவர் திரு. ஈ.வெ.ரா.
இந்த நாட்டில் பெருவாரியான மக்கள் ஒன்று தனக்கென எந்தவித அபிப்பிராயமும் இல்லாதவர்கள்; இரண்டு அப்படியிருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சுபவர்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் அவர்.
ஒரு தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் இவர் மற்றவர்களுக்குக் காட்டிய மரியாதையைக் கேள்விப் பட்டால் வியப்பு மேலிடுகிறது! வயது, அந்தஸ்து, பிறப்பு இந்த மாதிரி அடிப்படைகளிலெல்லாம் சற்றும் வித்தியாசம் பாராமல், எந்த மனிதனையும் மனிதன் என்று உணர்ந்து மதிப்பதிலும், மரியாதை அளிப்பதிலும் இவருக்கு நிகராக யாருமே இல்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம். அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் யாரிடமும்
திரு.ஈ.வெ.ராவுக்கு வெறுப்பு உணர்ச்சி இருந்தது இல்லை.
15.-1.-73 ‘துக்ளக்’ இதழிலிருந்து ஒரு பகுதி…இராஜாஜி யுடன் இவருக்கு இருந்த அபிப்பிராய பேதங்கள் ஆயிரமாயிரம். அவரைப் பற்றி இவர் தாக்கிப் பேசிய மேடைகள் கணக்கில் அடங்காது. அவர் ஆஸ்திகர். இவர் நாஸ்திகர். இப்படி அவருக்கும் இவருக்கும் மிகுந்த மனவேறு பாடுகள்தான் எத்தனை? ஆனால் இராஜாஜி இறந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரியர் ஈ.வெ.ரா. துடித்த துடிப்பை யும், உடல் நலக் குறைவு இருந்தும் இடுகாட்டிலும் வந்து அமர்ந்து இராஜாஜியின் அந்திமக் கிரியைகள் முடியும் வரை அங்கேயே இருந்து, தாங்க முடியாத துயரத்தை இவர் குழந்தை போல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந் ததையும் நேரில் கண்டவர்கள் கூறும் போது மெய் சிலிர்க்கிறது. நட்பிற்கு உதாரணம் வகுத்த இவருக்கு, இந்த சமயத்தில் மரியாதை செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம்.’’
இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நாட்டில் குறைந்து கொண்டே வருகிறார்கள். போலியாகவும், மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தனது மனச்சாட்சியை அமுக்கிக் கொண்டும் வாழ்பவர்களுமே நிறைந்து காணும் இக் காலத்தில், உண்மையாக வாழ்ந்த ஒரு சிலரில் திரு.ஈ.வெ.ராவும் ஒருவர். அவருடைய கொள்கைகள் சிலவற்றிலும் அவருடைய செயல்கள் பலவற்றிலும் நாம் பல முறை குற்றங்கண்டிருக்கிறோம். அவற்றை யெல்லாம் மீண்டும் சுட்டிக் காட்ட இது நேரமில்லை. ஆனால், அவருடைய எண்ணங்களின் நேர்மையில் நாம் குற்றம் கண்டதும் கிடையாது; காண வும் முடியாது.
சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத சில காரியங்களை அவர் செய்திருக் கிறார் என்று கூறும்போது, சமூகத்திற்கு நன்மையையும் செய்திருக்கிறார் என்று ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.
ஜாதி துவேஷங்கள் வெகுவாகக் குறைந்த பிறகும் அதைப் பற்றி விடாமல் பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட, 95 வயதாகியும் கடைசிவரை புத்தி தீட்சண்யத்துடன் அவர் வாழ்ந்தது இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு.
‘மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்’ என்று கூறி மக்கள் மனத் திருப்தி பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. ‘தெய்வங்களிடம் கூட நம்பிக்கை வைக்கக்கூடாது’ என்று பிரச்சாரம் செய்து வந்தவர் திரு. ஈ.வெ.ரா. தெய்வ நம்பிக்கை கூடாது என்று அவர் கூறியதை நம்மால் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் தெய்வங்களின் அளவிற்கு, அருகதை யற்ற மனிதர்களை உயர்த்தி, அந்த மனிதர்களிடம் மூட நம்பிக்கை வைத்து விடுவது என்ற நம் நாட்டு மக்களின் மடமை என்றாவது நீங்கினால் அன்றுதான் பெரியாரின் வாழ்க்கை இலட்சியம் ஓரளவாவது ஈடேறியிருக்கிறது என்று அர்த்தமாகும். அது என்றாவது ஒரு நாள் நடக்கத் தான் போகிறது என்ற நம்பிக்கையுடன், மறைந்த திரு.ஈ.வெ. ரா.வின் துணிவிற்கும் நேர்மைக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.’’
-‘துக்ளக்’ 1.1.1974