மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான அணியை வீழ்த்துவதே ஒரே தீர்வு!

viduthalai
7 Min Read

சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கண்டனம்
‘ஜனநாயகப் படுகொலை’ – வெற்றி பெற்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குதல் போன்ற ஒழுங்கீனங்களை ஒழித்துக்கட்ட –
நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான அணியை வீழ்த்துவதே ஒரே தீர்வு!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் வகையில் சட்டங்களையும், மரபுகளையும் மீறி ஆட்சி நடத்தும் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணியை வரும் தேர்தலில் வீழ்த்துவதே – ஜனநாயகத்தைக் காப் பாற்றும் ஒரே வழி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

இன்று (6-2-2024) ஊடகங்களில், நாளேடுகளில் நேற்று (5.2.2024) உச்சநீதிமன்றத்தின் அமர்வில் தலைமை நீதிபதி மாண்பமை டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் மிகவும் கொதித்துப் போய், ஜனநாயகம் சண்டிகர் மேயர் தேர்தலில் சந்தி சிரிக்கிறது – மேயர் தேர்தலில் கேலிக் கூத்தாகி உள்ளது (Mockery of Democracy) என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை – உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம்!

“சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகப் படுகொலை” என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. தேர் தலை நடத்திய விதம் ஜனநாயகத்தைக் கேலிக் கூத் தாக்கும் செயல் என்றும், தேர்தல் நடத்திய அதிகாரி, மிகவும் வெளிப்படையாகவே தில்லுமுல்லுகளை அரங் கேற்றியிருப்பது தெரிகிறது என்றும் கூறியுள்ள உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சண்டிகர் மாநகராட்சிக் கூட்டத்தை கூட்டத் தடை விதித்தும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

35 கவுன்சிலர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சி யில், பாஜகவிற்கு 14 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர் களும், சிரோமணி அகாலிதளத்துக்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர். இவர்கள் தவிர, பாஜக எம்பி-யான கிரோன் கெருவும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் ஜனவரி 18 அன்று நடைபெறுவதாக இருந்தது. இதில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட முடிவு செய்ததால், இந்த கூட்டணி 20 உறுப்பினர்களின் ஆதர வுடன் மேயர் பதவியை ஒட்டுமொத்தமாக கைப்பற்றும் சூழல் உருவானது. ஆனால், வாக்குப்பதிவின் போது, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலர்களை மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காமல் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மாஷி, காவல்துறையினர்மூலம் தடையை ஏற்படுத்தினார்.

இதற்கு எதிராக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் நீதிமன்றம் சென்றன. வழக்கை விசாரித்த பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றம் ஜனவரி 30 அன்று முறையாக வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, மேயர் தேர்தலை நடத்திய அதிகாரி அனில் மாஷி என்பவர், காங்கிரஸ் – ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 20 பேரில், 8 பேரின் வாக்குகளை செல்லாது என அறிவித்து, 16 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் மேயராக வெற்றி பெற்றதாகவும், 12 வாக்குகளுடன் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்ததாகவும் ஒருதலைப்பட்சமாக அறிவித்தார்.
அத்துடன், மூத்த துணைமேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக் கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச் சீட்டை செல்லாமல் ஆக்குவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரியே, அதில் எழுதும் காணொலிகளும் இணை யத்தில் வைரலாகின.

ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குவதா?

இந்நிலையில், எவ்வித விளக்கமும் அளிக்காமல், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த் தும், மேயர் தேர்தல் முடிவுக்குத் தடை விதிக்கக் கோரியும் பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி நாடியது. ஆனால், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, திங்களன்று விசாரித்தது.
அதைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “சண்டிகர் தேர்தல் அதிகாரியின் செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகும்… இதுதான் தேர்தல் நடத்தும் முறையா? நடந்த நிகழ்வுகள் எங்களுக்கு திகைப்பை ஏற்படுத்துகின்றன. சண்டிகர் மேயர் தேர்தலை ஜனநாயகப் படுகொலை செய்யும் நிகழ்வாகவே பார்க் கின்றேன் என்றும் இதுபோன்ற ஜனநாயக படுகொலையை அனுமதிக்க முடியாது” என்றும் கடுமையாகக் கூறினார்.
மேலும், “வாக்குச் சீட்டுகளைச் சிதைத்த தேர்தல் நடத்திய அதிகாரி மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்; அவரை விசாரிக்க வேண்டும்; தேர்தல் வாக்குச்சீட்டுகள், காணொலிகள் மற்றும் இதர கோப்புகளை சரிபார்க்க பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி, பிப்ரவரி 7 அன்று சண் டிகர் மாநகராட்சிக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அடுத்த உத்தரவு வரும்வரை மாநகராட்சிக் கூட்டத்தை நடத்தக்கூடாது” என்றும் தடை விதித்துள்ளார்.
அங்குமட்டுமா? முன்பு டில்லி மேயர் தேர்தலிலும் இப்படி ஒரு பகிரங்கமான பித்தலாட்டத்தை அரங்கேற்றி யது பா.ஜ.க.
இந்த ஜனநாயகப் படுகொலை- இதில் மட்டுமா?
இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள ஆட்சி யமைப்புகள் – அதிகார கூறுகளான நாடாளுமன்ற, சட்டமன்ற, நீதித்துறை, நிர்வாகத் துறை எல்லாவற்றிலும் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்த நாள்முதல் இந்த நாள்வரை தொடர்ந்து நடந்தேறி வருகிறது! அதிகாரி வெறும் கருவியே! மூலவர்கள் யார்?

பா.ஜ.க. தலைமைதான்! அடுத்தகட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் கேவலம்!

மக்களது வாக்குகளைப் பெற்று, தேர்தலில் வெற்றி பெற்று அமைத்த ஆட்சிகளை – மாநிலங்களில் வெற்றி பெற்ற பிற கட்சியினரை விலைக்கு வாங்கியோ அல்லது வருமான வரித் துறை, சி.பி.அய். (CBI), அமலாக்கத் துறை அச்சுறுத்தல் என்ற ‘‘திரிசூல மிரட்டல்” ஆயுதத் தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட மாநில பா.ஜ.க. ஆட்சிகள் ஏராளம்.
கடந்த 10 ஆண்டு அரசை சற்றுத் திரும்பி எண்ணிப் பார்க்கட்டும்!
‘கூடு விட்டு கூடு பாயும்படியாக’ மக்கள் ஆட்சி செய்ய எந்தக் கட்சிக்குத் தேர்தலில் தேர்ந்தெடுத்து வாக்களித்தாலும், நாங்களே ஆட்சி அமைப்போம்; இப்படி ஓர் அரசியல் அவலங்களின் அரங்கேற்றம்மூலம் என்பது நாளும் காணும் காட்சி.
அதற்கு அண்மைய உதாரணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்யப்பட்ட முயற்சி.
ஒரு ‘‘புதிய ஜனநாயக வித்தை” – ‘‘ஓட்டு யாருக்கு விழுந்து வெற்றி அறிவிக்கப்பட்டால் என்ன? அப்படியே அவர்களை ‘ஆள் தூக்கி’ எங்கள் காவி ஆட்சியை அமைப்போம்” என்பதே!
கோவாவில் தொடங்கி தோற்றுப் போனதில் நேற்றைய ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சர் தேர்வில் இந்த வித்தையில் இப்போது வெற்றி பெற முடியவில்லை. என்றாலும், உடைப்பதற்கான உத்திகளை பா.ஜ.க. எளிதில் கைவிடவில்லை.

ஆளுநர்களின் சண்டித்தனம்!

அடுத்து எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை ஆளும் கட்சிக்கு எதிராக, அரசமைப்புச் சட்ட நெறிகளை அப்புறப்படுத்தி, நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ‘சண்டித்தனம்’ செய்து, போட்டி அரசு நடத்தும் வித்தை மூலம், மக்களுக்குத் தந்த உறுதிமொழியை அவ்வாட்சி கள் நிறைவேற்றம்செய்யவிடாமல், அரசியல் அலங் கோலத்தை நடத்திடும் அரசமைப்புச் சட்ட விரோத நடைமுறைகள்.

இதையும் தாண்டி, சுதந்திரமாக இயங்கவேண்டிய, இயங்கும் கடமை வாய்ந்த உச்ச, உயர்நீதிமன்றங்களையே கூட இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வரச் செய்யும் மற்றொரு வகை வித்தைகள் – இப்படிப் பலப்பல!

இதற்கு ஒரே பரிகாரம் – இந்தியா ஜனநாயகப் பாதையில் திரும்ப – இந்தத் தடைகளை அகற்ற ஒரே வழி – 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளு மன்றப் பொதுத் தேர்தலில், மீண்டும் இந்த வித்தை காட்டும் எதேச்சதிகாரர்களைத் தோற்கடிப்பதுதான்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் செயல்முறை சரியானதா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் பழைய அமைச்சர் கள்மீது ஊழல், லஞ்சம் என்று பதியப்பட்ட வழக்கில், அவர்களுக்கு வெற்றி கிடைத்த பிறகுகூட, தானே முன்வந்து மீண்டும் விசாரணை என்று செய்யும் நீதி பரிபாலன முறையில், குறிப்பிட்ட நீதிபதி தன்னிச்சையாக வழக்கை மீண்டும் விசாரிக்க முற்படுமுன், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியின் முன்அனுமதிபற்றி கவலைப்படாமல், அதிவேகத்துடன் – அதற்குரிய உயர்நீதிமன்ற சட்ட மரபுகள், விதிகளைப் புறந்தள்ளி, தீவிர ஆர்வம் காட்டிய நிலைபற்றியும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதும் ஜனநாயகத்தைக் காப்பதற்கு முக்கியமானதல்லவா?

பொதுவாக இரண்டாவது முறை குறிப்பிட்ட ஒரு நீதிபதி விசாரிக்கும் உரிமை தமக்கு உண்டு என்று கருதும்போது, அப்படிச் செய்வதற்குமுன் தலைமை நீதிபதியின் ஒப்புதல் தேவை என்ற விதிகளைப் புறந்தள்ளியதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது!

பொதுவாக ‘‘இந்த நீதிபதி விசாரித்தால், தனக்கு நீதி கிடைக்காது; எனவே, வேறு கோர்ட்டுக்கு (அமர்வுக்கு) மாற்றுங்கள்” என்று வழக்காடிகள் கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதுவே, அதை ஏற்கவோ, மறுக்கும் உரிமை விசாரிக்க விரும்பும் நீதிபதிக்கும் உண்டு என்பதை எல்லோரும் அறிவர்.

ஜனநாயக விரோதப் போக்கில் ஆட்சி நடத்தும் ஆளும் பி.ஜே.பி. கூட்டணியைத் தோற்கடிப்பதே ஒரே தீர்வு!
பொதுவாக, பலரும் தம்மீது நம்பிக்கையில்லை என்பதினால், தானே முன்வந்து ‘‘அந்த வழக்கை விசாரிக்க மறுக்கிறேன்” என்று கூறுவதுதான் பல வழக்கு களில் நாம் கண்ட அனுபவ நடத்தை.

அதில் பிடிவாதம் காட்டுவது பொதுவாக விரும்பத் தக்கதல்ல; அதையும், அதிதீவிர ஆர்வத்துடன்(Over enthusiasm)காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுவது எங்கேயும், எவர்க்கும் இயல்பு! சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததல்லவா?
இப்படியெல்லாம் பலமுனைகளில் ஜனநாயகம் கேலிக் கூத்தாகி வருவதற்குச் சரியான தடுப்பு – மக்கள் ஏமாறாமல் வாக்களிப்பதே!

பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதே!
கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளாதீர்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
6-2-2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *