மோடிக்கு ராமனும் கைகொடுக்கமாட்டான் – வாக்காளர்களும் கைகொடுக்கமாட்டார்கள்!
மதுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
மதுரை, பிப்.5 இந்தியா கூட்டணி – மோடி தலைமை யிலான ஆட்சிக்கு – கூட்டணிக்குப் பெரும் அச் சுறுத்தலாக இருக்கிறது. அதனால் இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்; இது அவர்களின் ஒரு யுக்தியே! மோடி அரசுக்கு ராமனும் கைகொடுக்கமாட்டான்; வாக்காளர்களும் கை கொடுக்கமாட்டார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (4-2-2024) காலை மதுரைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது என்று சொல்வதே போலித்தனமான செய்தி!
செய்தியாளர்: இந்தியா கூட்டணி சிதறிவிட்டது என்றும், பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸ் கட்சி யின் நடவடிக்கை சரியில்லை என்றும், மாநிலங்களில் ஒதுக்கக்கூடிய இடங்களை அதிகம் ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் சொல்வதால், நெருக்கடி ஏற்பட்டு, இந்தியா கூட்டணி உடைந்திருக்கிறதே; எதிர்க்கட்சி கள் எல்லாம் ஒன்றிணையவேண்டும் என்று சொல் கின்ற நீங்கள், இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
தமிழர் தலைவர்: முதலில், இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது என்று சொல்வதே போலித் தனமான செய்தியாகும்.
யாரும் இந்தியா கூட்டணியிலிருந்து விலகுகி றோம் என்று அறிவிக்கவில்லை. சில கருத்து மாறுபாடுகள்தான். ”வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான்” இந்தியா கூட்டணி. அந்தக் கூட்ட ணிக்கு முதலில் தேர்தல் உடன்பாடு. கொள்கை அடிப்படையில் வந்ததுதான் இந்தியா கூட்டணி. அங்கொன்றும், இங்கொன்றும் சில இடங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள், மாநிலத்தை மய்யப் படுத்திப் பேசுகிறார்கள்.
மூன்று பொய்ப் பிம்பங்கள் ஊடகங்களால் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன!
மூன்று பிம்பங்கள் இன்று திட்டமிட்டுப் பரப் பப்படுகின்றன பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சியினரால்.
முதல் பிம்பம், இந்தியா கூட்டணி உடைந்தது என்ற ஒரு போலித்தனமான பிரச்சாரம்.
இதுபோன்ற எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்பது கிடையாது.
ஒரு கூட்டணிக்குள் தொகுதிப் பிரச்சினை ஏற்படு வது என்பது இயல்புதான் – அதற்காக கூட்டணி உடைந்தது என்று சொல்வீர்களா? அதேநிலைதான், இந்தியா கூட்டணிக்கும்.
ஏனென்றால், இந்தியா கூட்டணியில், அகில இந்திய அளவில் கட்சிகள் இருக்கின்றன; மாநில கட்சிகள் இருக்கின்றன.
இது சிலருடைய ஆசையே தவிர, உண்மையல்ல!
இரண்டாவது பிம்பம்,
அடுத்தாக மோடிதான் பிரதமராக வருவார்; பா.ஜ.க.தான் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்று திட்டமிட்டு, ஊடகங்கள் மூலமாக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம்.
அதற்குரிய வாய்ப்புகள் இல்லை என்பதற்கு உதாரணம், மோடி அவர்கள் எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், வடபுலத்தில், மணிப் பூருக்குச் செல்வதற்கு அவர் தயாராக இல்லை.
தென்மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றி பெற்று ஆட்சியில் இல்லை.
அதேபோல, காஷ்மீரில் இன்னமும் தேர்தல் நடத்தத் தயாராக இல்லை. வடமாநிலங்களான ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் இல்லை.
இதையெல்லாம் வசதியாக ஊடகங்கள் திரையிட்டு மறைத்துவிட்டு, அங்கொன்றும் இங்கொன்றும் எழக் கூடிய சலசலப்பைப் பெரிதாக ஊதிப் பெருக்கி, அதன்மூலமாக இந்தியா கூட்டணியை உடைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
இது ஒரு திட்டமிட்டுச் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம்.
இந்தியா கூட்டணி உடைந்தது என்பது உண்மையல்ல! உடையவில்லை, உடையாது!
ஆகவே, முதலாவதாக இந்தியா கூட்டணி உடைந்தது என்பது உண்மையல்ல! உடையவில்லை, உடையாது.
”வேற்றுமையில் ஒற்றுமை இருக்கும்” அந்த ஒற்றுமையில் பல கருத்து விவாதங்கள் வரும். கருத்து மாறுபட்டு ஏற்படும் விவாதங்களால், கூட்டணி உடைந்துவிட்டது என்று பொருளல்ல.
மூன்றாவது பிம்பம்,
மோடிதான் மிகப்பெரிய அளவிற்கு வாக்கு வங்கி தயாரிப்பாளர் என்று சொல்லி, அவர் எங்கே போகிறாரோ, அங்கே பூமாரி பொழிவதுபோன்று வாக்குகள் கொட்டும் என்று சொன்னதும் போலித் தனம் என்று நிரூபணமாகிவிட்டது.
அதற்கு உதாரணம், கருநாடகா, தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.
தென்னாட்டில் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம்; உத்தரகாண்ட் போன்ற வட மாநிலங் களிலும் அப்படித்தான். மணிப்பூரில் அவரால் செல்ல முடியவில்லை.
ஆகவே, மேற்சொன்ன மூன்று பிம்பங்கள் உண்மையல்ல!
60 சதவிகித மக்கள் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிராகத்தான் இருக்கின்றனர்!
இதுவரை இரண்டு முறை ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த பி.ஜே.பி. 40 சதவிகிதத்தைத் தாண்டி வாக்குகள் பெறவில்லை. கூட்டணியாக வந்த பிறகுகூட 45 சதவிகிதம்தான் வாக்குகள் பெற்று இருக்கிறார்கள்.
60ள சதவிகித மக்கள் இவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறார்கள். இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்ட உண்மைகளாக இருக்கிறதே தவிர, மறுக்கப்பட்ட உண்மைகளாக இருக்க முடியாது என்பதுதான் மிக முக்கியம்.
எனவே, இந்தியா கூட்டணி என்பது தலைவர் களால் முடிவு செய்யப்படுவதில்லை. தலைவர் கள் வாக்களிப்பதில்லை. மாறாக, மக்கள் வாக்களிக் கிறார்கள். வாக்கு அளிக்கக்கூடிய மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேலை வாய்ப்பின்மையால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக ‘ஜூம்லா’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
”குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்போம்” விவசாயிகளுக்கு என்று சொன்னார்கள். அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்யவில்லை.
பி.ஜே.பி,.க்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இதுதான் கடைசி தேர்தல் – ஒரே தேர்தல்
எனவே, வாக்காளர்கள் தயாராகிவிட்டார்கள்; தலைவர்கள் தயாராகிறார்களா, இல்லையா? என்பது முக்கியமல்ல; வாக்களிக்கின்றவர்கள் மக்கள் – ”அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்” உள்ள மக்கள் இருக்கிறார்கள் – அவர்கள் முடிவு செய் வார்கள்.
மீண்டும் ஒன்றியத்தில் மோடி ஆட்சி வராது. ஆட்சி வரும் என்று திட்டமிட்டு செய்யப்படுவது ஒரு பொய்ப் பிரச்சார யுக்தி!
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்காக தேர்தலே நடைபெறாது என்று சொல்ல முடியுமா?
இதுதான் கடைசி தேர்தல் – ஒரே தேர்தல் என்று சொன்னால், நாங்களும் சொல்கிறோம், பி.ஜே.பி,.க் கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இதுதான் கடைசி தேர்தல் – ஒரே தேர்தல்.
கொள்கையைத் தேடுகிறார்கள்; மக்கள் இவர்களைத் தேடுவார்களா, இல்லையா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
செய்தியாளர்: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அவருடைய கட்சியின் கொள்கை என்னவென்று சொல்லட்டும்; பிறகு கருத்து சொல்கிறேன்.
அவர் நல்ல நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அரசியல் வேறு; கட்சி வேறு.
கட்சித் தொடங்குவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. இரண்டு பேர் இருந்தாலே கட்சி தொடங்கலாம். ஒருவர் முன்மொழியவேண்டும்; இன்னொருவர் வழி மொழியவேண்டும்.
கட்சி தொடங்குவதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு – வசதி உண்டு – வாய்ப்பு உண்டு.
ஆனால், அவருடைய கட்சிக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோமா, வரவேற்கிறோமா இல்லையா என்று முடிவு செய்வது, அவருடைய கட்சியின் கொள்கையை வைத்துத்தான்.
கொள்கையை முன்னால் வைத்து, கட்சியைப் பின்னால் வைத்தவர்கள்தான் இதற்கு முன்பிருந்த தலைவர்கள், பெரியார் உள்பட.
ஆனால், கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு, அந்தக் கட்சியின் கொள்கை என்னவென்று இரண்டு மாதங்கள் கழித்துச் சொல்வோம் என்பது – கொள்கையைத் தேடுகிறார்கள்; மக்கள் இவர் களைத் தேடுவார்களா, இல்லையா? என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.
கொள்கையை வைத்துத்தான்
ஒரு கட்சியை ஆதரிப்பதா, இல்லையா? என்பது எங்களுடைய நிலை
செய்தியாளர்: பழைய வரலாறுகளையெல் லாம் படித்துவிட்டுத்தான், நான் கட்சியைத் தொடங்கியிருக்கிறேன் என்று நடிகர் விஜய் சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: வரலாறுகளைப் படித்திருக் கலாம். வரலாறுகளை படிக்கவில்லை என்று நாம் சொல்லவில்லை. அவருடைய கட்சியின் கொள்கை என்னவென்று சொல்லட்டும்.
அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், கொள்கையை வைத்துத்தான் ஒரு கட்சியை ஆதரிப்பதா, இல்லையா? என்பது எங்களுடைய நிலை.
எங்களுடைய கருத்தைக் கேட்கிறீர்கள், அவர் முதலில் அவருடைய கட்சியின் கொள்கையை சொல்லட்டும்; பிறகு அதுகுறித்து கருத்தைச் சொல்கிறேன்.
எங்கள் கட்சிக்கு இதுதான் கொள்கை என்று அவர் சொல்லட்டும்; பிறகு அவரை ஆதரிப்பதா, இல்லையா? என்று சொல்கிறோம்.
கருப்புச் சட்டை அணிந்துகொண்டு போவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு!
வருகிற 8 ஆம் தேதி, கருப்புச் சட்டை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்திற்குப் போகவிருப்பதாக தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித் திருக்கிறார்கள்.
இதுவரையில், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இரண்டு முறை திருச்சிக்குச் சென்றார்; சிறீரங் கத்திற்குச் செல்கிறார்; மதுரை மீனாட்சி அம்மனைப் பார்க்கிறார்; இராமேசுவரத்திற்குச் செல்கிறார்; புயலால் அடித்துக்கொண்டு போன தனுஷ்கோடிக்குச் செல்கிறார்.
அதுபோன்றுதான் வரப் போகிறது, அவரைப் பொறுத்தவரையில் புயல். அதிலொன்றும் சந்தேகமே யில்லை.
தமிழ்நாட்டில் நிச்சயமாக அவர்களால் வாக்கு களைப் பெற முடியாது. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உங்களுக்கு கால் வைக்க உரிமை இருக்கிறதா? வாக்குகள் கேட்க உரிமை இருக்கிறதா? என்று இளைஞர்கள் கேட்பார்கள்.
அதற்கு என்ன காரணம் என்றால், நீங்கள் நிவாரண நிதியைக் கொடுக்கவேண்டாம்; புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி யிருக்கிறாரா?
குஜராத்தில் படகு கவிழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபச் செய்தி அனுப்புகிற மோடி, தமிழ்நாட்டில் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாரா?
இராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது? அங்கே இருக்கின்ற மக்களைப் பார்த்து, ”நன்றாக இருக்கிறீர்களா?” என்று ஒரு பிரதமர் கேட்கவேண்டாமா?
இராமனும் கைகொடுக்கமாட்டான்; தமிழ்நாட்டு வாக்காளர்களும் கைகொடுக்கமாட்டார்கள்
மணிப்பூருக்கு இவர் போவதற்கு எப்படி யோசிக்கிறாரோ, மணிப்பூர் எப்படி இவருக்கு அகலமாகத் தள்ளி இருக்கிறதோ, அதேபோலத் தான், தமிழ்நாடு இவரை விட்டு விலகிச் சென்று பல காலம் ஆகிவிட்டது.
மோடி என்ன தவம் செய்தாலும், ஒற்றைக் காலில் நின்றாலும், பல இராமேசுவரங்களை அவர் இங்கே உருவாக்கினாலும், இராமனும் கைகொடுக்கமாட்டான்; தமிழ்நாட்டு வாக்காளர் களும் கைகொடுக்கமாட்டார்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.