திருவள்ளூர், பிப்.4 டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம் மற்றும் தமிழ் நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன் திட்ட விளக்கவுரை ஆற்றினார். இந்த முகாமில் 134 முன்னணி நிறுவனங்களும், 5 திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்துகொண்டன. 1,871 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில் 3 மாற்றுத்திறனாளி உட்பட 263 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 109 வேலை நாடுநர்கள் திறன் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 2ஆம் கட்ட நேர்முகத் தேர்வுக்காக 351 வேலை நாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில், சட்டனம்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு முகாமில் தேர்வு பெற்ற 3 மாற்றுத்திறனாளி உட்பட 263 பணிநியமன ஆணைகளை வழங்கினார். திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் வாழ்த்தி பேசினார். பணி நியமன ஆணை பெற்றவர்கள் தமிழ்நாடு அரசுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். முகாமில் இந்திரா பொறியியல் கல்லூரி முதலமைச்சர் வேல்விழி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேலு, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்ய உதவி இயக்குநர் விஜயா நன்றி கூறினார்.