அமெரிக்கத் தலைவர் பதவிக்கு ரிபப்ளிக்கன் கட்சி சார்பாக ஆல்ப் லாண்டனும், டெமாக்ரட்டி கட்சி சார்பாக ரூஸ்வெல்ட்டும் போட்டி போட்டார்கள். ரூஸ்வெல்ட் மிகவும் அதிகப்படியான வோட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். தேர்தல் முடிவு வெளியாகு முன்னமேயே, தேர்தலில் தோல்வியடைந்த ஆல்ப் லாண்டன், வெற்றி அடைந்த ரூஸ்வெல்ட்டுக்கு வாழ்த்துக் கூறி தந்திச் செய்தியனுப்பினாராம். “தேச மக்கள் முடிவு கூறி விட்டார்கள். அம்முடிவுக்கு அமெரிக்கர் கட்டுப்பட்டு நடப்பார்கள்” என ரூஸ்வெல்ட் டுக்கு உறுதி கூறினாராம். இதை வெற்றி வெறியால் தலைகால் தெரியாமல் கூத்தாடும் காங்கிரஸ் வம்பர்கள் கவனிப்பார்களா? ரூஸ்வெல்ட்டுக்குக் கிடைத்த வெற்றி சாமானிய வெற்றியல்ல. அதுபோலவே லாண்டன் அடைந்த தோல்வியும் படுதோல்வி, பாதாளத் தோல்வி யாகும். எனினும் அவர் வெற்றியடைந்தவரையோ அவரது கட்சியையோ தூற்றவில்லை. வெற்றி பெற்ற ரூஸ்வெல்ட்டும், தோல்வியடைந்த ரிபப்ளிக் கட்சி குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாகக் கூறவில்லை. அவரது கட்சியார் லாண்டன் கட்சியாரைத் திட்டவு மில்லை.
தேர்தல்களிலே கட்சிப் பிரதிக் கட்சிகள் போட்டி போடுவதும், வெற்றியோ தோல்வியோ அடைவதும் இயல்பு. வெற்றிபெற்ற கட்சியார் மற்றக் கட்சி அல்லது கட்சிகள் புதைக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது வடி கட்டின அயோக்கியத்தனமாகும். 26ஆவது டிவிஷனில் வெற்றி பெற்ற ஸ்ரீமதி ருக்மணி லட்சுமிபதி அம்மை யாருக்கு ஊர்வலம் நடந்ததாம். அந்த சம்பவத்தைப் பிரசுரம் செய்த “தினமணி” அச்செய்திக்கு ஜஸ்டிஸ் கட்சியைப் புதைத்த 26ஆவது டிவிஷனில் எனத் தலைப்புக் கொடுத்திருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியாருக்குத் தோல்வியேற்படும் போதெல்லாம் ஜஸ்டிஸ்கட்சி புதைக்கப்பட்டு விட்டதாகப் புலம்புவது ‘தினமணி’யின் வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே, பிணந் தூக்கும் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற அசடுகளும் பிணம் பிடுங்கும் கழுகுகளுந்தான் ‘தினமணி’ காரியால யத்தில் அடைபட்டுக் கிடக்கின்றனவோ என்று சந்தேகங் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
தேர்தல்களில் தோல்வியேற்பட்டதினால் ஒரு கட்சி புதைக்கப்பட்டு விடுமானால் திருச்சி. வேலூர், மேலைக் கோதாவரி முதலிய இடங்களில் சமீபத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விகளினால் காங்கிரஸ் கட்சியும் புதைக் கப்பட்டுத்தானே போயிருக்க வேண்டும்? சென்னை நகர சபை தேர்தலில் காங்கிரஸ் பத்து டிவிஷன்களில் தோல்வியடைந்ததினால் அந்த டிவிஷன்களில் காங் கிரஸ் புதைக்கப்பட்டுத்தானே இருக்க வேண்டும்? அங்கெல்லாம் ‘தினமணி’ காரியாலயத்தார் கருமாதி நடத்தினார்களா? மொட்டை போட்டுக் கொண்டார் களா? வீ(மீ)சையைச் சிரைத்தார்களா? வாஸ்தவத்தில் ‘தினமணி’ காரியாலயத்தாரின் போக்கிரிப் போக்கு சகிக்க முடியாததாகவே இருக்கிறது. அவர்கள் புத்தி போகும் போக்கைப் பார்த்தால் “கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே” என்ற பழமொழி தான் நமது ஞாபகத்துக்கு வருகிறது.
– ‘விடுதலை’ – 7.11.1936