நேற்று (2-2-2024) சுட்டிக்காட்டி எழுதியபடி –
“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்” என்பதில் எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி மூன்றாவது வரிசையில் சோம்பலைச் சேர்த்துள்ளார்!
சோம்பல் என்பது ரொம்ப ரொம்ப விரைவாக நம்மை அது பற்றிக் கொள்ளும் – நாம் சோம்பேறித்தனத்தில் விழுகிறோம் என்பது நமக்கே புரியாத வகையில் ஒருவித விசித்திர மனோ நிலையை – மயக்க மருந்து மறைந்திருந்து வேலை செய்வது போல் – நம்மை அந்த சோம்பல் சுழலுக்குள் அழைத்துச் சென்று சிக்க வைத்து விடும்!
காலை படுக்கையிலிருந்து எழ விழித்துக் கொள்ளும் நம்மில் பலர், சோம்பல் முறித்து ‘பட்’ என்றோ, ‘சட்’ என்றோ எழுந்து காலைக் கடன்களை ஆற்றத் துவங்காது. “இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருந்தால் சுகமாக இருக்கும் என்ன அவசரம்?” – இப்படி ஓர் இரண்டாம் கெட்டான் மனநிலை அது. நமக்கே தெரியாது – ஊசி போடுவது போல் ஆக்கி விடும்!
சனி, ஞாயிறு வார விடுமுறையில் வீட்டிலிருந்து விட்டு, மறுநாள் கிளம்ப முனையும் பல மாணவர்கள் “என்ன இன்று (திங்கள்) வகுப்பிற்குப் போக வேண்டுமா? இன்று ஒரு நாள் மட்டம் போட்டால் என்ன?” என்ற ஒரு வகையான நியாயமற்ற யோசனை, தயக்கம், அதனை அப்போதே மனதிலிருந்து அகற்றித் துரத்தியடிக்காவிட்டால் அது பழக்கமாகி பிறகு வழக்கமாகி நம் வாழ்க்கையைப் பாழடித்து விடும்!
கடும் உழைப்பின் மூலம் கடமையாற்றி வெற்றியைத் தழுவுபவர்கள் எத்துறையில் இருப்பவர்களானாலும் அவர்களது வெற்றிக்கு முழுக் காரணம் அவர்களது சோம்பலின்மையேயாகும்.
கிராமப்புறங்களில் இந்த சோம்பேறிகளைப் பற்றி வேடிக்கைக் கதைகள் பல சொல்லப்படுவது வாடிக்கையாகும்! ‘அவன் பெரிய வாழைப்பழ சோம்பேறி’ என்று சில பேரைப்பற்றிக் குறிப்பிடும்போது எரிச்சலுடன் கூறுவார்கள்.
எனக்குக்கூட, பலர் இப்படிப் பேசும்போது புரியாமல் அதென்ன ‘வாழைப்பழ சோம்பேறி’ என்பது – மிகவும் தாழ் நிலைப்படியில் உள்ளவரா? அப்படி என்று சில காலம் விளங்காமலேயே இருந்தது!
திராவிடர் இயக்கப் பேச்சாளர்களில் மக்களை ஈர்த்து குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து மிகுந்த நகைச்சுவையுடன் பேசுபவர் வேலூர் சி.பி. சிற்றரசு அவர்கள் ஆவார்கள். அவரது இயற்பெயர் சின்னராஜ். அதைத் தூய தமிழில் சி.பி. சிற்றரசு என்று மாற்றிக் கொண்டு இயக்கத்தின் முன்னணிப் பேச்சாளரானார் இந்த சீரிய பகுத்தறிவுவாதி கொள்கையாளர்.
அவர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது மேலவைத் தலைவராக ((Chair Person – The Madras Legislative Council பிறகு Tamilnadu Legislative Counci) அவர் ஓர் பொதுக் கூட்டத்தில் இந்த சோம்பேறித்தனம் பற்றி பேசியதை நேரில் கேட்டு மறக்க முடியாமல் சிரித்து மகிழ்ந்தோம்!
“ஒரு சிறு பெட்டிக்கடையில் வாழைப்பழச் சீப்பு தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கடை முதலாளி சரியான சோம்பேறி – பெரிதும் உட்கார்ந்த நிலையிலே எப்போதும் தூங்கியும், கொட்டாவி விட்டபடியும் இருப்பவன்; அவனிடத்தில் மெதுவாக நடந்து வந்த ஒருவன், ‘அய்யா 2 வாழைப்பழம் எவ்வளவு விலை, ‘வாழைப் பழத்தை சீப்பிலிருந்து பிய்த்துத் தாருங்கள்’ என்று கேட்டான் – கடை முதலாளியோ “நீங்களே காசைக் கல்லாவில் போட்டு விட்டு, பழத்தை பிய்த்து எடுத்துச் செல்லுங்கள்” என்றான்!
வந்தவனோ “எனக்கு உரித்த வாழைப் பழம் தான் உங்களிடமிருந்து வேண்டும்” என்றார்; அவனோ “கல்லாவில் போட்ட காசை எடுத்துச் செல்லுங்கள் – உரித்த வாழைப்பழம் என்னிடம் இல்லை” என்றானாம்.
வந்தவனோ இந்த சோம்பேறியை மிஞ்சும் வகையில், “இல்லை இல்லை வாழைப் பழத்தை உரித்து எனது வாயில் போடுங்கள்; நான் அதை விழுங்க மெதுவாக முயற்சிக்கிறேன்” என்றானாம்!
இது அநேகமாக ஒரு கற்பனைதான் என்றாலும் இரு வகை சோம்பல்காரர்களை ஒப்பீடு போல கூறியிருக்கிறார்.
எனவே சோம்பல் நோய்க்கு நாம் ஒரு போதும் ஆளாகக் கூடாது!
அதை அனுமதிக்கக் கூடாது! அதன் உற்ற சகோதரர்களான காலந் தாழ்த்துதல், மறதி எய்தல், அளவுக்கு மிஞ்சிய தூக்கம் குறித்து அடுத்தடுத்து ஆராய்வோமா?
(மேலும் வரும்)