1. பெரியார் பன்முகம்
அரசு அலுவலர்களின் மாநிலப் பொறுப்பாளராக இருந்து மகத்தான சேவை செய்தவர். படிப்பவர் – நல்ல பேச்சாளர், நினைவு ஆற்றலுடன் எதையும் குறிப்பிட்டுக் கூறும் நாவன்மை படைத்தவர். அத்துடன் அவருக்குச் சீரிய எழுத்தாற்றலும் உண்டு என்று நிரூபிக்கும் வண்ணம் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் குறித்து அவரது பன்முக ஆற்றல், சிந்தனை வளம், செயல்திறன் குறித்து அருமையான ஓர் ஆய்வினை ஓவியம்போல தீட்டிக்காட்டியுள்ளார் – “பெரியார் பன்முகம்” எனும் இந்நூலில்! கருத்துச் சுவையுடன் கூடிய கவின்மிகு உணவாகச் சமைத்து நமக்குப் பரிமாறுகிறார்!
தந்தை பெரியார் குறித்து இவர் ஒரு கோணத்தில், இளைய தலைமுறையும், இனிவரும் தலைமுறையும் தெரிந்து, புரிந்து பயன்பெற்று மனிதநேய மாண்பில் திளைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு எழுத்தோவியம் தீட்டித் தந்துள்ளார். ஏராளமான செய்திகள்-கருத்துக்கள் முத்துக்கள் கோக்கப்பட்டதுபோல இந்நூலில் கூறப்பட்டுள்ளன. வாசக நேயர்களுக்கு கருத்துப் பரிமாறிடத் துடிக்கும் அறிவுக்கரசு அவர்களையே அவரது பணியின் மூலம் தொண்டறம் நடத்தி களிநடனம் புரிய விட்டுவிடுகிறேன்.
புதைந்து கிடக்கும் எழுத்தாற்றல், கருத்து மனம் வெளியே கொணர்ந்துள்ள பகுத்தறிவாளரான என் சகோதரரை வாழ்த்தி, பல புத்தகங்களையும் இப்படி உருவாக்கி பெரியாரின் பெருமைகளை பேசாத நாள் எல்லாம் பிறவா ஞானிகளே என்று பலரையும் உணர்த்திட தொண்டு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். வளர்க அறிவுக்கரசரின் வளமை பொங்கும் எழுத்தாற்றல்!
(பெரியார் பன்முகம் நூலின் அணிந்துரையில் – 2000)
2. பெண்
சகோதரர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்கள் “பெண்” என்ற ஒரு அரிய நூலை எழுதியுள்ளார். பெண், மனைவி, திருமணம், மக்கட்பேறு, கருத்தடை, கைம்மை, விபச்சாரம். கற்பு. மணவிலக்கு. மதத்தில் பெண்கள், உரிமை, கருதுகோள் என்று 12 அத்தியாயங்களில் மிக அற்புதமான ஒரு சமூ கவியல் சிந்தனைக் கருவூலத்தை-பெரிதும் தந்தை பெரியார் அவர்களது புரட்சி சிந்தனைகளையே முதன்மைப்படுத்தி இந்நூலை நாட்டிற்கு அளித்துள்ளார்.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெரியார் சிந்தனையும், சமுதாய நிலையும். விடியலுக்கான வழியும் மிகவும் தெளிவாகவும், துணிவாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சகோதரர் சு.அறிவுக்கரசு அவர்கள் நல்ல சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்து, அதே முறையில் வளர்க்கப்பட்டு, ஆளாக்கப்பட்டு விரைந்து பல அரசுப் பதவிகளை அலங்கரித்த நிலையில், அஞ்சாது தனது கொள்கை இதுதான் என்பதை தயக்கமின்றி வெளிச்சம் போட்டுக் காட்டத் தயங்காதவர்!
நல்ல நினைவாற்றல் படைத்தவர். நல்ல பேச்சாளர். சிறந்த எழுத்தாளர், இப்படி பல்திறன் பெற்ற அவரது அண்மைக்கால எழுத்துத் திரட்டுதான் இந்தப் “பெண்” என்ற சமூக விஞ்ஞான நூல் ஆகும்! பெரியார் கண்ட புரட்சிப்பெண் எப்படிப்பட்டவர் என்றஉயிரோவியத்தை மிக அருமையான முறையில் சகோதரர் அறிவுக்கரசு அவர்கள் தீட்டியுள்ளார். இதை மகளிர் நல்ல வண்ணம் படித்து செரிமானம் செய்து, பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாக மாறிவிட வேண்டும் என்பதே நமது ஆசை.
சகோதரர் அறிவுக்கரசின் ஆற்றலும், சிந்தனையும் சமுதாயப் புரட்சிக்கான ஓர் நல்ல படைக்கலனாக இதன்மூலம் சமூகத்திற்குத் தரப்பட்டுள்ளதால் நம் எல்லோரது பாராட்டுகளையும் பெற்றவராகிறார் அவர்.
(“பெண்” நூலின் அணிந்துரையில் – 2011)
3. இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்
தோழர் சு.அறிவுக்கரசு அவர்கள் ”இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்” என்ற தலைப்பில் பொங்கும் கோபக்கனலோடு தமது ஆய்வறிவையும் ஆழமான இலக்கியச் சிந்தனைகளையும் பயன்படுத்தி எழுதியுள்ள மிக அருமையான ஒரு புரட்சி நூலாகும். மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் நல்ல பேச்சாளர். நிறைய நூல்கள் பல கற்பவர்-நினைவாற்றல் உள்ளவர்- சிறந்த எழுத்தாளர். இவ்வளவு பல திறமைகளை உள்ளடக்கிய அவருக்கு 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசுப் பணி அனுபவங்களும் உண்டு. பல உணர்வாளர்களோடு பரிச்சயம் உடையவர். அவர்களையும் நன்கு “கற்றவர்” – தந்தை பெரியார்தம் பகுத்தறிவுக் கருத்துகளையே தாலாட்டாகப் பெற்று வளர்ந்த சூழ்நிலை அவரது சுயமரியாதைக் குடும்பப் பெருமையாகும் அவரது தந்தையார் திரு, வ.சுப்பிரமணியன் கடலூரின் முரட்டுச் சுயமரியாதைக்காரர்களில் ஒருவர் – சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள ஆய்வுரையை முழுவதும் படித்தேன் – சுவைத்தேன். திராவிடர் இயக்க நூற்றாண்டு கொண்டாடும் பருவத்தில் விளைந்துள்ள நல்ல கதிர் அறுவடைகளில் இதுவும் ஒன்று
அறிவுக்கரசு அவர்கள் பல்வேறு ஆரியக் குறும்புகளுக்கும். குசும்புகளுக்கும் இந்நூலின் மூலம் தக்க பதிலுரை பகிர்ந்திருக்கின்றார்.
(“இவர்தாம் புரட்சிக்கவிஞர் – பார்” நூலின் அணிந்துரையில் -2012)
4. திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே!
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராகத் தற்போது பொறுப்பு வகிக்கும் சகோதரர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்கள் நல்ல பேச்சாளர் சிறந்த எழுத்தாளர் – ஆற்றல்மிகு நிர்வாகத் திறமையுடையவர் – நீண்டகாலம் அரசு அலுவலராகப் பணியாற்றி, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி அளவில் அவரது உழைப்பால் உயர்ந்த ஓர் எடுத்துக்காட்டானவர் ஒரே ஊர்க்காரர். அவரது தந்தையார் மானமிகு சுப்ரமணியம் அவர்கள் ஓர் தீவிர முரட்டு சுயமரியாதைக்காரர் பெரியார் தொண்டர் – இவரும் துவக்கம் முதல் இன்றுவரை அவர் வழியே பகுத்தறிவுவாதி சுயமரியாதைக்காரர்.
பெரியார் பாதையைத் தவிர வேறு பாதை அறியாதவர். அவர் எழுதியுள்ள “திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே!” எனும் இந்நூல் ஓர் அற்புதத் தகவல் களஞ்சியம், பண்பாட்டுப் படையெடுப்பு திராவிடர் சமுதாயத்தின் மீது ஆரியத்தால் எப்படி நடத்தப்பட்டது என்பதை விளக்கமாக தக்க சான்றுகளோடு தருகின்ற நூலாக, தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுத் துவக்கம் முதல் தான் கொண்ட கொள்கையில் எப்படி வெற்றி வாகை சூடினார் என்பதை மிகவும் துல்லியமாய் விளக்குகிறார்.
“திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களை யெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி” என்ற நுளிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான் இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளையும் பெற்று தலைநிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்தகால – மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல் களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார் என்றால் அது மிகையாகாது.
அவரது ஆழ்ந்த ஆய்வுப் பார்வை தெளிவான வெளிச்சத்தை குழம்புபவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோருக்கும் தருவதாக அமைந்துள்ளது ! தந்தை பெரியார் அவர்கள் அவ்வப்போது தான் மாற்றிக்கொண்ட நடைமுறைத் திட்டங்களைப் பற்றியும் அதைப் புரிந்துகொள்ளாதவர்கள், புரிந்தும் புதியாததுபோல் நடித்து மக்களைக் குழப்பும் குதர்க்கவாதிகளுக்குச் சாட்டையடி பதில்களைத் தந்துள்ளதோடு இதனை முழுமையாக விளக்கிடுவதுதான் சகோதரர் அறிவுக்கரசு அவர்களின் இந்த அரிய ஆய்வு நூல் – சிறப்பாகப் பல்வேறு ஆதாரங்களை மறுக்க இயலாத தகவல்களைத் திரட்டி. திராவிடர் சமுதாயத்தின் நோய்நாடி நோய் முதல் நாடி.அதற்குப் பெரியாரின் சிகிச்சை எந்தெந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் நடைபெற்றுள்ளது என்பதை மிக அருமையாக விளக்கும் தொண்டுக்கு அறிவுக்கரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
(“திராவிடர் கழகம் கட்சி அல்ல – ஒரு புரட்சி
இயக்கமே” நூலின் அணிந்துரையில் – 2013)
5. நீதிக்கட்சியும் சமூகநீதியும்
மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் கடுமையாக உழைத்து “நீதிக் கட்சியும் சமூக நீதியும்” என்னும் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். நீதிக் கட்சியின் தோற்றம். டி.எம். நாயரின் அறிவுத்திறம் – உழைப்பு தொண்டு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பில் நீதிக்கட்சி ஆற்றிய பணி, சமூக நீதியை நிலைநிறுத்திய விதம், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றிய சட்டங்கள் எல்லாவற்றையும் வளமான நடையில் விளக்கியிருக்கிறார்.
நீதிக்கட்சி நூறு ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த புரட்சிகரமான சட்டங்களை. வடமாநிலங்கள் இப்போதுதான் தயங்கித் தயங்கிச் செயல்படுத்துகின்றன என்பதை வாசகர்கள் அறியும்போது நீதிக் கட்சியின் புரட்சி மனப்பான்மையைத் தெளிவாக உணர்வார்கள்.
தந்தை பெரியாரின் கொள்கைகள் தாமதமானாலும் நிச்சயம் வெல்லும் என்பதை இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். நீதிக்கட்சியின் வரலாற்றை – சாதனைகளை அறிந்து கொள்ள உதவும் இப்புத்தகம் அறிவுச் சுரங்கமாகவும் திகழ்கிறது; அறிவாயுதமாகவும் ஒளிர்கிறது.
(“நீதிக்கட்சியும் சமூக நீதியும்” புத்தகத்திற்கான அணிந்துரை)