இதுதான் ‘பாரதத் திருநாடு!’

Viduthalai
3 Min Read

உலகிலேயே வாழத்தகுதிகுறைந்த நாடுகள் என்றால் தெற்குசூடான், சாஹாட், ஹொண்டுராஸ், ரூவாண்டா, சோமாலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளைக் கூறுவார்கள்.

 காரணம் இங்கெல்லாம் பொருளாதார சீர்குலைவு மற்றும் அந்த நாட்டு பண மதிப்பு போன்றவற்றைப் பட்டியலிடுவார்கள்.

ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள் விவகாரம் குறித்து நாம் ஊடகத்தில் வரும் செய் திகளை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் நமக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து நமக்கு நன்றாகத் தெரியும்! இந்தியாவில் பல மசூதி களில் ஆப்கானியர்கள் அடைக்கலம் பெற்று வாழ் கின்றனர். 

தாலிபான்கள் அந்த நாட்டைக் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டின் நிர்வாகம் மற்றும் பொருளாதார நிலை மிகவும் மோசமாகப் போய்விட்டது, அந்த நாட்டு விளையாட்டு வீரர்களுக்குக் கூட வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மற்றும் இதர தொண்டு அமைப்புகள் வழங்கும் நிதியில்தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு விளையாடச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தான் அரசு அலுவலகங்களில் தேனீர் கூட வீட்டிலிருந்து எடுத்துச்செல்ல வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். காரணம் அரசு அலுவலகங்களில் தேனீர் வாங்கக்கூட அவர்களிடம் உபரி நிதி இல்லை. உலக நாடுகளும் கடன் கொடுக்க மறுத்துவிட்டன. மேலும் உள்நாட்டு உற்பத்தி என்று ஒன்றுமே இல்லை. இப்படி உள்ள நாட்டின் ரூபாய் மதிப்பு இந்தியாவை விட அதிகமாகிவிட்டது. 

 ஒரு டாலருக்கு ரூ.85 வரை இறங்கிவிட்டது, இந்த நிலையில் ஒரு ஆப்கானி நாணயம்  இந்திய ரூபாயில் 1.14 பைசா என்று சரிந்து விட்டது   அதாவது நம்மைவிட பொருளாதாரத்தில் சிறிது முன்னேறிச்சென்றுவிட்டது ஆப்கானிஸ்தான். 

 கடந்த 9 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் – ஒரு நாள்கூட விடுப்பே எடுக்காமல் வேலை செய்தாராம்! விளைவு ஆப்கானிஸ்தான் கூட நம்மை விட பொருளாதாரத்தில் முன்னுக்குப் போய்விட்டது. அப்படி என்றால் இவர் யாருக்காக உழைத்திருக்கிறார் – விடுப்புக்கூட எடுக்காமல்?

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் பேதம் என்பதை ஜாதி நிர்ணயிக்கிறது. சமூக அமைப்பில் ஏற்றத் தாழ்வுகள் மட்டுமல்ல; பொருளா தாரத்திலும் இந்த ஜாதி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின் படி –

 தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 52 விழுக்காட்டினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். 

இதர பிற்படுத்தப்பட்ட நபர்கள் 38 விழுக்காடு உள்ளனர்

உயர்ஜாதியினரில் 14 விழுக்காட்டினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். 

  இந்த 14 விழுக்காட்டில் பார்ப்பனர்கள் 5 விழுக்காடு, இதர உயர்ஜாதியினர் 9 விழுக்காடு  உள்ளனர் 

 ஏழ்மை நிலையில் உள்ள பார்ப்பனர்களின் புள்ளி விவரத்தில் நகரம் மற்றும் கிராமங்களிடையே பெரிதும் வேறுபாடு காணப்படுகிறது. ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தில் கிராமங்களில் 13 விழுக்காடு ஏழ்மை நிலையில் உள்ளனர். 

நகரங்களில் வெறும் 4 விழுக்காடு மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ளனர். 

பழங்குடியினத்தைப் பொறுத்தவரை அதிக விழுக்காட்டினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அதாவது  இரண்டில் ஒரு பழங்குடியினத்தினர் ஏழ்மையில் உள்ளனர் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபலப் பொருளாதார நிபுணர் ஆர்தர்லூயிஸ் என்பவர் இதுபற்றிக் கூறியுள்ள கருத்து மிக முக்கியமானது.

“இந்திய சமூகம் பொருளாதாரத் தேக்கம் அடைந்ததற்கு மனித இனம் பல ஜாதிப் பெட்டி களுள் அடைக்கப்பட்டு, தொழிலாளர்ப் புழக்கம் தடைப்பட்டது ஒரு முக்கிய காரணம்” என்ற கூறுகிறார்.

 இந்த ஜாதியை அடைகாக்கும் இந்து மதத்தைக் கட்டிக் கொண்டு அழும் வரை – எந்த முன்னேற்றமும் – வளர்ச்சியும் குதிரக் கொம்பே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *