நமது நீதிபதிகளின் புதுமைப் புரட்சி – வாழ்த்துகள்!

Viduthalai
2 Min Read

 நமது நீதிபதிகளின் புதுமைப் புரட்சி – வாழ்த்துகள்!

அரசியல்

நமது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பலர் சமூகப் பொறுப்பின்படியும், மனிதநேயம், அன்பை வளர்ச்சி அடையச் செய்யும் வகையிலும் சில புதுமையான தீர்ப்புரைகளை வழங்குவது மற்றவர்களுக்கும், வேற்று மாநிலத்தவருக்கும்கூட ஒரு வழிகாட்டக் கூடியதாகவும், எடுத்துக்காட்டக் கூடியதாகவும் உள்ளது!

நமது நீதிபதி ஜஸ்டிஸ் ஜெயச்சந்திரன் அவர்கள்முன், முதலமைச்சர் அவர்களையும், அமைச்சர் உதயநிதி குறித்தும் அவதூறுப் பேச்சுகளை பேசிய  வழக்கு ஒன்று வந்தபோது,  குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதி அதிமுக பொறுப்பாளர் – அவர், மன்னிப்புக் கேட்கத் தயாராகி விட்டார்! இப்படிப் பேசி, பிறகு ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமே என்ப தாலோ, அல்லது சிறைக்குச் செல்ல அவர்கள் தயங்குவதாலோ வழக்கில் மன்னிப்பை – சர்க்கரைப் பொங்கலாகக் கருதியோ மன்னிப்பு கேட்கும் மன்னர்களாகி வருகிறார்கள் பலர்.

உண்மையிலேயே தம் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டால், மனந் திருந்தி விட்டார்கள் எனலாம். தண்டனையிலிருந்து தப்பவே மன் னிப்பு என்பதை ஒரு ‘கருவியாக’ பயன்படுத்தினால், அதை எப்படி ஏற்க முடியும் என்ற கேள்வியும் மற்றொரு புறத்தில் எழவே செய்கிறது! தவிர்க்க முடியாத, கூடாத கேள்வியும் அது!

அதற்கொரு புதுமையான முறையை கண்ட றிந்து தீர்ப்பு தந்தார் நீதிபதி திரு. ஜெயச்சந்திரன் அவர்கள்!

யார் குறித்து எங்கு பொதுக் கூட்டம் போட்டு தமது அவதூறு பேச்சை ‘அனாயசமாக’ வாரி இறைத்தாரே, அதே ஊரில், அங்கே மேடை போட்டு அவரே பகிரங்க மன்னிப்பும் கேட்டால் அவருக்கு “முன் பிணை” வழங்கலாம் என்று ஒரு  நிபந்தனை விதித்தார்.

அதுபோலவே  அந்தக் குற்றம் இழைத்த – அவதூறுப் பேச்சு – அதிமுக பொறுப்பாளர் கல்லக்குறிச்சியில் பொதுக் கூட்டம் போட்டு தனது செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டார்.

பரவாயில்லை – பிரச்சினையிலிருந்து இரு தரப்புக்கும் இது ஒரு புதுமையான வெளியே வரும் வாய்ப்பு என்றாகிவிட்டது.

“அரசு இவரை பிணையில் விடலாம் அல்லது வழக்கைத் திரும்பப் பெறலாம் என்பதை அரசு யோசிக்க வேண்டும்; அது அரசின் உரிமை” என்று கூறி விட்டார்!

பொது வாழ்வில் இனி இப்படி “எதுவோ புரண்ட களமாகி” விடாமல் தடுக்க நல்ல வழி – நீதிபதி அவர்களை நாம் பாராட்டி மகிழ்கிறோம்.

மற்றொரு புதுமை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு  விழாவையொட்டி மிகப் பெரிய அறிவுக் கருவூலமாக பெரிய நூலகத்தை அமைத்துள்ளது தமிழ்நாடு (தி.மு.க.) அரசு. எவரும் வியக்கத்தக்க சாதனை அது!

எடுத்துக்காட்டாக  உள்ள அந்த அறிவுப் பூங்காவின் அதிக பயனை வாசகர்களுக்காக மேலும் பெருக்கும் வண்ணம் உயர்நீதி மன்றங்களில் பல தீர்ப்புகளில் தண்டத் தொகை – அபராதம் விதித்து அத்தொகையில் இந்த கலைஞர் நூலகத்தில் ஒரு தனிச் சட்ட நூல்கள் பகுதியையே ஏற்படுத்தி, சட்டம் பயில்வோருக்கும், மற்றோருக்கும் பயன்படும் வகையில் சிறந்த ஒரு தனிப் பிரிவை – ஏற்படுத்தி இருப்பதும் நல்ல முன் மாதிரி எடுத்துக்காட்டாகும்.

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றுஅன்ன செய்யாமை நன்று (குறள் – 655)

குற்றம் புரிந்தோர் இதன் மூலம் திருந்துவதோடு அதன் பலன் சமூகத்தின் நலத்திற்கும் – வளத்திற்கும் வாய்க்காலாக ஓடிப் பாய்ந்தால் நல்லதுதானே! பாராட்டி மகிழ வேண்டாமா?

புதுமை வளர்க!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *