சென்னை, அக்.12 தமிழ் நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் காவிரி விவகாரத் தில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்ககோரி ஒரு மனதாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் நாள் கூட்டத்தில் 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நேற்று (11.10.2023) நடைபெற்ற இறுதிநாள் சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்த கேள்வி நேரத்தில் பேசிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா, “புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருந்து பிருந்தாவனம், அண்ணாசாலை, டிவிஎஸ் சந்திப்பு வழியாக செல்லும் சாலை நகரின் மையப்பகுதியில் உள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தேசிய நெடுஞ்சாலை என்று சொல்லப்படும் சாலைகளில் 7 மீட்டர் மாநில சாலைகளை 10 மீட்டர் சாலைகளாக மாற்றி சுங்கச்சாவடிகளை அமைக்கிறார்கள். ஆனால் சுங்கச்சாவடிகளை அமைக்கக் கூடாது என டில்லிக்கு பலமுறை கடிதங்களை எழுதி உள்ளோம். அரசு பொறுப்பேற்ற உடன் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் 4 வழி சாலைகளாக மாற்றப்படுகின்றன. அதில் சுங்கச்சாவடிகளை எல்லாம் அமைப்பது இல்லை. சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சொல்லும் சாலையை ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்வோம் என கூறினார்.