விருதுநகர் மாவட்ட பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் அய்யம் தெளிந்தனர்

5 Min Read

 கல்வியின் அவசியம், மகளிர்க்கு மரியாதை,

திராவிட இயக்கங்களின் சாதனைகள் குறித்து விளக்கம்!

அரசியல்

விருதுநகர்,அக்.12- “மன்னாதி மன்னர்கள் செய்த சாதனைகள் என்ன?” என பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு கேள்வி எழுப்பினார்.

கடந்த 4 மாதங்களாகத் தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்புகள் நடைபெற்று வரு கின்றன. அதன் தொடர்ச்சியாக 8.10.2023, ஞாயிறன்று விருதுநகரில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலக அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்க வரலாறு எனும் தலைப்பில் வா.நேரு பேசியதாவது:

கல்வியின் அவசியம்!

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”, எனத் திருக்குறளில் கல்வி குறித்துச் சிறப்பான குறள் உண்டு

“கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்”, என்பது தான் அதன் பொருள்.

ஒரு மனிதர் எப்படி படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? கல்வியின் முக்கியத்துவம் என்ன? என்பதை இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குறள் நமக்கு வழிகாட்டுகிறது. 

ஆக அக்காலத்திலே கல்வியில் சிறந்த தமிழர்கள், இடையில் கற்காமல் போனது எதனால்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரே வர்ணத் தைப் படைத்தார் என்றும் சொல்கிறார்கள். 

மன்னாதி மன்னர்கள்!

கடவுளின் நெற்றியில் பிறந்தவர் பிராமணர், தோளில் பிறந்தவர் சத்திரியர், தொடையில் பிறந்தவர் வைசியர், பாதத்தில் பிறந்தவர் சூத்திரர், பிறக்க இடமே இல்லாமல் வந்தவர்கள் பஞ்சமர்கள் என்றெல்லாம் கதை சொல்கிறார்கள். 

சத்திரியர் போர் செய்யவும், வைசியர் வாணிபம் செய்யவும், சூத்திரர்கள் ஏவல் ஆளாக ஊழியம் செய்யவும் படைக்கப் பட்டவர்கள். அப்படியென்றால் படிப்பதற் கென்றே படைக்கப்பட்ட மனிதர்கள் யார்? அவர்கள் தான் பார்ப்பனர்கள். கடவுளின் நெற்றியில் பிறந்தவர்கள். மற்ற யாருக்கும் படிப்பு கிடையாது.

தெரியாமல் படித்துவிட்டால் கூட மன்னிப்புக் கிடையாது. பழுக்க காய்ச்சிய கம்பியால் நாக்கைப் பொசுக்கி விடுவார்கள். படிப்பதைக் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றிவிடு வார்கள்.

திருவள்ளுவருக்குப் பிந்தைய காலம் தொடங்கி இதுதான் நிலைமை. மன்னாதி மன்னர்கள் எல்லாம் பார்ப்பனர் களின் வாழ்வுக்குத் தான் தங்களை அர்ப் பணித்துக் கொண்டார்களே தவிர, தமிழர் களுக்கு ஒரு பயனும் கிடையாது. 

தலைவிதியை ஓட ஓட விரட்டிய இயக்கம்!

நீதிக்கட்சி, திராவிடர் இயக்கங்கள் தோன்றித்தான் சிறுகச் சிறுக இந்நிலையை மாற்றியது.‌ 1912 இல் “சென்னை அய்க்கிய சங்கம்” என்கிற அமைப்பின் மூலம் முதியவர்களுக்கும் கல்வி வழங்கிய திட்டம் இருந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச் சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடை முறையில் இருந்தது. 

காலையில் படி – கடும்பகல் படி

மாலை இரவு பொருள்படும்படி   

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டுமப்படி

கல்லாதவர் வாழ்வதெப்படி? 

என்று தம் கவிதைகளின் மூலம் கல்வியை உயர்த்திப் பிடித்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். 

மம்சாபுரம் அருகேயுள்ள எனது சொந்தக் கிராமத்தில் ஒரு நண்பர் அய்.ஏ.எஸ்., முடித்துவிட்டு இரயில்வேத் துறையில் பெரும் பொறுப்பில் இருக் கிறார். அதேபோன்று மற்றொரு நபர் திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருக்கிறார்.

 “பிறக்கும் போதே நீ கூலி வேலைதான் செய்ய வேண்டும்; அதுதான் உன் விதி”, என்றார்கள். அந்த விதியை விரட்டி அடித்தது திராவிடர் இயக்கம் தான்! படித்து முடித்து வந்தால் பாராட்டு விழாவே நடத்துவார்கள். பெற்றோர் களுக்கும் சிறப்பு செய்வார்கள். இந்த மண்ணில் கல்வி வளர்ந்த கதையெல்லாம் பெரும் வரலாறு!

சாப்பிட அனுமதி இல்லையே!

1916 வரை உணவகங்களில் சாப்பிடு வதற்கு ஜாதி கேட்டார்களே? “பார்சல்” வேண்டும் என்றால் எட்ட நின்று கேட்க வேண்டும். பார்சலை தூர நின்று தூக்கி எறிவார்கள். பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களுக்கு ஒரு சாமியார் துணியை தூக்கி வீசுவார். காணொலியில் பார்த்தோம். இன்றே இப்படி இருக்கும் போது, நூறாண்டுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? அதே 1916ஆம் ஆண்டு டாக்டர் நடேசனார் அவர்கள் திருவல்லிக்கேணி, அக்பர் சாயபு தெருவில் திராவிடர் சங்க உணவு விடுதி ஒன்றையும் திறந்து வைத்தார். திராவிடர் இயக்கங்கள் செய்த சாதனை கள் அவ்வளவு எளிதல்ல!

மகளிர்க்கு மரியாதை!

இன்றைக்குத் தேர்தல் வந்துவிட்டால் பெண்களிடம் சென்று, இரு கைக்கூப்பி வாக்குகள் சேகரிக்கிறார்கள். ஆனால், 1921-க்கு முன்னர் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. பஞ்சமர்கள் பேருந்தில் பயணம் செய்ய முடியாது. அனைத்து மக்களையும் ஏற்றா விட்டால் பேருந்தின் உரிமை ரத்து செய்யப்படும் என அறிவித்ததன் மூலம் இந்த ஜாதிக் கொடுமை தீர்ந்தது. 10 வயதிற்கு உட்பட்ட 10 ஆயிரம் கைம் பெண்கள் இருந்ததாக வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. 

இன்றைக்கு அந்த நிலையெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது. பெண் கல்வி உயர்ந்த இடத்தில் இருக்கிறது. காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் கையில் கைத்தடியும், துப்பாக்கியும் கொண்டு அதிகாரமும், துணிச்சலும் பெற்றுள் ளார்கள். 

உலக வரலாற்றில் சுயமாகச் சிந்தித்து, கருத்துகளை வளர்த்தெடுத்து, அதில் வென்று காட்டிய தலைவர் தான் தந்தை பெரியார்! நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க வரலாறுகளை மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும்”, எனப் பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு பேசினார்.

தலைப்பும் வகுப்பும்!

தொடர்ந்து தந்தை பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி, பெண்ணுரிமையின் பேரிலக்கணம் பெரியார் எனும் தலைப் பில் உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா, பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புகள் எனும் தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன், வாழ்வியலே பெரியார் எனும் தலைப்பில் எழுத்தாளர் வி.சி.வில்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் எனும் தலைப்பில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மந்திரமா? தந்திரமா? ஓர் அறி வியல் விளக்கம் எனும் தலைப்பில் ஈட்டி கணேசன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.

முன்னதாகத் தொடங்கிய நிகழ்வில் மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப் பினர் வானவில் வ.மணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்டப் பகுத் தறிவாளர் கழகத் தலைவர் பெ.த.சண்முக சுந்தரம், நகர்மன்ற துணைத் தலைவர் பா.அசோக், காப்பாளர் அ.தங்கசாமி, மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.அழகர், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சு.பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி தொடக்க வுரை ஆற்றினார்.

பங்கேற்பு! 

நிறைவாகப் பயிற்சிப் பட்டறையின் நோக்கம், அதற்காக உழைத்த தோழர் களின் சிறப்புகளை கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சுட்டிக் காட்டி பேசினார்.  பங்கேற்ற 41 மாணவர் களுக்கும் சான்றிதழ் மற்றும் உண்மை இதழ் வழங்கப்பட்டது. சிறப்பாகக் குறிப் பெடுத்த மாணவர்களுக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்டன.

நிகழ்வில் சிவகாசி மாநகரச் செயலாளர் நரசிம்மன், அருப்புக்கோட்டை நகர இளைஞரணி தலைவர் திருவள்ளுவன், அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் செல்வராசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் காதர், மாவட்ட இளைஞரணி தலைவர் அழகர்,  மதுரை மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *