பெங்களூரு, ஜன.28- அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 22 ஆம் தேதி ராமன் சிலை நிறுவப்பட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வுகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று குழந்தை ராமன் சிலையை நிறுவினர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்காக 11 நாட்கள் கடுமையான விரதம் இருந்த அவர் கட்டலில் வெறும் போர்வையுடன் படுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ராமன் கோவில் விழா முடிந்ததும் அர்ச்சகர் தீர்த்தம் கொடுக்க அதனை குடித்து தனது நோன்பை முடித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் விரதம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கருநாடக மாநிலத்தின் மேனாள் முதலமைச்சருமான வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கும் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கும் அவர் “நரேந்திர மோடியின் விரதம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக என்னுடைய மருத்துவரிடம் பேசினேன். அவர் 11 நாட்கள் ஒருவரால் விரதம் இருக்க முடியாது என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ராமன் கோவில் பிரதிஷ்டை நிகழ்வுக்காக மோடி 11 நாட்கள் விரதம் இருந்ததில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஒருவர் விரதம் இருக்காமல் கருவறைக்குள் நுழைவது சாஸ்திரங்களுக்கு எதிரானது” எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த கருத்துகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.