– தந்தை பெரியார்
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் – நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும் ஏற்படுத்திவிடுவேன் என்பது பொருளாகப் பேசியிருந்ததை சுதேச மித்திரனில் உள்ளபடி ஜூலை 30ஆம் தேதி குடிஅரசில் எடுத்து எழுதி அதைப்பற்றிய நமது கருத்தையும் வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த வாரத்தில் (6.8.1939) தோழர் சத்தியமூர்த்தியார் ஸ்தாபிக்க முயற்சிக்கும் ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? அதன் கால ஒழுக்கம் என்ன? நீதி என்ன? என்பவைகளைப் பற்றியும் எழுதிவிட்டு அத்தலை யங்கத்தின் முடிவில் அவைகளுக்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் உள்ள வாசகங்களைப் பின்னால் எடுத்துக்காட்டுவோம் என்றும் எழுதி இருந்தோம்.
அது பல காரணங்களால் சென்ற வாரம் எழுதத் தவறிவிட்டதால் பல தோழர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்ததாக எழுதி இவ்வாரம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனதுபற்றி சிலவற்றை மாத்திரம் இவ்வாரம் குறிப்பிடுகிறோம்.
ராமன் பிறப்புக்குக் காரணங்கள்
ராமாயண ஆரம்பத்திற்குக் காரணம் காட்டும் போதே ராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்ததாகவும், மகாவிஷ்ணு அத்தவத்திற்கு இரங்கி, தான் தசரத ராஜனுக்கு மகனாகப் பிறந்து ராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் அரசாண்டுவிட்டு, பிறகு தேவலோகத்திற்கு வருவதாக வாக்களித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மகாவிஷ்ணு அவதாரமெடுத்தற்குக் காரணம் ராவணனைக் கொல்வதற்கு மாத்திரம்தான் என்று இருக்குமானால் ராவணனை ஏன் கொல்லவேண்டும்? ராவணன் என்ன குற்றம் செய்தான்? என்பவைகளைப் பற்றி முதலில் ஆராயவேண்டியது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், மகாவிஷ்ணு ராமனாகப் பிறப்பதற்குக் காரணம் மற்றொன்று கூறப்பட்டிருக்கிறது. அதுதான் ராமாயண ஒழுக்கத்திற்குப் பொன்மதில் அரண் என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.
அது என்னவெனில், மகாவிஷ்ணுவானவர் ஒருகாலத்தில் பிருகு மகரிஷியின் பத்தினியைக் கொன்று விட்டாராம். அதற்காக அந்த ரிஷி கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கி, “நீ என் மனைவியைக் கொன்றுவிட்ட கொலை பாதகனானதால் நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இழந்து சீரழிய வேண்டியது” என்று சபித்து விட்டாராம். அதனால் விஷ்ணு ராமனாகப் பிறந்து தனது மனைவியை இழந்து துன்பப்பட்டாராம். இது வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 51ஆம் சருக்கத்தில் இருக்கிறது.
மகாவிஷ்ணு மனிதனாகப் பிறந்தது மனைவியைப் பறிகொடுத்துத் தவித்ததற்கு ராமாயணத்தைவிடப் பழைமையானதும் முக்கியமானதுமென்று கருதப் படுவதாகிய கந்த புராணத்தில் மற்றொரு காரணம் கூறப்பட்டிருக்கிறது. அது என்னவெனில் மகாவிஷ்ணு வானவர் சலந்தராசுரன் மனைவியாகிய பிருந்தை என்பவள் சற்று அழகுடையவளாக இருந்ததால் அவளை எப்படியாவது சேரவேண்டுமென்று கருதிச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாராம். ஆனால், அவ்வசுரன் இடம் கொடுக்காமல் காவல் இருந்ததால் முடியாமல் போய்க் கடைசியாக அவ்வசுரன் சாகும் படியாக ஆன பின்பு அவ்வசுரனுடைய உடலுக்குள் புகுந்துகொண்டு புருஷன் மாதிரியாகவே இருந்து பிருந்தையை அனுபவித்து வந்தாராம். சில நாட்கள் விஷ்ணுவிடம் அனுபவித்த பின்பே அந்த கற்புக்கரசி யாகிய பிருந்தை இவன் தன் புருஷனல்ல, மகாவிஷ்ணு என்று அறிந்து உடனே மகாவிஷ்ணுவை “ஓ விஷ் ணுவே! நீ என்னை எனது இஷ்டமில்லாமல் ஏமாற்றி வஞ்சித்துப் புணர்ந்துவிட்டதால் உன் மனைவியை ஒருவன் வஞ்சனையால் எடுத்துப் போகக்கடவது” என்று சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாய் மனிதராகப் பிறந்து மனைவியை இழந்து துன்பப் பட்டார் என்றும் மேல்படி கந்த புராணம் தக்க காண்டம் 23ஆம் அத்தியாயத்தில் இருக்கிறது.
மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்த பெருமைக்குக் காரணம் மேற்கண்ட இரண்டு மாத்திரமல்லாமல் 3ஆம் காரணமும் ஒன்று இருக்கிறது.
அதாவது, ஒரு பொல்லாத வேளையில் மகா விஷ்ணு மனித உடம்போடு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும், அதுசமயம் பிருகு ரிஷி முதலியவர்கள் அவரைக் காணச் சென்றதாகவும், வேறு சிலர் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில்கூட தான் புணர்ச்சியை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே அவர்களுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் கோபித்து விஷ்ணுவைப் பார்த்து “ஓ மானம், வெட்கம் இல்லாத விஷ்ணுவே! நீ இம்மாதிரி இழிவான காரியம் செய்ததற்காக நீ உன் மனைவியை இழந்து வருந்தக்கடவை” என்று சபித்ததாகவும் சொல்லப் படுகிறது.
இந்த உண்மை சிவரகசியம் மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலும், அது மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.
ஆகவே, ராமராஜ்ஜியத்தின் மூலபுருஷரும் கடவுள் அவதாரமாக வந்தவருமான ராமனின் பிறப் புக்கே இம்மாதிரியான காரணங்கள் இருக்குமானால் இந்த இப்படிப்பட்ட ராமனுடைய அல்லது கடவுளி னுடைய ஆட்சி ராஜ்ஜிய பாரம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ரிஷி ஜாதிகள் யோக்கியதை
ரிஷிகள் மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் அசுரர்களுடைய மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் எடுத்துக் காட்டப்பட்டதில் இருந்தே ரிஷி ஜாதிகளின் யோக்கியதையும், அசுரர் ஜாதியினுடைய யோக்கி யதையும் நன்றாய்த் தெரிவதோடு கடவுள் ஜாதி களுடைய யோக்கியதையும் பளிங்குபோல் விளங்குகின்றது.
என்னவெனில், ரிஷி பத்தினியை அவள் புருஷ னுக்குத் தெரியாமல் மாத்திரம்தான் கலந்ததாகவும், ஆனால் ரிஷிபத்தினிகள் சம்மதித்து விஷ்ணுவுடன் கலந்து இன்பம் அனுபவித்ததாகவும் விளங்கும்படியாக இருக்கிறது. அசுரர்களு டைய மனைவிகளிடத்தில் அந்த ஜபம் செல்லவில்லை. புருஷன் சாகும்படியாக ஆனபின்பே அதுவும் புருஷன் போல் வேஷம் போட்டு அசுர ஸ்திரீயை ஏமாற்றித்தான் சேர முடிந்ததே ஒழிய மற்றபடி ரிஷி பத்தினிகள் மாதிரி சம்மதம் பெற்றுச் சேர முடியவில்லை. அன்றியும் ரிஷி பத்தினிகள் கற்பழிக் கப்பட்டதற்கு ரிஷிகளால் தான் மகாவிஷ்ணுக்கு சாபம் கொடுக்கப்பட்டதே தவிர, ரிஷி பத்தினியால் சாபம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அசுர ஸ்திரீகளோ வென்றால் தாங்களே விஷயம் தெரிந்த உடனே சாபம் கொடுத்து தண்டிக்கத் தக்க சக்தி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அன்றியும் கடவுள்ஜாதி ஸ்திரீயான திருமகள் அந்நிய புருஷர்கள் வந்து பார்க்கும்போதுகூட கலவி யில் இருந்து நீங்காமல் கலவிசெய்துகொண்டே இருக்கச் சம்மதித்து இருந் தாள் என்றால் அவர்களது தைரியத்தை மெச்ச வேண் டியதென்றாலும் அந்த ஜாதி எவ்வளவு இழிவுக்கும் சம் பந்தப்படக்கூடியது என்பது விளங்காமல் போகாது.
இந்த உண்மைகள் இயற்கைக்கு மாறானவை என்றாலும் எப்படியோ இருக்கட்டும் நடந்தததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் விவகரிக்க வரவில்லை.
பொதுவாகவே இராமா யணம் மாத்திரமல்லாமல் மற்றும் அதுபோன்ற – கடவுள் சம்பந்தமான சைவ, வைணவ புராணங்கள் பொய்யென்றும், அறிவுக்குப் பொருத்தமில்லாத இழிவான ஒழுக்க ஈனமான விஷ யங்கள் கொண்ட காட்டு மிராண்டிக் காலத்து கட்டுக் கதைகள் என்றும் சொல்லி வருகிறோம். ஆனதால் அவற்றின் உண்மையைப் பற்றியும் வாதாட விரும்ப வில்லை.
ஆனால், தோழர் சத்தியமூர்த்தியார் இப்படிப் பட்ட கதையில் உள்ள இப்படிப்பட்ட சம்பவங்களில் சிக்குண்டவனாகக் காட்டப்பட்டுள்ள ஒரு பாத்திர மாகிய ராமன் என்பவனுடைய பெயரால் இருந்து வரும் கதையில் உள்ள ஒழுக்கங்களையும், நீதி களையும் கொண்ட ஒரு ராஜ்ஜிய பாரத்தை – ராஜ நீதியை இந்தியர்களுக்கு என்பதில் வடநாட்டாருக்குச் சொல்வதைப் பற்றி நமக்கு இப்போது கவலை இல்லை. தென்னாட்டாருக்கு – திராவிடர்களுக்கு – தமிழ் நாட்ட வருக்கு – தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவதும் அதற்காகவே இந்தியையும் – சமஸ் கிருதத்தையும் தமிழ் மக்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதும் இந்தக் காரியத்திற்காகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்திய அரசாட்சிக்கு சர்வாதிகாரியாக ஆகவேண்டும் என்றும் ஆசைப் படுவதாகச் சொல்வதுமாயிருந்தால் அதைத் தமிழ் மக்கள் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறோம்.
ஆரியர் வேறு தமிழர் வேறு என்பதற்கும்; ஆரியநாடு வேறு தமிழ்நாடு வேறு என்பதற்கும் இந்த புராண இதிகாசக் கலைகளே போதாதா என்று கேட்கின்றோம்.
இந்தியாவென்பது எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தேசத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பிடும் பெயராகாது என்று முன்னம் பல முறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டுக்குப் பரத கண்டம் என்றோ, பாரததேசம் என்றோ, பாரதத்தாய் என்றோ சொல்லுவது சிறிதும் பொருத்தமற்றது என்பதோடு ஒரு தமிழ் மகன் வாயில் தமிழ் நாட்டைப் பாரதநாடு அல்லது பாரததேசம் என்று சொல்லப் படுமானால், “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் அய்யப்படும்” என்ற திருவள்ளுவரின் திருவாக்குப்படி அப்படிப்பட்டவரது குலத்தைப்பற்றிச் சந்தேகப்பட வேண்டியதைத் தவிர வேறு பரிகாரமில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மக்கள் திராவிட மக்கள் ஆண்ட நம் தமிழ் – திராவிட நாட்டை என்ன காரணத் திற்கு ஆக ஒருவன் பரதன் (ஆரியன்) ஆண்டதாகச் சொல்லி இதை பரதநாடு என்று சொல்லவேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டிக்கொள்கிறோம்.
தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர் மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக்கொள்ளுகிறோம்.
குடிஅரசு – தலையங்கம் – 20.08.1939