மன்னர்கள்- பார்ப்பனர்கள்- பசுக்கள் இவர்களுக்கு சூத்திரர்கள், பெண்கள் அடிபணிந்து கிடக்கவேண்டும் என்கிறது துளசிதாஸ் ராமாயணம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை
மன்னர்கள், பார்ப்பனர்கள், பசுக்கள் இவற்றிற்கு சூத்திரர்கள், பெண்கள் அடிபணிந்து கிடக்க வேண்டும் என்று துளசிதாசர் ராமாயணமான ‘ராம்சரித் மானஸ்’ கூறுகிறது. வரக் கூடிய மக்களவைத் தேர்தலில் மக்கள் ஏமாந்தால், மீண்டும் ராமராஜ்ஜியம்தான் வரும் என்று எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பிரேம்நாத் பஸாஸ் எழுதிய “ராமராஜ்ஜிய நிழலில் இந்தியா” – என்ற நூலில் உள்ளபடி….
* கவிதை நடையில் புனையப்பட்ட ராமாயணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதியது. கி.மு. ஆறாவது நூற்றாண்டில், ராமனின் பிறப்புக்கும் முன்பாக எழுதப்பட்டதாக கூறப்படுவது இந்தப் படைப்பு. மற்றொன்று கோஸ்வாமி துளசிதாஸ் புனைந்த (கி.பி.1554-1607), ‘ராம்சரித்மானஸ்’ என்னும் தலைப்பில் உள்ள ராமாயணம். இரண்டுமே ஒரே கதையைத்தான் கூறுகின்றன.
துளசிதாஸ் ராமாயணம்
என்ன கூறுகிறது?
* துளசிதாஸ் புனைந்த ராமாயணத்தில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்:
உலகில் வாழும் எல்லா ஆண்களும், பெண்களும் பார்ப்பனர்களுக்குத் தாராள மனதுடன் சேவை செய்ய வேண்டிய பணியாளர்களே!
சிறீராமர் கோடிக்கணக்கான அஸ்வமேத யாகங்கள் நடத்தி பார்ப்பனர்களுக்கு பல பரிசுகள் வழங்கியுள்ளார். வேத பாரம்பரியங்களை ஆதரித்து பண்டைய தர்மத்தை நிலைநாட்டியவர் அவர்.
பார்ப்பனர்கள், பசுமாடுகள்,
மன்னர்களைப் போற்றவேண்டும்!
*சமத்துவத்திற்கு எதிரான வர்ணாஸ்ரமத்தை கண் மூடித்தனமாக ஏற்றுக்கொண்ட படைப்பு ‘ராம்சரித் மானஸ்’. ஜாதிகளின் நான்கு படிநிலையமைப்பை அது அங்கீகரிக்கிறது. எண்ணற்ற தாழ்த்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட, அறியாமையில் மூழ்கிய தீண்டத்தகாத மனிதர் களையெல்லாம் வர்ணாஸ்ரமம் சிறுமைப்படுத்தியுள்ளது. முற்பிறவி, மறுபிறவி என்னும் சம்சார சுழற்சியை அது ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் கர்மவினை என்பதும் அதற்கு ஏற்புடையதாகும். ‘‘முற்பிறவியில் மனிதர்கள் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப மறுபிறவியில் அவர் கள் பயன்பெறுவதும், தண்டிக்கப்படுவதும் நிகழ்ந்தே தீரும்” என்கிறது வர்ணாஸ்ரமத்தின் கர்மவினை. இந்த விதியை மனிதர்களால் வெல்லவே முடியாது என்று அச்சுறுத்துகிறது வர்ணாஸ்ரமம்.
* எதேச்சதிகார கொடுங்கோல் ஆட்சியைக்கூட வரவேற்று ஆதரிக்கிறது ‘ராம்சரித்மானஸ்’ என்னும் துளசிதாஸர் ராமாயணம். “மானுடத்தின் கடமையே ஆட்சியாளர்களை மகிழ்வித்து அடங்கி நடப்பதுதான்” என்று அது வலியுறுத்துகிறது. மனிதநேயமற்ற சர்வாதிகாரிகளை ஆதரிக்கும் படைப்பு அது. ‘‘ஆட்சியில் உள்ள சர்வவல்லமை படைத்த அதிகாரி தவறிழைத்தாலும் மக்கள் அவருக்குத் தலைவணங்க வேண்டும்” என்கிறது. ‘‘எதேச்சதிகாரிகள் செய்வது சரியா தவறா என்று கூட மக்கள் பார்க்காமல் அடிபணிய வேண்டும்” என்கிறது வர்ணாஸ்ரமத்தை ஆதரிக்கும் துளசிதாஸரின் ராமாயணம்.
*எதேச்சதிகார மன்னர்களைத் தொடர்ந்து பார்ப்பனர்களையும், பசுமாட்டையும் போற்றிப் புகழ்கிறது ‘ராம்சரித்மானஸ்’ -முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைவிட பார்ப்பனர்கள் மற்றும் பசுக்களைப் பற்றி மிக அதிகமாகப் பேசுகிறது ‘ராம்சரித்மானஸ்’ ராமாயணம்!
பார்ப்பனர்களின் சாபம் கொடுமையானது!
* பார்ப்பனர்கள் ஆட்சியாளர்களால் கீழ்கண்டவாறு இந்தப் படைப்பில் கவுரவிக்கப்பட்டுள்ளனர்:
1. பார்ப்பனர்கள் எந்தவிதமான அடக்குமுறைக்கும் ஆளாகக்கூடாது.
2. பார்ப்பனர்களுக்கு தாராளமாக தானம் வழங்குங்கள். அளவில்லாமல் வழங்குங்கள். வயிறார அவர்கள் உண்ண வழி செய்து அவர்களை வணங்கி வழிபடுங்கள்.
3. பார்ப்பனர்களின் சாபம் கொடுமையானது. அதிலிருந்து எவரும் தப்ப முடியாது.
4. தார்மீகச் சடங்குகள் செய்யும் பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய தொகையை காணிக்கையாக வழங்குங்கள்.
சிறீராமர் இவ்வாறு சொல்வதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது.
* ‘‘பார்ப்பனர்களை வெறுப்பவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் வழிபட்டு வரும் பிரம்மா, சிவன் போன்ற மற்ற கடவுள்களோடு விசுவாசத்துடன் பார்ப்பனர்களும் ஆராதிக்கப்பட வேண்டியவர்களே.
இந்த உலகில் மனிதர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு நல்ல காரியம் இதுதான். பார்ப்பனர்களின் காலடியை வணங்குவதுதான் அது. இதற்கு இணையான நல்ல செயல் வேறெதுவுமில்லை. அதைப் போலவே முனிவர்கள் மற்றும் துறவிகளின் காலடிகளையும் வணங்கவேண்டும். கடவுள்கள் இதனால் மகிழ்ச்சியடைவது உறுதி!’’
துளசிதாசர் காலத்திலேயே எதிர்ப்பு
*காலப்போக்கில் ஏற்பட்ட சமூக மாற்றங்களால் துளசிதாஸுக்கு எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. அவர் இவ்வாறு புலம்பும் நிலையும் நாளடைவில் ஏற்பட்டது.
“சூத்திரர்கள் பார்ப்பனர்களுக்கே பாடம் புகட்டத் துவங்கிவிட்டார்கள். அவர்களின் அறிவை தம்மிடையே இவர்கள் வளர்க்கப் போகிறார்களாம். என்ன வினோதம்! சூத்திரர்கள் பலர் பூணூல் அணியவும், தானங்களை ஏற்கவும் கூட ஆரம்பித்துவிட்டார்களே!’’ -என்று புலம்பினாராம் துளசிதாஸர்.
மதம் சார்ந்த விஷயங்களில் காணப்படும் “அவதாரம்’’ அரசியல் உலகில் ஒரு எதேச்சதிகாரியாக பிரதிபலிக்கிறது. அமானுஷ்ய அவதாரங்களாக மதங்களில் சித்தரிக்கப்படுபவர்களை நம்புகிற பாமரனால் அரசியல் உலகில் உலாவரும் சர்வாதிகாரிகளை அவ்வளவு எளிதில் நிராகரித்துவிட முடியாது. அது சரியான புரிதல் இல்லாததையும், தெளிவற்ற சிந்தனையையும் மட்டுமே வெளிப்படுத்தும்.
*பார்வதி பரமசிவன் திருமணம் பற்றி துளசிதாஸர் இவ்வாறு எழுதியுள்ளார்.
“ஒ பார்வதி! நீ சிவனின் காலடியை வணங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இதுவே பெண்ணாகப் பிறந்தவளின் தர்மம்’’ என்றாராம் பார்வதியின் தந்தை- “இருமுறை பிறந்த “த்விஜா’’ர்களை (பார்ப்பனர்கள்) வழிபட்டால் கடவுள் மகிழ்ச்சியடைவார். பார்ப்பனரை ஒருபோதும் எவரும் தூஷிக்கலாகாது. கடவுளுக்குச் சமமானவன் ஒவ்வொரு பார்ப்பனரும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.’’
“பார்ப்பனரை நிந்திப்பவன் நரகங்கள் பலவற்றில் துன்பப்படுவான். மறுபிறவியில் அவன் ஒரு காக்கையாகவே பிறப்பான்.’’
என்றெல்லாம் ராமன் கூறுவதாக ‘ராம்சரித் மானஸ்’ ராமாயணத்தில் துளசிதாஸர் எழுதியுள்ளார்.
*“தாழ்ந்த ஜாதி மக்கள் சோம்பல் மிக்க மூடர்கள், அறிவிலிகள், இழிவுப் பிறவிகள். அவர்களைச் சமூகம் புறக்கணிக்கும். வேதங்கள் அவர்களை சிறுமைப்படுத்துகின்றன’’ என்றும் துளசிதாஸர் அதில் எழுதியுள்ளது கவனிக்கப்படவேண்டியது.
தாழ்த்தப்பட்டவர்களே தங்களைப்பற்றி
இழிவாகக் கூறினார்களாம்!
*தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஒருவர் தங்கள் வகுப்பினர் பற்றியே கீழ்கண்டவாறு கூறியதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது:
“நாங்கள் எல்லோரும் திருடர்கள், மூடர்கள், ஜடப்பிறவிகள், மூர்க்கமானவர்கள், உண்மையைக் காப்பாற்றாத இழிவுப்பிறவிகள், பாதகச் செயல்கள் புரியும் பண்பற்ற மனிதர்கள்.’’
*“அறிவாற்றலும் நற்பண்புகளும் நிறைந்தவனாகவே ஒரு சூத்திரன் இருந்தாலும் அவன் மரியாதைக்குரியவன் அல்ல’’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
*“பிறப்பிலேயே ஒரு பெண் மடமை நிறைந்தவள். எதையும் புரிந்து கொள்ள முடியாத அறிவிலியாகவே ஒவ்வொரு பெண்ணும் பிறக்கிறாள்’’ என்று எழுதுகிறார் துளசிதாஸர்.
பெண்ணாகப் பிறப்பவர்கள் கணவனுக்கு சேவகம் செய்யவே கடமைப்பட்டவர்கள் என்பதை உணர்ந்த பார்வதியின் தாயார்-
“ஏன்தான் பிரம்மன் பெண்களைப் படைத்தானோ?’’ என்று வேதனையுடன் புலம்பினாளாம்.
பெண்கள் சுயமாகச் சிந்திப்பது பாவமாம்!
*‘ராம்சரித்மானஸ்’ ராமாயணத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ள அவலத்திற்கு ஓர் அளவே இல்லை எனலாம்.
“பெண்களைக் கடவுளால்கூட புரிந்துகொள்ள முடியாது. உலகின் எல்லா கொடுமைகளுக்கும் பாவங்களுக்கும் பெண்களே மூல காரணம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
* அதில் முற்றும் துறந்த முனிவர்களைப் பொறுத்தவரை பெண்கள் செய்யும் மன்னிக்கவே முடியாத பாவம் என்று எதைக் குறிப்பிடுகிறார் அவர்?
“பெண் விடுதலை கோருவதும் சுயமாகச் சிந்திக்கும் உரிமை கேட்பதும் மன்னிக்க முடியாத பாவமாம்!’’
உலக மக்களின் எல்லா துன்பங்களுக்கும், அவலங்களுக்கும் பெண்களே மூலகாரணம்’’ என்கிறது ‘ராம்சரித்மானஸ்’ ராமாயணம்.
‘‘பிறப்பிலேயே பெண் தூய்மையற்றவள். கணவனுக்கு பணிவிடைகள் செய்வதன் மூலம்தான் அவள் தூய்மையடைகிறாள்’’ என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
*துளசிதாஸரின் வாழ்க்கைக் காலத்திலேயே பெண்களைப் பற்றிய முற்போக்கான கருத்துகள் வரத்தொடங்கின. இது அவருக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பெண்களுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள் அவருக்கு ஆத்திரமூட்டியுள்ளன. அதன் விளைவாக அவர் இவ்வாறு புலம்பியுள்ளார்:
துளசிதாஸரும் – ஆண் ஆதிக்கமும்!
“குரங்காட்டி குரங்கை ஆட்டுவிப்பது போல் ஆண்கள் தங்கள் மனைவிமாருக்கு கட்டுப்பட்டுள்ளார்களே! விதவைகள் புத்தாடைகள் அணிந்து அலங்காரம் செய்துகொள்கிறார்கள்.’’ என்று புலம்பியுள்ளார் துளசிதாஸர்.
பல ஆண்டுகள் ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்த சீதையை ராமன் அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னதில் வியப்பேதுமில்லை. ஓர் அவதாரப் புருஷனாக விளங்கிய ராமனுக்கு சீதை ஒரு பாவமும் அறியாதவள்; தவறிழைக்காதவள் என்பது எப்படித் தெரியாமல் போயிற்று என்பது நம் கேள்வி. ஆணாதிக்கத்தை எதிர்க்க துளசிதாஸருக்கே துணிவில்லாமல் போயிற்று எனலாம். அவருடைய வகுப்பினரே பாரம்பரியப் பெருமையில் ஊறிக்கிடந்த மதவெறியர்கள். எனவே அவர்கள் நடுவில் தன் புகழ் மங்கக்கூடாது என்ற அச்சம் அவருக்கு இருந்துள்ளது.
* வரதட்சணைக் கொடுமை நிலவி வந்ததற்கும் பல சான்றுகள் ராம்சரித்மானஸில் உள்ளன. பெற்றோர் பெண்களைச் சுமையாகக் கருதிய காலம் அது.
சிவனைத் திருமணம் செய்துகொள்ள வரதட்சணை
சிவன்- பார்வதி திருமணமாக இருந்தாலும், ராமர்- சீதை விவாகமாக இருந்தாலும் வரதட்சணை கட்டாயமாக இருந்துள்ளது. பெண்களைப் பெற்ற ஏழைப்பெற்றோர் வரதட்சனை தந்தே ஆக வேண்டும் என்ற அவலநிலை அப்போது இருந்துள்ளது. போதுமான வரதட்சணை தரப்படாவிட்டால் பெண்கள் புகுந்த வீட்டில் கொடுமைகள் அனுபவித்து வந்தனர். பார்வதியை சிவன் மணந்தபோதும் பார்வதியின் தந்தை தட்சண் மிகப்பெரிய அளவில் வரதட்சணை தந்தாராம். ரதங்கள், பசுக்கள், நகைகள், பட்டாடைகள், உணவு தானியங்கள், வெள்ளி, தங்கப் பாத்திரங்கள் இவையெல்லாம் வாகனங்களில் ஏற்றப்பட்டு பல பணியாளர்களுடன் அனுப்பப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.
வரும் தேர்தலில் மக்கள் ஏமாந்தால் மீண்டும் ராமராஜ்ஜியமே, எச்சரிக்கை!
ராமனை சீதை மணந்தபோதும் ஜனகர் ஏராளமான பொருட்களை சீதனமாக வழங்கினாராம்.”
– – “The shadow of Ram Rajya” – Premnath Bazaz.
.மேலே காட்டிய துளசிதாஸரின் ராமாயணமான ‘‘ராம் சரித் மானஸ்” எழுதி வெளி வந்தது – சமஸ்கிருத வால்மீகி ராமாயணத்திற்கு பல நூற்றாண்டுக்குப் பின்னரே! எந்தெந்த காண்டத்தில் மேற்காட்டியவை இடம் பெற்றுள்ளன என்னும் ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.
கம்பனும் – துளசிதாஸரும், ஒருவர் தமிழில் – தெற்கில் அதே கருத்தைப் பரப்பவும், துளசிதாஸர் ஹிந்தி ராமாயணமாகவும் எழுதி பரப்பப்பட்டது!
கம்ப ராமாயணத்தில் உத்தரகாண்டமே எழுதப்படாமல் மறைக்கப்பட்டது.
சூத்திர சம்புகன் கொலையெல்லாம் அதில் வர வேண்டியதாகும் என்பதால் கம்பனே அதை அப்படியே மறைத்து விட்டார்!
இது வரும் தேர்தலுக்குப்பின் – வாக்காளர்கள் ஏமாந்தால், ஏற்படுவது ராமராஜ்யம் என்ற பெயரால் பச்சை பார்ப்பன இராஜ்ஜியமே என்பதை வாக்காளர்களுக்குப் புரியவைக்கத் தவறினால் மீண்டும் பழைய நிலை தானே?
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.1.2024