நேர்காணல்: வி.சி.வில்வம்
ஒரு பெண்மணி, அவரின் பெயர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, வயது 81. அவரின் வாழ்விணையர் 23 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். கவுதமன், சித்தார்த்தினி, அசோக் லெனின் லிங்கன் என்பது அவர்களின் பெயர்களாகும்!
அதிர்ச்சி அடையாதீர்கள் தோழர்களே… எழுதுவதற்கே விரல் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த 3 பிள்ளைகளும் தற்சமயம் உயிருடன் இல்லை. ஆக வாழ்விணையர், பிள்ளைகள் அனைவரையும் இழந்த நிலையில் ஒரு பெண்மணியின் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்!
ஆனால், அவரிடம் நேர்காணல் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது என்றால், அந்தளவிற்குத் தம் வாழ்க்கையைச் சமூகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்! “என்னுடைய இந்த உயிரோட்டத்திற்கு இந்த இயக்கமும், என் அண்ணனாக இருக்கிற ஆசிரியர் அவர்களும் முக்கியக் காரணம்” என்கிறார். எல்லோருக்கும் முன்னோடியாக வாழும் அவரின் வாழ்க்கை வரலாற்றை நாமும் வாசிப்போம் வாருங்கள்!
உங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள் அம்மா!
என் பெயர் பி.என்.ஆர் அரங்கநாயகி. இணையர் பெயர் பி.என்.இராமசாமி. எனது சொந்த ஊர் துறையூர். எனது பெற்றோர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். எனினும் எனது சித்தப்பா கிருஷ்ணசாமி, நரசிம்மன் ஆகியோர் இயக்கச் சிந்தனையில் இருந்தனர். எனக்கு 7 வயது இருக்கும் போது, “தமிழர் உணவு விடுதி” என்கிற பெயரில் கடை ஒன்றைத் திறந்தார்கள்.
திறப்பு விழாவிற்குப் பெரியார் வந்திருந்தார்கள். அப்போது அவருடன் ஒரு நாய் ஒன்றும் வந்தது. வண்டியை விட்டு இறங்கியதும் அந்த நாய் ‘குடுகுடுவென’ கடைக்குள் ஓடிவிட்டது. எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர் அப்போது! அந்தக் காலத்திலேயே அந்த உணவகத்தில் எல்லோருக்கும் ஒரே இடம், ஒரே குவளை எனச் சமத்துவமாக நடத்தப்பட்டது. இந்தச் செய்திகளை எல்லாம் அண்மையில் துறையூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கோள் காட்டிப் பேசினார்கள்.
தங்கள் திருமணம் குறித்துக் கூறுங்கள்?
பெற்றோர்கள் ஜாதி, மத நம்பிக்கையில் இருந்தாலும், 1958இல் எனக்கு ஜாதி மறுப்புத் திருமணமே செய்து வைத்தார்கள். இணையர் பி.என்.இராமசாமி அவர்கள் அப்போது ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். திராவிடர் கழகத்தில் இருந்தவர்! எங்களின் முதல் உரையாடலே சுவையானது!
ஆம்! திருமணம் முடிந்து இணையரின் ஊரான தோளூர்பட்டிக்கு மாட்டுவண்டியில் சென்றோம். எங்கள் முதல் பயணம் அதுதான்! அப்போது திராவிடர் இயக்கம், பெண்ணுரிமைக் குறித்தெல்லாம் பேசி வருகிறார்கள். என்னமோ தெரியவில்லை, அந்தக் கருத்துகளில் அன்றே ஈர்க்கப்பட்டு, அடுத்த நாளில் அடிமைச் சின்னமாம் தாலியை அகற்றிவிட்டேன்!
பலத்த எதிர்ப்பு வந்திருக்குமே?
அதுதான் இல்லை. நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், சாதாரணமாக முடிந்து போனது! காரணம் இணையர் பி.என்.இராமசாமி அவர்கள் பெருமதிப்பாக இருந்தவர்! ஆசிரியர் பணி வேறு! ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு எனச் சமூகத்தில் சிறப்பாய் வாழ்ந்தவர். எனவே உற்றார், உறவினர்கள் மத்தியில் பெரிதாக விமர்சனங்கள் எழவில்லை. பெரியார் சொல்வார் அல்லவா! கொள்கையைவிட, ஒழுக்கம் முக்கியம் என்று! அப்படியான சூழலில் அது இரட்டிப்புப் பலம் தருகிறது கொள்கைக்கு!
இயக்க நிகழ்ச்சிகளுக்கு எப்போது செல்லத் தொடங்கினீர்கள்?
திருமணம் முடிந்த சில நாட்களிலே, தொட்டியத்தில் நடைபெற்ற பெரியார் கூட்டத்திற்குச் சென்றோம். எங்கள் ஊரில் இருந்து 7 கிலோ மீட்டர். மிதிவண்டியில் பயணம்! அதனையொட்டி நாமக்கல் கூட்டத்திற்கு 12 கிலோமீட்டர் பயணம்! அதிகபட்சம் சிறீரங்கம் வரையிலும் மிதிவண்டிதான்! பணி மாற்றம் ஆகி, 1962இல் மண்ணச்சநல்லூர் வந்தோம். இப்போது வரை இங்குதான் இருக்கிறேன்!
தங்கள் கல்வித் தகுதி
குறித்துக் கூறுங்கள்?
திருமணத்திற்கு முன்பு இ.எஸ்.எஸ்.எல்.சி முடித்திருந்தேன்.
அப்போது அது 8 ஆம் வகுப்பாகக் கருதப்பட்டது. திருமணம் முடித்த பிறகு 1963இல் தாராபுரத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.பெண் பார்க்க வரும் போதே என் அம்மா, இணையரிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். என் மகள் இப்போது இ.எஸ்.எஸ்.எல்.சி முடித்திருக்கிறார்.
அவர் மேலும் படிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். செவிலியர் அல்லது ஆசிரியர் படிப்பு எங்களின் விருப்பம். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என அம்மா கேட்டபோது, அதுவரை உட்கார்ந்துக் கொண்டிருந்த இணையர், திடீரென எழுந்து, “கண்டிப்பாக நான் உறுதுணையாக இருப்பேன்” எனக் கூறினார்.
அதேபோன்று ஆசிரியர் பயிற்சி முடித்து, மண்ணச்சநல்லூர் தொடக்கப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு எஸ்.எஸ்.எல்.சி படிப்பும் எழுதி, அதையும் முடித்து விட்டேன். அப்போது அது பதினொன்றாம் வகுப்பாகக் கருதப்பட்டது.
அந்தக் காலத்தில் மறக்க முடியாத இயக்க நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?
நிறைய இருக்கிறது! கிராமச் சூழலில் வசித்தாலும் இணையரும், நானும் பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவோம். இருவருமே ஆசிரியராக இருந்த நிலையில், பொருளாதாரம் சற்று பிரச்சினை இல்லாமல் இருந்தது. இயக்க நிகழ்வுகள் என்றால், எனது இணையர் செலவை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்!
1968ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளன்று, திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள மனமகிழ் மன்றத்தில், “பெரியார் சுயமரியாதைக் குடும்பங்கள் விருந்து” என்கிற சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் நாங்களும் கலந்து கொண்டோம்.
தந்தை பெரியார், ஆசிரியர் போன்றோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். ஆட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. ஒருநாள் முழுக்க நடந்த இந்தச் சந்திப்பை அப்போதைய மாவட்டத் தலைவர் டி.டி.வீரப்பா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதேபோல பிச்சாண்டார் கோவில் பி.வி.இராமச்சந்திரன் அவர்கள் (அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் சித்தப்பா) தம்முடைய நெல் வயலை சுத்தம் செய்து, அங்கே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார்கள்.
தந்தை பெரியார் வாகனத்தில் வந்து இறங்குகிறார். அப்போது சற்று தடுமாறிய சூழலில் நானும், எனது இணையரும் இரண்டு பக்கமும் அய்யாவுக்கு அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்தோம். என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு இது!
வயல்வெளியில் நடைபெற்ற அந்த வித்தியாசமான கூட்டத்தில் புலவர் இமயவரம்பன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கலியராஜூலு, துறையூர் மா.பெரியசாமி (து.மா.பெரியசாமி) ஆகியோரும் வந்திருந்தனர். வெளி உலகத்தை அறியவும், கொள்கையைப் பெறுவதற்கும் எனக்கு ஏற்பட்ட பெரும் வாய்ப்புகள் அவை!
இயக்கப் பணிகளில் வெளிப்படையாகச் செயல்பட்டதால், ஆசிரியர் பணிக்கு ஏதேனும் இடையூறுகள் நேர்ந்திருக்குமே?
இணையர் பி.என்.இராமசாமி அவர்கள் தமது 65ஆம் வயதில் மறைவுற்றார்கள். நான் ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றேன். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளேன். நான் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்பது பள்ளியில் அனைவருக்கும் தெரியும். கொள்கை சார்ந்து வெறுப்பு கொண்ட சிலர், என் மீது புகார் மனு அனுப்பினார்கள். கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணையில் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என விடுவிக்கப்பட்டேன். ஆனால் என் மீது புகார் அளித்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
இணையர் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் இயக்க நிகழ்ச்சிகளுக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போது இலால்குடி பெரியார் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆசிரியர் வந்திருந்தார்கள். அப்போது என்னை மேடைக்கு அழைத்து “நல்லாசிரியர்” விருது பெற்றதற்காகப் பொன்னாடை அணிவித்தார்கள். பிறகு அதே மேடையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் என்கிற பொறுப்பையும் கொடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் உங்களோடு பயணித்த தோழர்கள் யார்?
இயக்க நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களில் பெரும்பாலும் கலந்து கொண்டிருக்கிறேன். பாசறை மகளிரணி பொறுப்பாளர், இலால்குடி மாவட்ட மகளிரணி அமைப்பாளர், மாவட்ட மகளிரணி தலைவர் போன்ற பொறுப்புகளில் இருந்துள்ளேன். தற்சமயம் மாவட்ட மகளிரணி காப்பாளர் பொறுப்பில் உள்ளேன்.
திருச்சி, இலால்குடி, கோமாகுடி போன்ற பகுதிகளில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடந்த போது, சொந்தச் செலவில் வேன் பிடித்து 20 மாணவர்கள் வரை அழைத்துச் சென்றிருக்கிறேன். அப்போது மண்ணச்சநல்லூர் அனந்தம்மாள், மா.பா.ஆறுமுகம், ச.கா.அரங்கராசன், நாகப்பர், ஆண்டி அய்யா, கிரேசி அம்மா, வீரமணி, மலர்க்கொடி, வனத்தான், உடுக்கடி அட்டலிங்கம், சுசிலா, வேலு போன்ற தோழர்கள் நிகழ்ச்சிகளுக்குச் சேர்ந்து செல்வோம்!
இதுதவிர எங்கள் வீட்டிற்கு வந்து இறையன், திருமகள், வழக்குரைஞர் அருள்மொழி, அவர்களின் தந்தை அண்ணாமலை, மனோரஞ்சிதம், பார்வதி, ஜக்குபாய், ரெஜினா (பால்ராஜ்), சந்திரமதி, ஷாலினி (இளந்திரையன்), சாலய் இளந்திரையன், ஜேம்ஸ் மேரி, இராஜேஸ்வரி (குடந்தை ஜோசப் இணையர்) போன்ற எண்ணற்ற தோழர்கள் தங்கியுள்ளனர். கிராமப் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்த போது, வீட்டு மாடியில் 20 தோழர்கள் வரை தங்கி பிரச்சாரங்களை மேற்கொண்டனர்!
மறக்க முடியாத நிகழ்வு என்று ஏதாவது இருக்கிறதா?
ஆசிரியர் அவர்களுக்கு 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” கொடுத்தார்கள். அப்போது நானும் சென்றேன். குக்கிராமத்தில் பிறந்து, படிக்க வாய்ப்புக் கொடுத்து, ஆசிரியர், தலைமையாசிரியர் வரை உயர்ந்து, இயக்கமே அரவணைப்பாக இருந்து, என் அண்ணனே ஆசிரியராக, தலைவராகக் கிடைத்து, என் வாழ்விணையர், மூன்று பிள்ளைகளையும் இழந்த நிலையிலும், இன்னும் கருப்புடை அணிந்து, தினமும் விடுதலை வாசித்து உயிர் வாழ்கிறேன் என்றால், இந்த இயக்கம் தான் மறக்க முடியாத என் இதயம், கொள்கை தான் எனது உடல் பலம், தோழர்கள் தான் ஆறுதல், உற்சாகம்!
இப்போதைய மகளிரணியினர்
எப்படி செயல்படுகிறார்கள்?
மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். எங்கள் காலத்தில் சொன்னதை மட்டுமே செய்வோம். இப்போது உள்ளவர்கள் நிறைய சிந்திக்கிறார்கள், கடும் உழைப்பைத் தருகிறார்கள். நல்ல வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. மகளிர் அனைவரும் இணைந்து டில்லி பெரியார் மன்றத் திறப்பு விழாவிற்கு சென்றதை மறக்க முடியாது!
இப்போதைய இயக்க வளர்ச்சி குறித்து தங்கள் கருத்து?
அதில் என்ன அய்யம்! பலப்பல மடங்கு இயக்கம் வளர்ச்சி பெற்றுள்ளது. இளைஞர்கள் ஏராளம் வருகை தந்துள்ளனர். நிகழ்ச்சிகள் நடக்காத நாளே இல்லை என்கிற அளவு தொடர் பிரச்சாரங்கள்! அதேபோல கல்வி நிறுவன வளர்ச்சியும் அபரிதமாக இருக்கிறது. புதிய, புதிய கட்டடங்கள் ஆசிரியருக்குப் பிறகு வானளாவ காட்சி அளிக்கின்றன!
உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும், அப்படி ஒரு செய்தி சொல்கிறேன். விவரம் தெரியாத காலத்தில், தந்தை பெரியாரின் சொந்தப் பிள்ளை தான் ஆசிரியர் கி.வீரமணி என நான் நினைத்ததுண்டு. இன்றைக்கும் இந்த இயக்கத்திற்கு என்னால் முடிந்த உழைப்பையும், நன்கொடையையும் அளித்து வருகிறேன் என்பதே எனக்குப் போதுமான நிறைவு”, என பி.என்.ஆர்.அரங்கநாயகி தெரிவித்தார்.