வை.கலையரசன்
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மறைந்த சு.அறிவுக்கரசு அவர்கள் நினைவு ஆற்றலின் களஞ்சியமாத் திகழ்ந்தவர். தலைசிறந்த இயக்கவாதி, சிங்கம் போல் கர்ச்சிக்கும் பேருரையாளர், பெரியாரியலை பயிற்றுவிப்பதில் தேர்ந்த கோட்பாட்டு விளக்க ஆசிரியர், சிந்தனைகளைத் தூண்டும் சீர்மிகு எழுத்தாளர்.
அவரது ஒவ்வொரு ஆளுமைப் பண்பையும் தனித்தனியே விவாதிக்கும் அளவிற்கு பல்துறை வித்தகர்.
1940 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் கடலூரில் பிறந்தவர். இவருடைய தந்தை வ.சுப்பிரமணியன் சுயமரியாதைக் கொள்கைளில் பற்றுக் கொண்டு வாழ்ந்தவர் – தாயார் தையல் நாயகி ஆவார்.
அவரது அருமைத் தந்தையார் கடலூரில் அக்காலப் பெருமக்கள் அறிந்த சுயமரியாதை வீரணீக்ஷ்ர் “மணிப்பிள்ளை” என்று – அழைக்கப்பட்ட மானமிகு சுப்பிரமணியன் அவர்கள் – தந்தை பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடிநாள் தொண்டர் – தோழர் “நடமாடும் பிரச்சாரகர்” கடலூர் வட்டாரத்தில் அவரது அருஞ்செல்வங்களில் அரிய செல்வம்தான் நம் அறிவுக்கரசு. அவரது குடும்பமே பகுத்தறிவு சுயமரியாதைப் பாதையில் நடைபோட்ட குடும்பம்.
பள்ளிக் கல்வியைக் கடலூரில் செயின் டேவிட் உயர்நிலைப் பள்ளி, மற்றும் தூய தாவீது மேல் நிலைப்பள்ளியில் பயின்றதுடன் சமூகவியலில் முதுகலைப் பட்டத்தையும் எம்.பில்.என்னும் ஆய்வுப் பட்டத்தையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி முடித்து அவர் Group IV – என்ற பொதுப்பணித் தேர்வு (Public Service Commission) எழுதி வெற்றிபெற்று பதவியைப் பெற்ற ஆணையைக் காட்டி அப்பொறுப்பை ஏற்கச் செய்த காலம் முதற்கொண்டு படிப்படியாய் நடந்து, அவரது ஆற்றல், திறமை. உழைப்பால் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் நிரந்த எழுத்தர். பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டர், டெப்டி தாசில்தார், பிறகு தாசில்தார். அதன்பிறகு ஆர்.டி.ஓ. (RDO) அதற்குப் பிறகு D.R.O என்ற வருவாய்த்துறை உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து புதுக்கோட்டையில் ஓய்வு பெற்றபோது, தமிழர் தலைவர் ஆசிரியரை அழைத்தே அவரது பணித் தோழர்களும், நலவிரும்பிகளும் மிகப்பெரிய விழா எடுத்தனர். அது அவரது நேரடிக் கழக வருகைக்கான “பட்டினப் பிரவேச”விழாவாகும்!
வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளராய், தம் தொழிற்சங்கப் பணியைத் தொடங்கி தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் பொதுச் செயலாளராகவும் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். இச்சங்கத்தின் சார்பாக வெளிவந்த ‘பொது ஊழியன்’ என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தவர். பன்னாட்டு தொழிற் சங்கத்தின் (ILO) உறுப்பினராகவும், பொதுத்துறை அலுவலக பன்னாட்டு அமைப்பின் உறுப்பினராகவும், ஆசிய பசிபிக் பகுதிதியின் செயல்பாட்டுக் குழு உறுப்பினராகவும் திகழ்ந்தவர்.
தனிப்பட்ட முறையில் நம் தலைவருக்கு கடலூர் தம்பிகளில் ஒருவராக பள்ளி மாணவப் பருவம் தொட்டே இருந்து, வளர்ந்த ஒருவர். பகுத்தறிவு, சுயமரியாதை, இனஉணர்வு – கொள்கைகளான அறிவு ஆசான் தந்தை பெரியார் தந்த இயக்கக் கொள்கைகளிலிருந்து சற்றும் வழுவாத இலட்சிய வீரர்.
பெரியாரை வாசித்தவர்களாக மட்டுமல்ல – பெரியாரை சுவாசித்த குடும்பம். அரசியலில் திராவிடர் இயக்கம் முனைப்புக் காட்டிய பிறகு இவரது சகோதரர்களில் இரண்டு பேர் . இந்த சமூக இயக்கத்திலிருந்து மாறுபட்டபாதையைத் தேர்வு செய்திருந்தபோதிலும் சுயமரியாதைப் பாதையில் இறுதிவரை வாழ்ந்தவர்கள் ஆவர்!
1950ஆம் ஆண்டு நடைபெற்ற வகுப்புரிமைப் போராட்டப் பேரணியில், இன்றைய கழகத் தலைவரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் பங்கேற்ற பெருமை பெற்றவர். வாழ்நாள் முழுவதும் ஒரே தலைவர் (தந்தை பெரியார்), ஒரே இயக்கம் (திராவிடர் கழகம்), ஒரே கொடி, ஒரே தலைமை என்று இராணுவக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து செயலாற்றி, மறைந்த கழகத்தின் கொள்கை தளபதி. அவர் கட்டுப்பாடுமிக்க கருஞ்சட்டைக் கழகத்தின் இராணுவ வீரர்களில் முன்னணியில் திகழ்ந்தவர்.
பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்ககாலம் தொட்டு பயணித்தவர் – மாவட்டச் செயலாளராக தொடங்கி, மாநில இணைச்செயலாளர், மாநிலத் துணைத் தலைவர், மாநிலத் தலைவர் , இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் (Federatoin of Indian Rationalist’s Association) தென்மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்ந்தவர்.
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், பொதுச்செயலாளர் என்று உயர் பொறுப்புகளில் பணியாற்றி இறுதியாக செயலவைத் தலைவராகத் திகழ்ந்தவர்.
அதற்குக் காரணம் சுயமரியாதைச் சூறாவளியான மானமிகு சுப்பிரமணியன் அவர்கள் மேனாள் இராணுவ வீரர் – கட்டுப்பாட்டுடன் தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதையே தனது வாழ்க்கைப் பாதை என்று இறுதி வரை வாழ்ந்து காட்டி கொள்கை – வெற்றிக்கு எடுத்துக்காட்டாக உயர்ந்தவர்.
அந்தக் குடும்பப் பாரம்பரியப் பெருமையை மேலும் உயர்த்திய லட்சிய வீரர்.
அவர் பள்ளி மாணவராக இருந்தபோதும் தமிழர் தலைவர் ஆசிரியருடன் சற்று தள்ளி – மரியாதையுடன்தான் பழகுவார். காரணம், அவரது கொள்கை – கண்டிப்பு நிறைந்த தந்தையார் “மணிப்பிள்ளைக்கு” நான் வயதை மீறிய நண்பன் போன்று கருதிப் பழகிப் பயன் அடைந்தவன்! என்று கூறுகிறார் ஆசிரியர்.
இவரது குடும்பம் – மறைந்தும் நம் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் அம்மையார் திருமதி. இரஞ்சிதம், மருமகன்கள் முதல் மகன், மகள்கள். பேரப்பிள்ளைகள் எல்லாம் பகுத்தறிவுக் கொள்கை என்ற ஆலமரத்தின் பழுதுபடாத பலம் வாய்ந்த விழுதுகள் என்பதே பெருமைக்குரிய கொள்கைச் செல்வச் சேர்ப்புகள் ஆகும்!
கழக குடும்பங்களைப் பொறுத்தவரை அசையாச் சொத்து கொள்கைச் செல்வம்தானே!
மேடைச் சொற்பொழிவில் தமக்கென தனி இலக்கணத்தை வகுத்து முழங்கியவர். அவரது உரைகள் ஆதாரங்களுடன் அயற்சி ஏற்படுத்தாத முழக்கங்கள். உரத்தக் குரலில் எத்தகைய கடினமான கருத்தையும் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் நகைச்சுவை, கோபம், தேவைக்கேற்ப அளவு கலந்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேசிடுவார். வரலாற்றுச் செய்திகளையும் சமகால அரசியல் சமூக நிகழ்வுகளையும் ஒப்பிட்டு கலந்து உணர்ச்சியுடன் பேசிடுவார். புத்தகங்களை மட்டுமல்ல, மனிதர்களையும் படித்து புத்தகத்தில் படித்த கருத்துகளையும் மனிதர்களிடம் கற்ற பாடங்களையும் ஒரு சேர உரைத்திடுவார். அவருடன் பயணிக்கும்போதும், உரையாடும் போதும் பல புத்தகங்களை படித்த அனுபவம் கிடைக்கும் எங்களுக்கு.
பேச்சில் மட்டுமல்ல, முறையை அதே முறையை எழுத்திலும் கடைப்பிடித்தவர். எழுத்துகளை படிக்கும் போதே அவரது குரல் நம் காதுகளில் ஒலிக்கும் வகையில் இருக்கும் அவரது எழுத்து நடை. எத்தகைய செய்திகளையும் எளிய வாக்கிய அமைப்புகள் மூலம் சுவைபட எழுதும் தனித்துவம் அவருடையது. எந்த சமகால அரசியலுக்கும் இணையான வரலாற்று குழு எடுத்துக்காட்டையும், செய்திகளுக்கு இணையான சமகால நிகழ்வுகளை எடுத்துக்காட்டியும் எழுதுவது ஒரு தனிச் சிறப்பு.
16 வயதிலே கருத்தாழமிக்க கட்டுரைகளை எழுதியவர். அரசுப் பணியாளர் சங்கத்தில் பணியாற்றியபோது சங்க இதழான “பொது ஊழியன்” இதழின் ஆசிரியராக பணியாற்றிய மூத்த இதழாளர்.
‘விடுதலை’, ஏட்டின் நிர்வாக இணை ஆசிரியராகவும், ‘தி மார்டன் ரேஷனலிஸ்ட்’ இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர். மேலும், ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களில் பகுத்தறிவுக் கருத்துகளையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் தனிக்கட்டுரைகளாகவும் தொடர்களாகவும் எழுதியவர். மேலும், சார்வாகன், மதிமன்னன், அரசு, கட்டியக்காரன், பாடினி, செங்கோ, ஆதிரை, அனிச்சம் ஆகிய புனைப் பெயர்களில் எழுதியுள்ள கட்டுரைகள் ஏராளம். கதம்பம் என்னும் பெயரில் அவர் எழுதியுள்ள செய்திக் கட்டுரை தொகுப்புகள் பல் வண்ண கற்களை கோர்த்து உருவாக்கப்பட்டுள்ள அழகுமாலை போல் திகழும்.
இதுவரை சமூகப்புரட்சிக்கான கருத்தியல் பேராயுதங்களாக 31 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை ஒவ்வொன்றும் அறிவுக் களஞ்சியங்கள் – சிந்தனையைத் தூண்டும் தூண்டுகோல்கள், மதமெனும் மனநோயை மாய்க்கும் மருந்துகள்.
. தந்தை பெரியாரை புதியவர்கள் புரிந்து பயன் பெற்று மனிதநேய மாண்பில் திளைக்க தீட்டப்பட்ட எழுத்தோவியங்கள்.
எழுதிய நூல்கள்
1. பெரியார் பன்முகம்
2. பெண்
3. அறிவோம் இவற்றை
4. இந்து ஆத்மா நாம்
5. தென்றலல்ல புயல்
6. புராணங்கள் 18+1
7. அச்சம் + அறியாமை = கடவுள்
8. அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
9. அவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்
10. முட்டையும் தட்டையும்
11. உலகப் பகுத்தறிவாளர்கள்
12. ஆலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்
13. திராவிடர் கழகம் கட்சி அல்ல புரட்சி இயக்கமே
14. அதற்கு வயது இதுவன்று
15. தமிழ் மக்களும் மன்னர்களும்
16. பார்ப்பன இலக்கியங்கள்
17. கடவுள் மறுப்பின் கதை
18. பாரதப் பாத்திரங்கள்
19. இந்துத்துவ அம்பேத்கரா?
20. இருட்டில் திருட்டு ராமன்
21. ஹிந்து மாயை
22. சமஸ்கிருத இந்தி எதிர்ப்பின் வரலாறு
23. காலாவதியான கடவுள்
24. ராம்லீலா
25. அடிமைப்பெண்
26. கீதை வழிகாட்டும் நூலா?
27. மானம் மானுடம் பெரியார்
28. வேத யூத பார்ப்பனியம்
29. அரசியலில் பெரியார்
30. ஸனாதனம் – சமூகம் – ஜனநாயகம்
31. நீதிக்கட்சியும் சமூகநீதியும்